‘இந்திய ஐடி துறையின் முன்னோடிகள்’ - வளர்ச்சிக்கு வித்திட்ட TCS மற்றும் Infosys
இந்திய ஐடி துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடி நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் வெற்றிக்கதை நமக்கான ஊக்கமாக அமைகிறது.
இந்திய தொழில்துறையில் முன்னணி நிறுவனங்களின் பட்டியல் காலத்திற்கு ஏற்ப மாறக்கூடியது. ஒவ்வொரு காலகட்டத்தின் பொருளாதார சூழல், தொழில் போக்கு, வளர்ச்சி வாய்ப்புகளுக்கு ஏற்ப இது அமையும்.
எனினும், இந்திய தொழில் வளர்ச்சி பாதையில் மைல்கற்களாக மின்னும் நிறுவனங்களை பட்டியலிட்டால், நிச்சயம் இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் அதில் இடம்பெறும்.
இந்தியாவின் தலைசிறந்த ஐடி நிறுவனங்கள்
Infosys, TCS ஆகிய இரண்டும் இந்திய ஐடி துறையின் முன்னணி நிறுவனங்கள் மட்டும் அல்ல, இந்திய பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பின் முக்கிய அங்கமாக விளங்குவையும் தான்.
சர்வதேச அளவில் மதிப்பு மிக்க நிறுவனங்களாக திகழ்வதோடு, சராசரி இந்தியர்களின் கனவாகவும், நம்பிக்கையாகவும் இந்நிறுவனங்கள் விளங்குகின்றன. அதோடு, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவங்களின் வளர்ச்சிக்கதைக்கான ஊக்கமாகவும் அமைகின்றன.
இந்திய ஐடி துறையின் பிரதிநிதிகளாக கருதக்கூடிய இந்த நிறுவனங்களின் சிறப்பம்சங்களையும், இந்திய பொருளாதாரத்தில் இவற்றின் இடத்தையும் திரும்பி பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
Infosys - சாமானிய கனவு
இன்று கிட்டத்தட்ட 78 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட பெரும் நிறுவனமான வளர்ந்திருக்கும் இன்போசிஸ் தனிமனிதர்களின் கனவாக துவங்கப்பட்டது என்பதே அதன் தனிச்சிறப்பாகும். இந்தியா மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் அலுவலகங்களையும், ஊழியர்களையும் கொண்டுள்ள இன்போசிஸ் நிறுவனம் துவக்கப்பட்ட விதம் பரவலாக அறியப்பட்டதே.
ஆறுமனிதர்களின் கனவும், பத்தாயிரம் ரூபாயும் தான் அதன் முதலீடு. அந்த பத்தாயிரம் ரூபாயும் நிறுவனரின் மனைவியிடம் இருந்து கடனாக பெற்றது என்பது இன்போசிஸ் வெற்றிக்கதையில் தவறாமல் குறிப்பிடப்படுவதாக இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனம் 1981ல் துவங்கப்பட்டது. இந்தியாவில் மென்பொருள் துறையின் எழுச்சியின் அடையாளமாக பின்னாளில் உருவான இந்நிறுவனம் துவங்கிய போது அதனிடம் சொந்தமாக கம்ப்யூட்டர் கூட இல்லை என்பதும் அதன் வெற்றிக்கதையின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. இன்போசிஸ் எத்தகைய நம்ப முடியாத சூழலில் நிறுவப்பட்டது என்பதை இவற்றின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
தனிமனிதர்கள் கனவு
இந்தியா தாராளமயமாக்கல் எனும் பொருளாதார புரட்சிக்கு தயாராக இன்னும் பத்தாண்டுகள் இருந்த நிலையில், 1980-களில் சொந்தமாக நிறுவனம் துவங்குவது என்பது தனிமனிதர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத பெருங்கனவாக மட்டுமே இருந்தது.
லைசன்ஸ் ராஜின் பிடியில் இருந்த தேசத்தில், நிறுவனம் துவக்குவது என்பது தொழில் பின்னணி கொண்டவர்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் மட்டுமே சாத்தியமாக இருந்தது. முதலீட்டை திரட்டுவது, வங்கிக் கடன் பெறுவதை எல்லாம் மற்றவர்கள் முயற்சிப்பதற்கில்லை எனும் நிலை.
இந்த பின்னணியில் தான், ’பட்னி’ மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நாராயணமூர்த்தியும், நண்பர்களும் இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தை துவக்கினர்.
அப்போது புனே நகரில் அதன் அலுவலகம் அமைந்திருந்தது. இப்போது இந்தியாவின் ஐடி நகரமாக கருதப்படும் பெங்களூருக்கு நிறுவன அலுவலகம் மாற்றப்பட இன்னமும் இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன் பிறகு, இன்போசிஸ் படிப்படியாக வளர்ந்தது ஐடி ஆலமரமானது. அரம்ப காலகட்டத்திலேயே நிறுவனம் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டே வளர்ந்தது.
ஐபிஓ தயக்கம்
ஆக, இன்போசிஸ் வெறும் வெற்றிக்கதை மட்டும் அல்ல- தொலைநோக்கான பார்வையும், அருமையான எண்ணமும் இருந்தால் தனிமனிதர்களும் வர்த்தக நிறுவனத்தை துவக்கி வெற்றி பெறலாம் எனும் நம்பிக்கையின் அடையாளமாகவும் விளங்குகிறது. இன்போசிஸ் வெற்றி பயணத்தில் மென்பொருள் அலை உதவியது என்றாலும், அந்த அலை வீசித்துவங்கியதை உணர்த்தும் நிறுவனமாக இன்போசிஸ் விளங்கியது.
ஆரம்ப வெற்றியில் மட்டும் திளைத்திருக்கலாமல் தொடர்ந்து தொலைநோக்குடன் வளர்ச்சி பாதையில் இன்போசிஸ் பயணித்தது. 1999ல் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அதற்கு முன்னர் 1993ல் உள்நாட்டில் நிறுவனம் பொதுபங்குகளை வெளியிட்டது.
இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் இன்று பங்குச்சந்தையால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் நிலையில், பங்கு வெளியீட்டின் போது இன்போசிஸ் பங்குகளை வாங்குவதில் பலருக்கு தயக்கம் இருந்தது என்பதை நம்ப முடிகிறதா?
இன்போசிஸ் அதற்கு முந்தைய ஆண்டு 9 கோடிக்கும் குறைவாக வருவாய் ஈட்டியிருந்தது. இந்நிலையில், அதன் பங்குகள் 85 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது பொருத்தமானது அல்ல என பலரும் நினைத்தனர். எனவே, இன்போசிஸ் பங்கு வெளியீட்டின் முழு பங்குகளும் வாங்கப்படாமல் போகலாம் எனும் அச்சத்தில் அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்கள் மூலம் எஞ்சிய பங்குகள் வாங்கப்பட்டன.
தலைகீழ் மாற்றம்
ஆனால், இன்போசிஸ் பங்குகள் விரைவிலேயே பங்குச் சந்தை நோக்கர்களால் விரும்பி வாங்கப்படும் வளர்ச்சி பங்காக மாறியது. தொடர்ந்து வளர்ச்சியிலும், விரிவாக்கத்திலும் கவனம் செலுத்தியது மட்டும் அல்ல இதற்கான காரணம். நிர்வாகத்தை பொருத்தவரை இன்போசிஸ் துவகத்தில் இருந்தே சிறந்த நடைமுறைகளை பின்பற்றி முன்மாதிரி நிறுவனம் என பெயர் வாங்கியிருந்தது. இந்த நற்பெயரும் நிறுவன வளர்ச்சிக்கு உதவியது. இன்போசிஸ் தன்னைப்பற்றி பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல் வளர்ந்தது என்பதையும் இங்கு மனதில் கொள்ள வேண்டும்.
சர்வதேச பொருளாதார தேக்க நிலை, டிஜிட்டல்மயமாக்கல் அலை, கோவிட் -19 பெருந்தொற்று என தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு சோதனைகளையும், சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு இன்றளவும் புதுயுக நிறுவனமாக இன்போசிஸ் விளங்குகிறது.
1990-களுக்கு பிறகு, அலையென உருவாகத்துவங்கிய பொறியியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை கனவிற்கான புகலிடமாகவும் இன்போசிஸ் விளங்குகிறது. ஆண்டுதோறும் 20 ஆயிரம் புதியவர்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளும் திறன் கொண்டிருப்பதில் இருந்தே நிறுவனத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.
டாடா குழும விதை
இன்போசிஸ் போலவே இந்திய ஐடி துறையின் அடையாளமாகத் திகழும் இன்னொரு நிறுவனமாக டிசிஎஸ் திகழ்கிறது. இன்போசிஸ் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கப்பட்ட TCS டாடா குழுமம் எனும் வர்த்தகப் பரப்பில் இருந்து கிளைவிட்டது. சராசரி இந்தியர்கள் கம்ப்யூட்டர் பற்றி பரவலாக கேள்விபட்டிராத 1968 ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் டாடா குழுமத்தால் துவங்கப்பட்டதில் இருந்தே இதன் பின்னே உள்ள தொலைநோக்கை புரிந்து கொள்ளலாம்.
1970 -80 களில் கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு மாறுவதற்கும் அதன் தேவையை புரிந்து கொள்ளவும் வர்த்தக நிறுவனங்கள் தயங்கிக் கொண்டிருந்த நிலையில், கம்ப்யூட்டர் தொடர்பான ஆலோசனை மற்றும் சேவைகளை அளிக்கும் நோக்கத்துடன் டிசிஎஸ் துவங்கப்பட்டிருந்தது. (1980 களில் எல்.ஐ.சி நிறுவனத்தில் முதல் முறையாக கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது).
இந்திய வங்கிகளும், வர்த்தகத் துறையும் கம்ப்யூட்டரின் தேவையை மெல்ல புரிந்து கொள்ளத்துவங்கின என்றாலும், இத்துறையில் ஒரு தேசமாக நாம் வாய்ப்பை கோட்டை விடாமல் இருக்க டாடாவின் டிசிஎஸ் உறுதி செய்தது. வெளிநாட்டு நிறுவனங்களையும், பன்னாட்டு நிறுவனங்களையும் இந்திய மென்பொருள் சேவையை நாட வைத்த அவுட்சோர்சிங் அலைக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்த முன்னோடி நிறுவனமாகவும் டிசிஎஸ் அமைகிறது.
முன்னோடி மனிதர்
டிசிஎஸ், டாடா குழுமம் எனும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் அங்கம் என்றாலும், அந்நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்ததும் ஒரு தனிமனித கனவு தான். இந்திய ஐடி துறையின் தந்தை என போற்றப்படும் எப்.சி.கோஹ்லி தான் அந்த முன்னோடி மனிதர்.
1950-களில் டாடா எலெக்ட்ரிக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றத்துவங்கியவர் பல்வேறு நிலைகள் முன்னேறி, 1968ல் ஜே.ஆர்.டி.டாடா கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் டாடா கன்சல்டிங் சர்வீசஸ் எனும் டிசிஎஸ் நிறுவனத்தை வழிநடத்தினார். துவக்கத்தில் வங்கிகள் கம்ப்யூட்டர்மயமாவதற்கு உதவிய டிசிஎஸ் நிறுவனம், இந்திய பொறியாளர்கள் மென்பொருள் சேவை வழங்குவதற்கான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தது.
இங்கிலாந்து கம்ப்யூட்டர் நிறுவனமான பரோஸ் தனது கம்ப்யூட்டரை மாற்றிய ஒவ்வொரு முறையும் எங்களை தொடர்பு கொள்ளும் என எப்.சி.கோஹ்லி ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். எண்ணற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மென்பொருள் சேவையை நாடும் போக்கிற்கான வித்தாகவும் இது அமைந்தது. ஆய்வு பிரிவு, பொறியாளர் பயிற்சி ஆகிய நடவடிக்கைகள் மூலம் டிசிஎஸ் தானும் வளர்ந்து இந்திய மென்பொருள் துறையையும் வளர்த்தெடுத்தது.
பணி வாய்ப்பு
இன்று லட்சக்கணக்கானவர்களை பணி செய்யும் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமாக டிசிஎஸ் வளர்ந்திருக்கிறது. ஆயிரக்கணகான பொறியியல் பட்டதாரிகள் பணி வாய்ப்புக்காக விரும்பி நாடும் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
மேலும், பல நிறுவனங்கள் ஐடி துறையில் இந்திய வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன என்றாலும், அந்த நிறுவனங்களுக்கு வழிகாட்டிய நிறுவனங்களாக டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் அமைகின்றன. ஐடி துறையில் இந்திய தவறவிடாத வாய்ப்புகளின் அடையாமாகவும் இவை திகழ்கின்றன.