மாணவர்களுக்கு டீ, ஸ்நாக்ஸ், வாங்கித் தந்து, +2-ல் 90% தேர்ச்சியை உயர்த்திய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை
மாலை நேரத்தில் கூடுதல் நேர வகுப்பெடுத்து, மாணவர்கள் சோர்ந்து விடாமல் இருக்க டீயும், ஸ்நாக்சும் கொடுத்து உற்சாகப்படுத்தி பன்னிரண்டாம் வகுப்பில் அதிக அளவு தேர்ச்சியை கொண்டு வந்துள்ள சென்னை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி!
சில துறைகளைத் தான் பணி என்று சொல்லாமல் சேவை என்று சொல்லுவோம். அவற்றில் ஒன்று தான் ஆசிரியர் பணி. எழுத்தறிவித்தவன் இறைவன். மாதா, பிதா, குரு, தெய்வம் என உயர்ந்த இடத்தில் உள்ள ஆசிரியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட்டால், களிமண்ணில்கூட நல்ல சிற்பங்களை உருவாக்க முடியும். இதனை தான் செயலால் நிரூபித்து வெற்றி கண்டிருக்கிறார் சென்னை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுவாக தனியார் பள்ளி மாணவர்கள் தான் அதிக மதிப்பெண்கள் எடுப்பர். அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெறுவதே அரிதான விஷயம். இப்படிப்பட்ட சூழலில் 74% இருந்த தன்னுடைய பள்ளி தேர்ச்சி சதவீதத்தை, 90 சதவிகிதமாக உயர்த்திக் காட்டி பலருக்கு வழிகாட்டி ஆகியிருக்கிறார் இவர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான், தலைமை ஆசிரியர் என்ற பதவி உயர்வோடு மேற்கு மாம்பலத்தில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக்கு வந்து சேர்ந்தார் சீதாலட்சுமி. இதற்கு முன் ஏழு முறை தலைமை ஆசிரியை பதவியுயர்வு வேண்டாம் என மறுத்தவர், இம்முறை ஏனோ சம்மதம் சொல்லி பதவி ஏற்றார். அது அப்பள்ளி மாணவர்களின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
464 மாணவ, மாணவியர் படிக்கும் அப்பள்ளி இருபாலர் படிக்கும் பள்ளி. இங்கு அவர் வருவதற்கு முன்னர், ஒழுக்கத்தில், தேர்ச்சி விகிதத்தில் என பலவற்றில் பின் தங்கியிருந்துள்ளது அப்பள்ளி. ஆனால், தான் வந்ததும் தன்னால் மாற்ற இயன்ற அளவு பள்ளியை மாற்ற போராடியிருக்கிறார் சீதாலட்சுமி.
ஆனால், அது தன் ஒரு கையால் தட்டப்பட்ட ஒலியல்ல, பலரது உழைப்பும் அதற்குப் பின்னால் இருக்கிறது என, வெற்றியை அனைவருடனும் பங்கிட்டுக் கொள்கிறார் அவர்.
“போன வருசம் செப்டம்பர்ல தான் இந்த ஸ்கூலுக்கு வந்தேன். அப்போ இங்க நிறைய விசயங்கள் மாத்த வேண்டி இருந்தது. என்னோட முயற்சிக்கு சக ஆசிரியர்கள் பெரிதும் துணையா இருந்தாங்க. பொதுவாவே மாநகராட்சி குறிப்பிட்ட இடைவெளில ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, அரசுப் பள்ளிகளோட தரத்தை உயர்த்துவது பற்றி பேசுவது வழக்கம். அதோடு, அனைத்து அரசு பள்ளிகளிலும் மாலை நேரத்தில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்கிற நடைமுறையும் இருக்கு.
இதற்காக மதிய நேர சத்துணவு மாதிரி, மாலை நேரத்தில் சுண்டல் தரச் சொல்லியும் அரசு உத்தரவு இருக்கு. அந்த மாலை வகுப்பு நேரம் 4.30 முதல் 5.30 வரை இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி என் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் தேவைப்படுவதை உணர்ந்தேன்.
எனது முயற்சிக்கு மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி துணை கல்வி ஆணையர், கல்வி அலுவலர், துணை கல்வி அலுவலர் ஆகியோர் தங்களது ஆதரவையும், ஆலோசனைகளையும் தந்தனர். அதனால் தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று” என்கிறார் சீதாலட்சுமி.
இம்முறை எப்படியும் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தியே தீருவது என இலக்கு நிர்ணயித்த சீதாலட்சுமி, அதற்காக கையாண்ட நடைமுறை மிகவும் எளிமையானது. மாலை வேளையில் 5.30 மணி முதல் 7.30 வரை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நேரத்தை நீடித்தார். ஆனால், அவ்வளவு நேரம் மாணவர்களை பசியோடு வைத்திருக்க அவர் மனம் விரும்பவில்லை.
எனவே, மாணவர்களுக்கு டீயும், ஸ்நாக்ஸ்சும் வாங்கித்தர முடிவு செய்தார்.
ஆனால், அதற்கான பணத்தை எப்படிப் பெறுவது என யோசித்தார். நல்ல செயல் செய்யும் போது, அதற்கான வழிகளும் தானே திறக்கும் தானே. அப்படித்தான், தன்னார்வல தொண்டு நிறுவனம் ஒன்று உதவ முன்வந்தது. அதுபோக தேவைப்பட்ட கூடுதல் தொகையை சீதாலட்சுமியும், சக ஆசிரியர்களும் பகிர்ந்து கொண்டனர். இப்படியாகத் தான் டீயும், சிற்றுண்டியும் வாங்கித் தந்து, மாணவர்களின் மதிப்பெண்களை உயர செய்திருக்கிறார் சீதாலட்சுமி.
இதற்காக அவர்கள் செலவு செய்தது மொத்தம் ரூ.30,000. ஆனால் இது மாணவர்களின் படிப்புக்கு பெரிய உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“பள்ளி முடிந்த பின்னர் மாணவர்கள் மிக சோர்வாகவும், பசி மயக்கத்தில் இருப்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். பள்ளியில் தரப்படும் சுண்டல் இரவு 8 மணி வரை போதுமானதாக இல்லை. இதனால் அவர்களுக்குப் பிடித்தமான எதையாவது சிற்றுண்டியாகத் தர முடிவு செய்தோம். ஆனால், 5.30 மணி தாண்டியும் மாணவர்களைப் பள்ளியில் தங்க வைப்பது எளிதானதாக இல்லை. காரணம் எங்கள் மாணவர்களின் குடும்பச் சூழல்.
”குடிகார தந்தை, பிளவுபட்ட குடும்பம், பார்ட் டைம் வேலை என மாணவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தது. இதையெல்லாம் தாண்டி சவால்களுக்கு இடையே தான் இந்தச் சாதனையை நாங்கள் படைத்துள்ளோம்,” என்கிறார் சீதாலட்சுமி.
பொங்கல் விடுமுறை முடிந்த கையோடு, மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஸ்பெஷ்ல் கிளாஸ் எடுத்துள்ளனர் ஆசிரியர்கள். சுமார் 45 நாட்கள் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்ததன் விளைவாக அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை 90 சதவீதமாக உயர்த்தியிருக்கின்றனர். இதிலும் சில மாணவர்கள் போக்கு காட்டி விட்டதாலேயே 10 சதவீதம் குறைந்து விட்டதாகவும், அவர்களும் ஒத்துழைத்திருந்தால், நிச்சயம் 100 சதவீதம் தேர்ச்சியை காட்டியிருப்போம் என சீதாலட்சுமி கூறுகிறார்.
குடும்பச் சூழல் காரணமாக மாலையில் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்திற்கே சாப்பாடு என்ற பரிதாப நிலை சில மாணவர்களுக்கு. எனவே மாணவர்களுக்கு தினமும் கவுன்சிலிங்க கொடுத்து படிக்க வைத்துள்ளனர்.
“மாணவர்களுக்கு தினமும் கவுன்சிலிங் கொடுப்பது மிகவும் சவாலான விஷயமாக இருந்தது. அதனால் தான் ஸ்பெஸ் கிளாஸ் எடுக்க ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் நிறைய மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் போகப்போக ஆர்வமுடன் வரத்தொடங்கிவிட்டனர்”, என்கிறார் சீதாலட்சுமி.
இந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தலைமை ஆசிரியர் சீதாலட்சுமியை ஒருமுறை தாக்க முற்பட்டவன். ஆனால் இன்று தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு சிஏ படிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான்.
இம்முறை கிடைத்த வெற்றி மூலம், அடுத்தாண்டு இன்னமும் முன்கூட்டியே சிறப்பு வகுப்புகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். நிச்சயம் 100 சதவீதம் வெற்றியை எட்டியே தீருவது என்பதே இவர்களது லட்சியம்.
கல்வி வியாபாரமாகி, ஏழைகளுக்கு எட்டாக்கனியாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், சீதாலட்சுமி போன்ற தலைமை ஆசிரியர்கள் தான் நமது மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரே நம்பிக்கை. இந்த ஆசிரியரை போற்றுவோம்.