ஆபாச வீடியோக்கள்; போதைப் பொருள் வர்த்தகம்; பண மோசடிகள் - இந்தியாவில் தடை நோக்கி நகர்கிறதா Telegram?
டெலிகிராம் ஒரு ‘லைட்’டான டார்க் வெப்’ என்று சொல்லப்படும் அளவிற்கு பல சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அண்மையில் பிரான்ஸ் நாட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்டார் ‘Telegram’ சிஇஓ பவெல் துரோவ். குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்கத் தவறியது, பயனர்களின் தரவுகளை அரசிடம் இருந்து மறைத்து பாதுகாத்தது, டெலிகிராம் மூலம் சட்டவிரோத செயல்களை நடைபெற ஊக்குவிப்பது என்று அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 90 கோடி பயனர்களைக் கொண்ட டெலிகிராமின் சிஇஓ கைது செய்யப்பட்டது உலக அளவில், மிகக் குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பவெல் துரோவுக்கு 5 மில்லியன் யூரோக்களுக்கு நிபந்தனை ஜாமீன் தரப்பட்டாலும், வாரம் இரண்டு முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவுடன், பிரான்ஸில் இருந்து அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதாக பிரான்ஸ் மீது சமூக ஆர்வலர்கள் விமர்சித்தாலும், மறுபக்கம் பல்வேறு நாடுகளின் அரசுகளும் நிர்வாகங்களும் டெலிகிராமுக்கு மூடுவிழா நடத்துவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளன. ‘அந்த அளவுக்கு அச்சுறுத்தல் மிக்கதா டெலிகிராம்?’ என்று கேட்கும்போது, ‘இது ஒரு லைட்டான டார்க் வெப்’ என்ற பதிலும் முன்வைக்கப்படுகிறது.
என்னதான் இருக்கிறது டெலிகிராமில்?
2013 முதல் பயன்பாட்டில் இருக்கும் மெசஞ்சர் செயலியான ‘டெலிகிராம்’, சக போட்டி மெசஞ்சர்களான வாட்ஸ்அப் முதலானவை கொண்டுள்ள அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பதோடு, சிலவற்றில் ‘அதீத’ வசதிகளுடனும் மக்களை ஈர்க்கிறது.
டெலிகிராம் குரூப் சாட்களில் 2 லட்சம் பயனர்கள் வரை ஈடுபடலாம். எந்த விதமான ஃபைல்கள் என்றாலும், தகவல்கள் என்றாலும் நொடிப் பொழுதில் தீயாய் பரவவிடலாம். புதுப் படங்களை சுடச்சுட டவுன்லோடு செய்து பார்க்க, இணைப்புகளை பகிர்வது இங்கே நடக்கும் யாவருக்கும் தெரிந்த, பெரிதாக கண்டுகொள்ளப்படாத குற்றச் செயல்.
குறிப்பாக, சரியான கட்டுப்பாடுகள் இல்லாததால் டீன்களையும் இளைஞர்களையும் எளிதில் தவறான பாதைக்குக் கொண்டு செல்லக் கூடிய ஆபாச வீடியோக்கள் (Porn) அதிக அளவில் புழங்கக் கூடிய இடமாகவும், போதைப் பொருள் பரிமாற்றத்துக்கான வர்த்தகம் நடக்கும் ஆன்லைன் சந்தையாகவும் டெலிகிராம் திகழ்கிறது.
டெலிகிராமின் மற்றொரு முக்கியமான அம்சம் ‘என்கிரிப்ஷன்’. வாட்ஸ்அப் செயலியைப் பொறுத்தவரையில், நம் பரிமாற்றங்கள் அனைத்துமே முழுக்க முழுக்க பெறுநர், அனுப்புநரின் கருவிகளில் மட்டுமே சேமிக்கப்படும். ஆனால், டெலிகிராமில் அந்நிறுவன இணைய சர்வரில் சேமிக்கப்படும். ஒருவேளை, என்கிரிப்ஷன் தேவையெனில் மேனுவலாக மட்டுமே செட் செய்துகொள்ள முடியும். ஆனால், இது க்ரூப்களுக்கு பொருந்தாது.
அதேவேளையில், டெலிகிராம் துணைகொண்டு நடத்தப்படும் எந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து அரசுகளிடம் பகிரப்படுவது இல்லை என்பதுதான் பவெல் துரோவ் கைதுக்குப் பின்னால் உள்ள ‘அரசியல்’. குறிப்பாக, அரச்களுக்கு எதிரான தீவிரவாதம் செழித்தோங்க பாதுகாப்பு அரண் அமைத்துத் தருகிறது டெலிகிராம் என்பதும் மிக முக்கியக் குற்றச்சாட்டு.
இந்தியாவில் அச்சம் ஏன்?
ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் போன்ற பயங்கரவாத அமைப்புகள், இந்தியாவுக்கு எதிராக சதிதிட்டம் தீட்டுவதற்கான, பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கான தளமாக டெலிகிராம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக மக்களிடம் வெறுப்பைத் தூண்டும் வகையில் போலியான வீடியோக்களை உருவாக்கி பரப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்கள் ஆள்பிடிக்கவும் டெல்கிராம் உதவுகிறதாம்.
ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள், சாட்களுக்கு எல்லையில்லா புகலிடம் தருவதால், டெலிகிராம் மூலம் குழந்தைகள் பயன்படுத்தப்படும் ஆபாச வீடியோக்கள் பதிவதும், பகிரப்படுவதும் இந்திய சமூகத்தைக் கவலைகொள்ளச் செய்யும் மற்றொரு முக்கிய அம்சம்.
குறிப்பாக, இந்தியாவைப் பொறுத்தவரையில் நிதி மோசடி செய்வோருக்கான சொர்க்கவாசலாகவே டெலிகிராம் திகழ்கிறது. இங்கே ஆன்லைன் மூலம் நடக்கின்ற பல்லாயிரக்கணக்கான பணமோசடி குற்றச் செயல்களில் பெரும்பாலானவை டெலிகிராம் வாயிலாகவே அரங்கேறுகின்றன.
உலக அளவில் டெலிகிராம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னிலை வகிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
ஒட்டுமொத்தமாக, இந்தியாவில் அரங்கேறும் சைபர் குற்றங்களுக்குப் பின்னால் டெலிகிராம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அனானிமஸ் ஆக முகமிலிகளாகவே சமூக விரோதிகள் வலம்வர டெலிகிராம் வழிவகுப்பதால், அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினர் பல வழக்குகளில் திணறி வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.
டிக் டாக் வழியில் வருமா தடை?
இந்தியாவில் கோடிக்கணக்கான நெட்டிசன்கள் குடிகொண்டிருந்த ‘டிக் டாக்’ 2020-ல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது நினைவு இருக்கலாம். இந்தியாவில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டங்கள், தேச விரோத செயல்களை ஒருங்கிணைப்பதில் டெலிகிராம் பங்கு மிக முக்கியமானது. தற்போது, தேசப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ‘டெலிகிராம்’ செயலிலும் இந்தியாவில் தடை செய்யப்படலாமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
பிரான்ஸில் டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி பவேல் துரோவ் கைதான சில தினங்களிலேயே இந்திய அரசு ‘அலர்ட்’ ஆகிவிட்டது. நிதி மோசடி, போதைப்பொருள் கடத்தல், ஆபாச பகிர்வுகள், சட்ட விரோத செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து குற்றச் செயல்களில் டெலிகிராம் வகித்து வரும் பங்கு குறித்து, அதாவது, இந்தியாவில் டெலிகிராம் செயலி தொடர்புடைய குற்ற வழக்குகள் தொடர்பான தரவுகளைத் திரட்ட உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.
இந்தத் தரவுகளின் அடிப்படையில், டெலிகிராம் மீது தேசப் பாதுகாப்பை முன்வைத்து ‘தடை’ நடவடிக்கை மேற்கொள்ள சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவைப் போலவே பல நாடுகளின் அரசுகளும் இப்போது டெலிகிராமுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆக, ‘டெலிகிராம் செயலியைக் கண்டு அரசுகள் அஞ்சுகின்றனவா?’ என்றால், அதற்கு பதில் ‘இல்லை’ என்று எளிதில் சொல்லிவிட முடியாது.
தேசப் பாதுகாப்பு, சமூக விரோதம் என்ற அடிப்படையில், பல்வேறு நாடுகள் கோரும் தரவுகள், தகவல்களை வாட்ஸ் அப், எக்ஸ், ஃபேஸ்புக் முதலான சமூக ஊடக நிறுவனங்கள் தேவைக் கருதி பகிர்வது உண்டு. ஆனால், அதை டெலிகிராம் செய்யாது. ஏனெனில், கட்டற்ற இணைய சுதந்திரம் என்பதில் டெலிகிராம் உறுதியாக இருக்கிறது. இதுவே, அரசுகளுக்கு அபாயமாக ஆகிறது. அதன் விளைவே, டெலிகிராம் மீதான நடவடிக்கைகளுக்கும் காரணமாக அமைகிறது.
எனவே, கட்டற்ற சுதந்திரம் என்பதும் கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது என்பதை டெலிகிராம் புரிந்துகொள்ளுமா என்ற கேள்வி எழுப்பப்படும் அதேவேளையில், தனிமனித சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் சமரசமின்றி செயலாற்றும் டெலிகிராமுக்கு ஆதரவான குரல்களும் வலுக்கத் தொடங்கியுள்ளன.
Edited by Induja Raghunathan