ஏழை மக்களுக்கு தினமும் 7,000 சூடான சப்பாத்திகளை விநியோகம் செய்யும் தொண்டு நிறுவனம்!
கொல்கத்தாவைச் சேர்ந்த ’அப்னி ரோட்டி’ தினமும் நகரில் இருக்கும் 2,000-க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு உணவளிப்பதுடன் மற்ற பகுதிகளிலும் விரிவடைய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 200 மில்லியன் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொருளாதார ரீதியாக நாடு வளர்ச்சியடைந்து வந்தாலும் பலருக்கு தினசரி உணவு என்பதே எட்டாக் கனியாக உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வறுமையே முக்கியக் காரணமாகக் கருதப்பட்டாலும் உணவு மற்றும் அவற்றை வீணாக்குவது தொடர்புடைய விநியோகச் சங்கிலி முறையாக இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
சுமார் 40 சதவீத காய்கறி உற்பத்தியும் 30 சதவீத தானிய உற்பத்தியும் நுகர்வோர் சந்தையைச் சென்றடைவதில்லை என மதிப்பிடப்படுகிறது.
ஆனால் கொல்கத்தாவைச் சேர்ந்த அரசு சாரா நிறுவனமான ’அப்னி ரோட்டி’ (Apni Roti) கொல்கத்தாவில் இருக்கும் ஏழை மக்களுக்கு நெய்யுடன்கூடிய சூடான சப்பாத்தியும் ஊறுகாயும் கொடுத்து அவர்கள் பசியைப் போக்குகிறது.
இந்த முயற்சி விகாஷ் அகர்வாலால் துவங்கப்பட்டது. ஒரு வேன் மூலம் தினமும் சுமார் 2,000 பேருக்கு உணவளிக்கப்படும் விதத்தில் 7,000 சப்பாத்திகள் விநியோகிக்கப்படுகிறது. இந்த வேனில் ஒரு மணி நேரத்தில் 1,000 சப்பாத்திகளை தயாரிக்கும் திறன் கொண்ட தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
உணவகங்களில் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களை பசியுடன் இருப்போரிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பல அரசு சாரா நிறுவனங்கள் செயல்படுகிறது. ஆனால் இவர்கள் ஃப்ரெஷ்ஷான சூடான உணவை விநியோகிக்கின்றனர். ஏழை மக்களுக்கு சுடச்சுட, சுத்தமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி இந்த முயற்சியைத் துவங்கியதாக ’தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் விகாஷ் குறிப்பிட்டார்.
இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சில சமயங்களில் சப்பாத்தியுடன் இனிப்புகளும் வழங்குகிறது. தற்சமயம் விகாஷின் சொந்த செலவில் மட்டுமே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
”இந்த வேன் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இயங்குவதில்லை. மற்ற ஆறு நாட்களும் காலை 10.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை இயங்குகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
’அப்னி ரோட்டி’ நெட்வொர்க்கை வலுப்படுத்த ’அப்னி ரோட்டி ஸ்குவாட்’ (Apni Roti Squad’) என்கிற வாட்ஸ் அப் குழுவும் உள்ளது. தன்னார்வலர்கள் இணைந்துகொள்ள உதவும் வகையில் சப்பாத்தி விநியோகிக்கப்படும் வேன் இருக்கும் இடம் குறித்த தகவல் இந்தக் குழு வாயிலாக பகிர்ந்துகொள்ளப்படுவதாக ’ஒன் இண்டியா’ குறிப்பிடுகிறது.
நகரில் இருக்கும் குடிசைப்பகுதிகளையும் இணைத்துக்கொள்வதை இக்குழுவினர் இலக்காகக் கொண்டுள்ளனர். கூடுதல் வேன்களை வாங்கவும் பீஹார், ஜார்கண்ட், ஒரிசா ஆகிய பகுதிகளில் இந்த முயற்சியை விரிவுபடுத்தவும் விகாஷ் நிதியுதவியை எதிர்நோக்கியுள்ளார்.
கட்டுரை : THINK CHANGE INDIA