கேரளாவில் அறிமுகமான முதல் பெண் சப்-இன்ஸ்பெக்ட்டர் ரோபோ!
தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் பல செயல்களுக்கு மனிதர்களுக்கு பதிலாக இயந்திரத்தை இயக்கினர். தற்பொழுது இயந்திரத்தையும் தாண்டி மனிதனைப்போல் உரையாடி இதர வேலைகளைச் செய்ய ரோபோக்களை உருவாக்குகின்றனர்.
உணவகம், பெருநிருவனங்களில் ரோபோக்களை பயன்படுத்தும் இன்றைய காலகட்டத்தில் இப்பொழுது காவல்துறையிலும் ரோபோக்கள் அடி எடுத்து வைத்துவிட்டது.
இந்தியாவில் முதல்முதலாக காவல்துறையில் பெண் ரோபோ போலிசை நியமித்துள்ளது கேரள அரசு. இந்த போலிஸ் ரோபோவை பிப்ரவரி 19 ஆம் தேதி கேரள காவல்துறை தலைமையகத்தில் அம்மாநில முதல் அமைச்சர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார்.
இந்த ரோபோவுக்கு கேபி-போட் என பெயர் வைத்து காவல்துறையில் சப் இன்ஸ்பெக்ட்டர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. கேபி-போட்டை சல்யூட் செய்து வரவேற்றார் முதல் அமைச்சர் அதற்கு ரோபோட்டும் அழகாக திரும்ப சல்யூட் செய்து மனித காவல் அதிகாரிபோல் நடந்துக்கொண்டது. இந்த வீடியோ காட்சி இணயதளத்தில் வெளியாகி நெட்டிசங்கள் இடையே பெரும் ஹிட் அடித்துள்ளது.
டிஜிபி லோக்நாத் பெஹரா இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், தொழில்நுட்பத்தை காவல் துறையிலும் இணைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்தது என்றார். மேலும் பேசிய அவர்,
“முதல் போலீஸ் ரோபோட்டை அறிமுகப்படுத்த நினைத்தபோது, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் முன்னேற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டுதான் பெண் ரோபோவை அறிமுகப்படுத்தினோம். மேலும் வரவேற்பறையிலும் பெரும்பாலும் பெண்கள் தான் இருப்பர்,” என்கிறார்.
கேபி-போட்’ செயல்பாடுகள்
இந்த கேபி-போடிற்கு காவல்துறை தலைமையகத்தின் வரவேற்பறையில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட்டின் வேலை வரும் பார்வையாளர்களின் தேவையைக் கேட்டு அதற்கேற்ற துறைக்கு அனுப்பி வைப்பதாகும்.
பார்வையாளர்கள் நேரடியாக ரோபோவிடம் சென்று உரையாடலாம், அதன்மூலம் காவல் அதிகாரிகளை சந்திக்க நியமனம் பெறலாம். மேலும் பார்வையாளர்களுக்கு பார்வையாளர் அடையாள அட்டைகளை வழங்கி அவர்களின் புகார்களையும் பதிவுசெய்துக் கொள்கிறது. மேலும் புதிய புகார் கோப்பை திறந்து வைக்கிறது.
மற்ற அதிகாரிப்போல் கேபி-போட்’டும் தனது மேல் அதிகாரிகளை கண்டறிந்து சல்யூட் வைக்கும். இத்துடன் எதிர்காலத்தில் பாதுகாப்பிற்காக இன்னும் சில சென்சார்களை இதில் இணைக்கவுள்ளனர், அதாவது எரிவாயு சென்சார், முக பாவனை அறிதல் போன்றவற்றை இணைக்கவுள்ளனர்.
மாநில போலீஸ் சைபர் டோம் மற்றும் கொச்சினை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஆசிமோவ்(ASIMOV) இணைந்து இந்த ரோபோவை தயாரித்துள்ளனர்.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்