500-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ள தெலுங்கானா மாற்றுத் திறனாளி பெண்!
போரா ராஜேஸ்வரி பெருமூளை வாத பாதிப்புடன் பிறந்தவர். இதனால் அவரது பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டது. கைகள் அசைவின்றியே இருந்தது. இருப்பினும் இவர் தனது கால் விரல்களால் எழுதினார். சமீபத்தில் இவரது படைப்புகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது.
ஒருவர் தனது லட்சியத்தை எட்டுவதற்கு குறைபாடு ஒருபோதும் தடையாக இருக்காது என்பதை நிரூபித்துள்ளார் தெலுங்கானாவைச் சேர்ந்த முப்பத்தி எட்டு வயதான போரா ராஜேஸ்வரி.
கரீம்நகர் மாவட்டத்தின் சிர்சிலா பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி பெருமூளை வாதம் பாதிப்புடன் பிறந்தார். இதனால் அவரது பேச்சுத் திறன் பாதிக்கப்பட்டது. கைகள் அசைவின்றியே இருந்தது. இவரது பெற்றோர் இவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்த பிறகு இவரால் கால்களை சற்று அசைக்க முடிந்தது. Women’s Web உடன் போராவின் அம்மா பகிர்ந்துகொள்கையில்,
”ராஜேஸ்வரி ஆறு வயது முதலே தனது கால்களால் எழுதுவார். கால் விரல்களால் பென்சிலை இறுகப் பற்றிக்கொள்வார். கால் விரல்களில் ஸ்பூனைப் பிடித்துக்கொண்டு அவராகவே சாப்பிடுவார்,” என்றார்.
ராஜேஸ்வரிக்கு இத்தகைய குறைபாடு இருந்தும் கடந்த 15 ஆண்டுகளில் சிர்சிலா ராஜேஸ்வரி என்கிற புனைப்பெயரில் 500-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியுள்ளார்.
சமீபத்தில் பாடலாசிரியர் சுடலா அசோக் தேஜா ’சுடலா அறக்கட்டளை’ என்கிற தனது அரசு சாரா நிறுவனம் மூலம் ராஜேஸ்வரியின் கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார். ராஜேஸ்வரியின் திறமையை அங்கீகரித்து தெலுங்கானா அரசாங்கம் அவருக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தது.
குறைபாடுடன் பிறந்தார்
ராஜேஸ்வரி எட்டு பேர் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இவர் ஐந்தாவது குழந்தை. குடும்பத்தில் இவர் மட்டுமே இத்தகைய குறைபாட்டுடன் பிறந்தவர். பல் துலக்குவது, தலை சீவுவது, சாப்பிடுவது உள்ளிட்ட அனைத்திற்கும் இவருக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படும் என ’தெலுங்கானா டுடே’ குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய கடினமான சூழலிலும் ராஜேஸ்வரி படிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இது குறித்து ராஜேஸ்வரி கூறும்போது,
”என் உடன்பிறந்தவர்கள் பலர் இருந்ததால் அவர்களில் யாரேனும் ஒருவருடன் பள்ளிக்குச் சென்றேன். ஏழாம் வகுப்பு வரை படித்தேன். நான் பள்ளிக்குச் சென்று திரும்பவும் கழிப்பறை செல்லவும் எனக்கு உதவி தேவைப்பட்டது. மற்றவர்களிடம் உதவி கேட்கமுடியாத நிலையில் இருந்தேன். என்னுடைய சகோதர சகோதரிகள் படிப்பை முடித்துவிட்டு அல்லது இடைநிறுத்தம் செய்துவிட்டு பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியபோது நானும் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்,” என்றார்.
ஆனால் ஜூனியர் கல்லூரி வரை திறந்தநிலை பள்ளியில் படிக்கத் தீர்மானித்தார் என ’தெலுங்கானா டுடே’ தெரிவிக்கிறது.
கவிஞராக உருவானார்
1999-ம் ஆண்டு விவசாயிகள் தற்கொலை குறித்தும் தனி மாநிலமாக உருவாவதற்கான போராட்டம் குறித்தும் கேள்விப்பட்டபோது இவருக்கு கவிதை மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. Women’s Web உடன் தனது எழுத்து குறித்து ராஜேஸ்வரி பகிர்ந்தபோது,
’ஈநாடு’ என்கிற தெலுங்கு நாளிதழில் தற்கொலை குறித்து எழுதத் தொடங்கினேன். இவ்வாறு உயிரைத் துறப்பவர்களிடம் என்னையே உதாரணம் காட்டி கேள்வியெழுப்ப நினைத்தேன். ஒரு ஆசிரியரின் உதவியுடன் ஊடகங்களைத் தொடர்பு கொண்டேன். என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த எனக்கு மூன்று நாட்கள் நேரம் ஒதுக்கப்பட்டது.
ராஜேஸ்வரி சமூகத்தில் அவ்வப்போது நிலவும் பிரச்சனைகள், இயற்கை, வாழ்க்கையின் சவால்கள் போன்றவை குறித்து மட்டும் எழுதவில்லை. அவர் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்தவும் எழுதியுள்ளார். அவர் கூறுகையில்,
“என்னிடம் குறைபாடுகள் இருப்பினும் என்னுடைய திறமையை வெளிப்படுத்தி பிரபலமாகவேண்டும் என விரும்பினேன்,” என தெரிவித்ததாக Women’s Web குறிப்பிட்டுள்ளது.
கட்டுரை : THINK CHANGE INDIA