TNEB - Aadhar Link : மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதில் சந்தேகங்கள்; விளக்கங்கள் இதோ!
மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணுடன் மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கவேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இருந்தும் நுகர்வோர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இதனால் பலர், ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க முன்வருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இதுதொடர்பான கேள்வி பதில்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?
மின் நுகர்வோர் TNEB இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nsc.tnebltd.gov.in/adharupload/ -க்குச் செல்ல வேண்டும். ஆதார் இணைப்புக்கான படிவம் இருக்கும், அதில் உங்கள் TANGEDCO சேவை இணைப்பு எண்ணை பதிவிட்டு ‘ok’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். OTP-யை உள்ளிடுவதன் மூலமாக உங்கள் செல்போன் எண்ணை உறுதிபடுத்த வேண்டும்.
OTP ஐ உள்ளிட்ட பிறகு உங்கள் TANGEDCO கணக்கைச் சரிபார்க்க வேண்டும். அதில் வாடைக்கு குடியிருப்போர், உரிமையாளர் என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் உங்களுக்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். TANGEDCO கணக்குடன் இணைக்கப்பட வேண்டிய உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும். ஆதாரில் உள்ள பெயரை உள்ளிட வேண்டும்.
உங்கள் ஆதார் ஐடியைப் பதிவேற்றிய பிறகு, 'I agree' என்பதை கிளிக் செய்வதன் மூலமாக மின் கட்டண எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும். படிவத்தைச் சமர்ப்பித்து பிறகு, அக்னாலேஜ்மென்ட் ரெசிப்டை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
சந்தேகங்களும்... பதில்களும்...
கேள்வி: வாடகை வீட்டில் உள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாடகைக்கு உள்ள வீட்டின் மின் இணைப்போடு இணைக்க வேண்டுமா?
பதில்: வீட்டின் உரிமையாளர் அனுமதி தந்தால் வாடகை வீட்டில் உள்ள நீங்கள் ஆதார் கார்டை மின் இணைப்புடன் பதிவு செய்துகொள்ள முடியும்.
கேள்வி: ஆதார் இணைத்த பிறகு வாடகைதாரர் வேறு வீட்டிற்கு மாறிவிட்டால் என்ன செய்யவேண்டும்?
பதில்: வாடகைதாரர் மாறும்போது, அவரின் ஆதார் எண்ணை நீக்கிவிட்டு, புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதாரை இணைக்கலாம்.
கேள்வி: மின் இணைப்புடன் வாடகிக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?
பதில்: கண்டிப்பாக மாறாது. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்யமுடியும்.
கேள்வி: என் தந்தை/தாய்/தாத்தா/பாட்டி ஆகியோர் பெயரில் மின் இணைப்பு உள்ளது. ஆனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். நான் எப்படி என் ஆதாரை இணைப்பது?
பதில்: இறந்தவர்களின் பெயரில் மின் இணைப்பு இருந்தால், மின் இணைப்பு எண்ணை யார் பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அவர்களது ஆதார் எண்ணை இணைக்கலாம்.
கேள்வி: நான் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளேன். ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன. நான் எப்படி ஆதாரை இணைப்பது?
பதில்: உங்கள் ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும், எந்த பாதிப்பும் இல்லை.
கேள்வி: ஆதார் எண்ணை இணைத்தால் தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?
பதில்: ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் நேரடியாகச் சென்று மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும்.
கேள்வி: நான் கடை வைத்துள்ளேன். அதன் மின் இணைப்போடு ஆதார் இணைக்க வேண்டுமா? யாரெல்லாம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்?
பதில்: வேண்டாம். வீடு, விசைத்தறி, விவசாயம் மற்றும் குடிசை வீட்டு மின் நுகர்வோர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், மற்றவர்களுக்குத் தேவையில்லை.
கேள்வி: ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுமா?
பதில்: கண்டிப்பாக இல்லை. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பது வதந்தி. யாரும் நம்பவேண்டாம்.
கேள்வி: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க காலகெடு இருக்கிறதா? ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்னவாகும்?
பதில்: ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை. ஆன்லைன் மூலம் நீங்க ஆதாரை இணைக்கலாம், அல்லது மின் அலுவலகத்தில் சென்றும் இணைத்துக்கொள்ளலாம். அல்லது மின்சார வாரியம் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு முகாம்களில் டிசம்பர் 31-ம் தேதி வரை உங்கள் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.