3 லட்சம் முதலீடு; 5 ஆண்டில் ரூ.5 கோடி டர்ன்ஓவர்: திருச்சி ‘ஆர்கானிக்’ நண்பர்களின் வெற்றிக் கதை!
வாய்வழி விளம்பரம் மற்றும் சமூகவலைதளங்கள் மூலமாகவே குறுகிய காலகட்டத்தில் தங்களது ஆர்கானிக் பொருட்கள் விற்பனையில் பன்மடங்கு லாபம் ஈட்டியுள்ளனர் திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள்.
திருச்சியைச் சேர்ந்தவர்கள் பாலாவும், பாலாஜியும். கோவை வேளாண் கல்லூரியில் சீனியர், ஜூனியராக அறிமுகம் ஆனவர்கள். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு இன்று இருவரையும் தொழிலில் பார்ட்னர்கள் ஆக்கியுள்ளது.
இளங்கலை முடித்து மேற்படிப்புக்காக ஐரோப்பா பறந்த பாலா, தன்னுடைய முனைவர் பட்டத்துக்காக ஆர்கானிக் உணவுகள் குறித்த ஆய்வைத் தேர்ந்தெடுத்ததுதான் அவரை இன்று வெற்றிகரமான தொழில்முனைவோர் ஆக்கியிருக்கிறது.
தனது ஆய்வுக்காக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பல விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசியபோது, அவருக்குள் ஆர்கானிக் உணவுகள் குறித்த விழிப்புணர்வும், அதற்கான சந்தை வாய்ப்பு குறித்தும் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது.
“முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி முடிந்ததும் என் அண்ணன் தனக்கு ஆர்கானிக் உணவுகள் வேண்டும் எனக் கேட்டார். அவருக்காக சிறிய அளவில் இயற்கை முறையில் விளைவித்த உணவுப் பொருட்களைக் குறைந்த அளவில் வாங்கிக் கொடுத்தேன். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் கொண்ட, மருத்துவரான என் அண்ணன் ஆர்கானிக் பொருட்கள் மீது காட்டிய ஆர்வத்தைத் தொடர்ந்து இதையே நமது தொழிலாக்கினால் என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தது,” என இந்தத் துறையை தேர்ந்தெடுத்த கதையை விவரிக்கிறார் டாக்டர் பாலா.
தன் படிப்பிற்கேற்க நல்ல வேலை வெளிநாட்டில் கிடைத்த போதும், ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வதையும் தனது தொழிலாக்க முடிவு செய்தார் பாலா. இதில் தனது கல்லூரி நண்பரான பாலாஜியையும் தனது பார்ட்னராக்கிக் கொண்டார். ‘கை நிறைய சம்பளம் தரும் வேலை இருக்கும் போது எதற்காக தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறீர்கள்’ என்ற மற்றவர்களின் அறிவுரையை காதில் போட்டுக் கொள்ளவில்லை இவர்கள் இருவரும்.
அதன் தொடர்ச்சியாக, 'பி&பி ஆர்கானிக்ஸ்' (www.bnborganics.com) நிறுவனத்தை அவர்கள் ஆரம்பித்தனர். ‘வெற்றியோ தோல்வியோ இரண்டாண்டுகள் இதே துறையில் தொடர்ந்து உழைப்பது’ என்பது தான் அப்போது அவர்களுக்குள் போட்டுக் கொண்ட முதல் வாய்வழி ஒப்பந்தம். ஆனால், அவர்கள் நினைத்தபடி தொழில் தொடங்கிய உடனேயே வியாபாரம் சூடு பிடித்துவிடவில்லை.
“முதல்கட்டமாக வெறும் 30 கிலோ இட்லி அரிசி வாங்கி விற்க எங்கள் தொழிலை நாங்கள் தொடங்கினோம். ஆனால், அதை 3 மாதங்களாகியும் எங்களால் விற்க முடியவில்லை. கடைசியில் இரக்கப்பட்டு என் அம்மா தான் அந்த அரிசியை வாங்கினார். இதனால் தொழில் தொடங்கும் முயற்சியில் நாங்கள் தோற்று விட்டதாகவே எங்களைச் சுற்றியுள்ளவர்கள் நினைத்தனர். இருந்தும், எங்கள் ஒப்பந்தப்படி இரண்டு வருடம் எப்படியும் இந்தத் துறையில் போராடிப் பார்த்து விடுவது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதனால் விடாமுயற்சியாக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருந்தோம்,” என தங்களது வெற்றியின் ரகசியம் பகிர்கிறார் பாலா.
எதிர்பார்த்தது போலவே அவர்களது விடாமுயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. ரூ.3 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த இந்த தொழிலில் இதுவரை ரூ.12 லட்சம் வரை தான் முதலீடு செய்துள்ளனர் நிறுவனர்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்து, தற்போது மாத விற்றுமுதல் ரூ.50 லட்சமாக உயர்ந்து, ஆண்டுக்கு சுமார் ரூ.5 முதல் 6 கோடி வரை டர்ன் ஓவர் செய்வதாகத் தெரிவித்தனர்.
தற்போது பிபி ஆர்கானிக்ஸில் பத்து பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலானோர் பெண்கள். விரைவில் திருநங்கைகளையும் வேலைக்கு அமர்த்தும் திட்டம் இருப்பதாக பாலா கூறுகிறார்.
தனியாக கடை வைத்து தங்களது வட்டத்தை சுருக்கிவிடக் கூடாது என்பதாலேயே ஆன்லைனில் வியாபாரத்தை தொடங்கியதாகக் கூறுகிறார் பாலா. தற்போது பிரபல ஆன்லைன் தளங்களான அமேசான் வாயிலாகவும், தங்களது வெப்சைட் மூலமாகவும் ஆர்கானிக் பொருட்களை இவர்கள் விற்று வருகின்றனர்.
ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பொருளின் தரத்தை மாற்றாமல் அப்படியே தருவதே எங்களது வெற்றியின் ரகசியம். பாரம்பரிய அரிசி வகைகளைப் பயன்படுத்தும் போது, அவை சமைப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்த அவசர உலகில் பாரம்பரிய உணவுகளை நாம் பயன்படுத்தாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே, அரிசி மற்றும் சிறுதானியங்களை வைத்து வேல்யூ ஆட்டட் பொருட்களை தயாரித்து விற்கத் தொடங்கினோம்.
“எளிமையாக எப்படி பாரம்பரிய அரிசி வகைகளைப் பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தினோம். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எங்களது வியாபாரமும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து வருகிறது,” என்கிறார் பாலா.
அதிக அரிசி வகைகள், பத்திற்கும் மேற்பட்ட மில்லட், சிறுதானியம் என பாரம்பரிய உணவுப் பொருட்களை அது கிடைக்கும் இடத்தில் இருந்தே நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். அதோடு, ஒவ்வொரு பொருளையும் தரம் சரி பார்த்து, அதற்கென உள்ள ஆய்வகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தி அதன் பின்னரே விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர் பி&பி ஆர்கானிக்ஸில்.
அதனாலேயே தரமான பொருட்களைத் தர முடிவதாகவும், தங்களாது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் கூறுகின்றனர் பாலாவும், பாலாஜியும்.
“நமது பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுத்தாலே, இரும்புச்சத்துக் குறைபாடு, கால்சியம் குறைபாடு, புற்றுநோய் போன்ற பல நோய்களில் இருந்து தப்பிக்க முடியும். வெள்ளைச் சர்க்கைக்குப் பதில், கருப்பட்டி எடுத்துக் கொண்டால் அதில் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சத்து கிடைக்கிறது. பாரம்பரிய அரிசியை எடுத்துக் கொண்டால் ஜிங்க் குறைபாடு வரவே வராது. இப்போதும் கொரோனா, கிராமங்களை அதிகம் தாக்காததற்கு இது தான் காரணம்.
ஆர்கானிக் பொருட்கள் பற்றி முன்பை விட மக்களுக்கு இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாங்கள் மேலும், மேலும் மக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கும் பணியையும் செய்து வருகிறோம். எங்களது ஆர்&டி-யை பலமாக வைத்திருக்கிறோம். அதோடு புதுப்புது பொருட்களை அவ்வப்போது சந்தையில் அறிமுகம் செய்கிறோம். மற்றவர்கள் எங்களை காப்பி அடிப்பதற்குள் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுகிறோம். இதனால் எங்களுக்கு போட்டி இருப்பதில்லை, என்கிறார் பாலா.