Chandrayaan-1, 2 வெற்றிக்குப் பின் இருந்த இரு தமிழர்கள்!
கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்த இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 நேற்று பிற்பகல் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் இந்தியா தனது விண்வெளி ஆய்வில் அடுத்தக் கட்டத்தை அடைய ISRO உழைத்தது. இந்தத் திட்டத்தில் மிகப் பெரிய பங்கை தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் அளித்துள்ளனர். சந்திராயன் 1 மற்றும் 2க்கு தலைமை தாங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை மற்றும் தற்போதய இஸ்ரோவின் தலைவராக இருக்கும் தமிழர் கே சிவன் ஆகியோரின் பங்கு அளப்பரியது.
உலகையே திரும்பிப் பார்க்கவைத்த ‘Chandrayaan' விண்கல உருவாக்கத்தின் பின்னிருந்த அந்த இரண்டு விஞ்ஞானிகளின் பின்புலம் மற்றும் சாதனைகளை பார்ப்போம்.
முன்னாள் சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை:
சந்திராயன் 1 திட்டம் தொடங்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குனராக இருந்தவர்தான் மயில்சாமி அண்ணாதுரை. இவரின் கட்டுப்பாட்டின் கீழ் சந்திராயன் 1 உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து 2008ல் சந்திராயன் 2 திட்டம் இவரின் தலைமையில் கீழ் உருவாக்க முடிவுசெய்யப்பட்டது. ஆனால் சந்திராயன் 2 திட்டம் செயல்பாட்டில் இருக்கும்பொழுதே கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒய்வு பெற்றார் மயில்சாமி அண்ணாதுரை. இதனைத் தொடர்ந்து சிவன் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கோவையை அடுத்த கொத்தவாடி கிராமத்தில் 5 சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்த மயில்சாமி, மாதம் 120 ரூபாய் சம்பாதிக்கும் ஆசிரியரின் மகன். படிப்பில் எப்பொழுதும் முதன்மையில் இருக்கும் இவர் எஸ்எஸ்எல்சி-ல் மாவட்டத்தில் முதல் மாணவராக வந்தார்.
தமிழ் வழிக் கல்வியில் படித்த இவர் 1980ல் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் பி.இ பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து எம்.இ மற்றும் அண்ணா பல்கலகலத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் 1982ல் இஸ்ரோவில் சேர்ந்து 36 வருடமாக அங்கு பல பதவிகளை பெற்று உயர்ந்தவர் மயில்சாமி அண்ணாதுரை.
இஸ்ரோவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய மயில்சாமி, 2005-ம் ஆண்டு இஸ்ரோவின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஆரம்பக் காலங்களில் ஐ.ஆர்.எஸ்.1ஏ, இன்சாட்-2ஏ, இன்சாட்-2பி திட்டங்களில் மேலாளராகவும் 1994-ல் இன்சாட்- 2சி செயற்கைக் கோள் திட்டத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். நிலவுக்கு அனுப்பிய சந்திராயன்-1 மற்றும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ’மங்கல்யான்’ ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைக் கோள்களின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் என்ற பெருமை இவரைச் சேரும். சந்திராயன்-2 திட்டத்திலும் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்.
கட்டுரையாளர், கவிஞர், சிறந்த பேச்சாளர் எனப் பன்முகத்தன்மை அடையாளம் கொண்டவர். அழகு தமிழில் அறிவியலை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பத்மஸ்ரீ விருதையும் சேர்த்து 70க்கும் அதிகமான விருதுகளை தனது விண்வெளி சேவைக்காக பெற்றுள்ளார் இவர். தமிழ்நாட்டின் 10ம் வகுப்புப் புத்தகமும் இவரை பற்றிய பாடத்தைக் கொண்டுள்ளது. இன்று சந்திராயன் வெற்றியை நாம் கொண்டாடினாலும் நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில் பேசிய மயில்சாமி,
"சந்திராயன் தற்போது தனது நீள் வட்டப்பாதையில் சுற்றத் துவங்கியுள்ளது, செம்டெம்பர் 7 ஆம் தேதி தான் நிலவின் தென்துருவத்தில் இறங்கும், அப்படி இறங்கும் போதும் தான் முழுமையான வெற்றி நமக்குக் கிடைக்கும்," என தெரிவித்தார்.
இஸ்ரோவின் தலைவர் கே. சிவன்:
மயிலசாமியை தொடர்ந்து பதவியில் அமர்ந்த சிவன் அவர்கள் சந்திராயன் 2 ஐ விரைவாக முடித்து விண்ணில் செலுத்துவோம் என்று கூறினார். அதற்கேற்ப சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சிவன். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்று எந்தவித பயிற்சி வகுப்புகளும் எடுக்காமல் எம்ஐடியில் பட்டம்பெற்ற குடும்பத்தின் முதல் பட்டதாரி இவர். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் இளநிலை பட்டம் பெற்று, ஐஐஎஸ்சி பெங்களூருவில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 1982ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்தார்.
30 ஆண்டுகளுக்கு மேல் இஸ்ரோவில் இருக்கும் சிவன் ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 போன்ற திட்டங்களில் பணியாற்றியுள்ளார். ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் திட்ட இயக்குனராகவும் இருந்துள்ளார்.
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்தார். இஸ்ரோ தலைவர் பொறுப்புகளுடன் விண்வெளித் துறையின் செயலாளராகவும் விண்வெளி ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இந்தியா ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது. இந்த சாதனையை எட்டுவதில் முக்கியபங்கு வகித்தார் சிவன்.
இன்று சில நாட்கள் தாமதமான சந்திராயன் 2 விண்ணில் செலுத்தத் தலைமைத் தாங்கி இந்தியாவை பெருமை படுத்தியுள்ளார் இவர். இது குறித்து ஊடங்களுக்கு பேட்டியளித்த சிவன்,
"இந்த நாள் வரலாற்றின் முக்கியமான ஒரு நாள். இந்தியா மட்டுமில்லாமல் உலகமே சந்திரயான்2 -ன் வெற்றிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. இனி, அடுத்த மிஷனை நோக்கி நகர்கிறோம். இந்த வருடம் இன்னும் பல முக்கியப் பணிகள் உள்ளன," என தெரிவித்தார்.
இப்படி இஸ்ரோவின் இரண்டு பெரிய சாதனைகளுக்கு பின்பாக தமிழர் இருவர் இருந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கின்றது. தலைமைப் பொறுப்பில் இருந்த இவர்கள் இருவர் மட்டுமின்றி திருநெல்வேலி மஹேந்திரகிரியில் இஸ்ரோவிற்காக உழைக்கும் இன்னும் பல தமிழர்களும் இருக்கிறார்கள். திருநெல்வேலி மஹேந்திரகிரியில் உள்ள ISRO Propulsion Complex (IPRC), தற்போது அனுப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் தொழில்நுட்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.