டெல்லி மெட்ரோ பாலத்தின்கீழ் தற்காலிக பள்ளி அமைத்து பாடம் எடுக்கும் ராஜேஷ்!
இந்தப் பள்ளியில் சுமார் 300 மாணவர்கள் படிக்கின்றனர். ஏழு ஆசிரியர்கள் ஓய்வு நேரத்தில் தன்னார்வலர்களாக இணைந்து வகுப்பெடுக்கின்றனர்.
இந்தியாவில் இன்றளவும் பல குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கப்படாத நிலை உள்ளது. குழந்தைகள் பள்ளியில் சேர ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பல காரணங்களால் குழந்தைகள் கல்வி கற்க இயலாத நிலை காணப்படுகிறது.
இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகள் கல்வி கற்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ராஜேஷ் குமார் ஷர்மா. அவர்கள் வாழ்க்கையில் முன்னேறத் தேவையான அடிப்படை கல்வி வழங்கப்படுவதை உறுதிசெய்கிறார்.
ராஜேஷ் கடந்த 13 ஆண்டுகளாக வகுப்பெடுக்கிறார். நலிந்த பிரிவினைச் சேர்ந்த சுமார் 300 குழந்தைகளுக்கு டெல்லியின் யமுனா நதிக்கரைக்கு அருகே இருக்கும் மெட்ரோ பாலத்தின் கீழ் வகுப்பெடுத்து வருகிறார். ‘The Free School Under the Bridge’ என்கிற இந்தப் பள்ளி இரண்டு ஷிஃப்ட்களாக இயங்குகிறது. காலை 9 முதல் 11 மணி வரை 120 மாணவர்கள் படிக்கின்றனர். மதியம் 2 முதல் 4.30 மணி வரை 180 மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தன்னார்வலர்களாக இணைந்துகொண்டு நான்கு முதல் பதினான்கு வயது வரையிலும் உள்ள மாணவர்களுக்குத் கற்றுக்கொடுக்கின்றனர்.
மற்ற பள்ளிகள் போலல்லாமல் இந்தப் பள்ளி திறந்தவெளியில் எந்தவித கட்டமைப்பு வசதிகளும் இன்றி இயங்குகிறது. ஐந்து இடங்களில் சுவற்றில் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு கரும்பலகையாக பயன்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களுக்கு சாக்பீஸ், டஸ்டர், பேனா, பென்சில் போன்ற அடிப்படை எழுதுபொருட்கள் வழங்கப்படுகிறது. மாணவர்கள் நோட்டுபுத்தகங்களைக் கொண்டு வந்து கார்பெட் விரிக்கப்பட்ட தரையில் அமர்ந்து படிக்கின்றனர்.
இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் உள்ளன. மாணவர்களுக்கு அடிப்படை சுகாதாரம் குறித்தும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் உடனான உரையாடலில் ராஜேஷ் தனது முயற்சிக்குக் கிடைத்த ஆதரவு குறித்து கூறும்போது,
”தற்காலிக பள்ளியை அமைப்பது தொடர்பாக ஆரம்பத்தில் சில அரசு சாரா நிறுவனங்கள் என்னைத் தொடர்பு கொண்டன. ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தால் நான் அனுமதிக்கவில்லை. இவர்களில் யாரும் குழந்தைகளின் கல்வி குறித்தும் அவர்களது எதிர்காலம் குறித்தும் அக்கறை காட்டவில்லை. இந்த முயற்சியை பயன்படுத்தி பணம் ஈட்டுவதிலேயே ஆர்வம் காட்டினர். அவர்களது செயல்பாடுகளுடன் எனது நோக்கம் பொருந்தாத காரணத்தால் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை,” என்றார்.
இந்தப் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் குப்பைபொறுக்குபவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், பிச்சை எடுப்பவர்கள் ஆகியோரின் குழந்தைகள்.
இந்தப் பள்ளியில் இருப்போருக்கு கோடைக்காலத்தில் கடைக்காரர்கள் சிலர் குடிநீர் வழங்கி உதவியதாக ’இந்தியா டுடே’ தெரிவிக்கிறது.
ராஜேஷ் தனது இளம் வயதில் இதே போன்ற சூழலை சந்தித்துள்ளதால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண பள்ளியைத் தொடங்கவேண்டும் என்கிற உந்துதல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இவரது குடும்பத்தின் நிதிநிலை மோசமாக இருந்ததால் இவரால் பி.எஸ்சி பட்டப்படிப்பை முடிக்கமுடியவில்லை. குழந்தைகளுக்கு கல்வி மிகவும் முக்கியம் என்பதை இவர் உணர்ந்திருந்தார்.
ஐந்து பேர் கொண்ட குடும்பத்தில் ராஜேஷ் மட்டுமே வருவாய் ஈட்டுகிறார். அதே பகுதியில் ஒரு சிறு மளிகை கடையை நடத்தி வருகிறார். பள்ளியை நடத்த உதவி வரும் லஷ்மி சந்திரா, ஷ்யாம் மஹ்தோ, ரேகா, சுனிதா, மனீஷா, சேத்தன் ஷர்மா ஆகிய ஆசிரியர்களுக்கு இவர் தற்போது ஆதரவளிக்கவேண்டியுள்ளது. பள்ளி பற்றிய மக்களின் எதிர்வினை குறித்து அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் உடன் பகிர்ந்துகொள்ளும்போது,
“சிலர் எப்போதாவது பள்ளிக்கு வந்து பிஸ்கெட் பாக்கெட்டுகள், பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், பேக் செய்யப்பட்ட உணவுகள் போன்றவற்றை விநியோகிக்கின்றனர். சில இளைஞர்கள் இங்குள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். பாலத்தின் கீழே குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்துகின்றனர். அவர்களும் சமூகத்தில் ஒரு அங்கமாக இருக்கும் உணர்வு இதுபோன்ற தருணங்களில் அவர்களுக்கு ஏற்படும்,” என்றார்.
ராஜேஷ் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வருகையை வருகைப் பதிவேடு கொண்டு கண்காணித்து வருகிறார். மாணவர் ஒருவர் நீண்ட காலமாக வராமல் போனால் அவரது பெற்றோர்களைத் தொடர்பு கொண்டு காரணத்தைக் கேட்டறிகிறார். இந்தப் பள்ளியில் படிக்கும் ஆறு வயது சுனிதா கூறும்போது,
“நான் என் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க விரும்புகிறேன். எனவேதான் தினமும் மதிய நேரத்தில் இங்கு வருகிறேன். சில சமயங்களில் கன மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்வதன் காரணமாக பள்ளி மூடப்படும். இருப்பினும் படிப்பின் மீது எனக்குள்ள ஆர்வம் சற்றும் குறையவில்லை,” என்று தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA