பழங்குடியினக் குழந்தைகளுக்கு படகில் சென்று பாடம் எடுக்கும் கேரள ஆசிரியை!
குன்னதுமலா பகுதியின் அருகாமையில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 மாணவர்களுக்கு ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் கற்றுக்கொடுக்க ஆற்றைக் கடந்து செல்கிறார் இந்த ஆசிரியை.
ஆசிரியர் தினம் கொண்டாடுவது பாடங்களைக் கற்றுக்கொடுப்பதில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவது மட்டுமல்ல. தங்களது தீவிர அர்ப்பணிப்பால் நம் வாழ்வை வளப்படுத்தியவர்களுக்கு மரியாதை செலுத்தும் தினமாகும்.
அத்தகைய ஆசிரியர்களில் ஒருவர்தான் கேஆர் உஷாகுமாரி. இவர் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் அகத்தியமலை உயிரிக்கோளத்தில் உள்ள குன்னதுமலாவில் ‘அகஸ்தா ஈகா அத்யாபிகா வித்யாலயா’ நடத்தி வருகிறார். இந்தப் பள்ளி நாகரீக சமூகத்திற்கு வெகு தொலைவில் உள்ள ஒரு பழங்குடி குடியேற்றத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆசிரியர், தலைமை ஆசிரியர், உதவியாளர், சத்துணவு பொறுப்பாளர் அனைத்தும் இவர் மட்டுமே.
நடைப்பயணம், படகு சவாரி, மலையேற்றம்...
நாங்கள் உஷாகுமாரியைத் தொடர்பு கொண்டு உரையாடிய அன்று கனமழை காரணமாக அவரால் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை. பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனில்லை. வேறு வழியின்றி வீடு திரும்பியுள்ளார். இவர் பள்ளியைச் சென்றடையும் வழியில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. அவர் விவரிக்கும்போது,
“நான் மூன்று விதமாக பயணம் மேற்கொண்டு பள்ளியைச் சென்றடைகிறேன். முதலில் 25 நிமிடங்கள் இரு சக்கர வாகனத்தில் செல்லவேண்டும். நெடுந்தூரம் நடக்கவேண்டியிருப்பதைத் தவிர்க்க சமீபத்தில் இந்த வாகனத்தை வாங்கினேன். கும்பிக்கல் கடவு ஆற்றின் கரையில் வாகனத்தை நிறுத்திவிடுவேன். படகோட்டியின் உதவியுடன் ஆற்றைக் கடப்பேன். பெரும்பாலும் வலுவான காற்றடிக்கும் சமயங்களில் நானும் துடுப்பை இயக்கவேண்டியிருக்கும். படகு சவாரி முடிந்ததும் பள்ளியைச் சென்றடைய சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு குன்னதுமலா மலை வழியாக மலையேற்றம் மேற்கொள்ளவேண்டும்,” என்றார்.
பள்ளிக்குச் சென்று திரும்ப உஷாகுமாரி இரண்டரை மணி நேரம் செலவிடுகிறார். இந்தப் பயணத்தில் நிலச்சரிவு, செப்பனிடப்படாத பாதைகள், தொடர் மழை போன்றவை இருக்கும். இவர் பலமுறை கீழே விழுந்துள்ளார். இவருக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. ஆனால் இந்தப் பிரச்சனைகள் எதுவும் அவருக்கு தடையாக இருக்கவில்லை.
இயற்கையால் தடங்கல்கள் ஏற்படும் நாட்கள் தவிர பள்ளிக்குச் செல்வது தடைபடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். வீடு திரும்பிய பிறகும் பள்ளியின் நிர்வாகப் பணிகளில் மும்முரமாக ஈடுபடுகிறார்.
2002-ம் ஆண்டு முதல் இதே போன்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இரு சக்கர வாகனம் வாங்கியதைத் தவிர இவரது நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
”ஒவ்வொரு மாதமும் எனக்கு சம்பளம் கிடைக்கிறது. சில சமயங்களில் சில மாதங்களுக்கு ஒருமுறை கிடைக்கும். வேறு எந்தவித கூடுதல் சலுகைகளும் கிடைப்பதில்லை,” என்றார்.
சமூக நலன்
சரியான செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்பதும் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என்பதுமே உஷாகுமாரியின் வாழ்நாள் நோக்கமாகும்.
“நான் 1984ம் ஆண்டு சமூக ஆர்வலராக பணியைத் தொடங்கினேன். இதில் மாநிலத்தின் கல்வியறிவுத் திட்டத்தில், குறிப்பாக பழங்குடி மக்களின் கல்வி சார்ந்து பணியாற்றினேன்.”
காவல்துறையில் இணைய விரும்பினேன். PSC தேர்விலும் தேர்ச்சி பெற்றேன். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் இதில் இணைய அனுமதிக்கவில்லை. விரைவில் அம்பூரி கிராம பஞ்சாயத்தின் பல்வேறு திட்டங்களில் பங்களித்தேன்,” என்றார்.
இவர் பழங்குடியினர் நலனுக்காக பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அந்தப் பகுதியின் மோசமான நிலப்பரப்பு காரணமாகவும் காட்டு யானைகள் இருக்கும் அச்சத்திலும் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்பதை ஒரு கணக்கெடுப்பின் மூலம் தெரிந்துகொண்டார். பெற்றோர்களை சம்மதிக்கைவைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். இறுதியாக வீட்டு திண்ணைகளில் தற்காலிகமாக நடத்தப்படும் வகுப்புகளுக்கு குழந்தைகள் வரத் தொடங்கினார்கள்.
நான்கு ஆண்டுகள் தீவிர பிரச்சாரத்திற்குப் பிறகு ஒரு கட்டிடத்தில் பள்ளி அமைக்கப்பட்டது. அகஸ்டா ஈகா அத்யாபிகா வித்யாலயாவில் பழங்குடி குடியேற்றத்தைச் சேர்ந்த 15 குழந்தைகள் ஒன்று முதல் நான்கு வகுப்பு வரையிலும் படிக்கின்றனர். இங்கு உஷாகுமாரியும் மதிய உணவு திட்டத்தில் பணியாற்றும் மற்றொரு பெண்ணும் மட்டுமே பணிபுரிகின்றனர்.
”ஆசிரியராக என்னுடைய வாழ்க்கை நிறைவானதாக இருப்பினும் என்னுடைய பயணம் காரணமாக பல்வேறு ஆபத்துகளை சந்திக்க நேர்கிறது. சம்பளம் தவிர வேறு எதுவும் எனக்குக் கிடைப்பதில்லை. சில நேரங்களில் பள்ளியை நடத்த என்னுடைய சொந்த பணத்தை செலவு செய்கிறேன். அவர்கள் என்னுடைய குழந்தைகள். அவர்களை பராமரிப்பது என்னுடைய கடமை. ஒட்டுமொத்த குடியேற்றமும் என் மீது அன்பு செலுத்துகிறது,” என்றார்.
உழைப்பின் பலன்
2003ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற உஷாகுமாரியின் முதல் பேட்ச் மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த துறையில் சிறப்பாக செயல்படுவதைக் கண்டு உஷாகுமாரி பெருமை கொள்கிறார். இதுவரை பள்ளியில் 200க்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
“ஓருமுறை அரசு அலுவலகம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு என்னுடைய முன்னாள் மாணவர் பணியாற்றுவதைப் பார்த்தேன். அவர் என்னைக் கண்டு உற்சாகமானார். என்னுடைய மாணவர்கள் நல்ல நிலையில் இருப்பதே எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய் வெகுமதியாக கருதுகிறேன்,” என்றார்.
மாணவர்கள் நான்காம் வகுப்பு முடித்ததும் கேரளாவில் உள்ள எந்த ஒரு பள்ளியிலும் அனுமதி கிடைக்கும் அளவிற்கு அவர்களது தனித்திறன் மெருகேற்றப்படுகிறது. இசை, நடனம், கலை, நாடகம், விளையாட்டு என அனைத்து துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளியின் ஒற்றை ஆசிரியராக அவரே தேசியக்கொடியை ஏற்றி உயரப் பறக்கவிடுகிறார். அவர்களது அன்றாட பாடத்தில் கலாச்சாரம், பண்பாடு, மொழி என அனைத்தையும் இணைத்துக்கொள்ள தீவிர முயற்சிகள் எடுத்துக்கொண்டதால் மட்டுமே இது சாத்தியமானது.
குடும்பத்தின் ஆதரவின்றி இவை எதுவும் சாத்தியமாகி இருக்காது என்றார்.
”சில சமயம் பள்ளிக்காக என்னுடைய வீட்டில் இருந்து மளிகை பொருட்களை எடுத்துச் சென்று பயன்படுத்துவேன். என்னுடைய மகனும் ஆசிரியர் தகுதி பெற்றவர். எனக்கு ஏதேனும் அவசர பணி இருக்கும் பட்சத்தில் எனக்கு பதிலாக அவர் என்னுடைய பணியை மேற்கொள்கிறார். ஆசிரியராக பணியாற்றும் என்னுடைய முன்னாள் மாணவர்கள் சிலர் உதவுகின்றனர். இதுவே என்னுடைய கடின உழைப்பின் பலன்,” என்றார்.
ஒரு நாள் இவர் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டாலும் மாணவர்கள் கவலையுடன் அவர் செல்லும் பாதையில் காத்திருக்கின்றனர்.
”நாம் தேர்வு செய்யும் பணி எதுவாக இருப்பினும் அதில் முழுமையான அர்ப்பணிப்புடன் ஈடுபடவேண்டும் என்பதை என்னுடைய அனுபவம் எனக்குக் கற்றுத்தந்தது. என்னுடைய மாணவர்களின் எதிர்காலத்திற்கு நானே பொறுப்பு. அவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட்டால் என்னுடைய பணியை சிறப்பாக செய்ததாகக் கருதுவேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா