Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

#100Unicorns | 'யுனிக்' கதை 08 | Quickr: சினிமா கனவில் தொடங்கி இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் தளத்தை நிறுவிய பிரணய்!

ராஜஸ்தான் சுரங்கங்கள் இடையே வளர்ந்து, வாழ்க்கையில் பல சவால்களை கண்ட பிரணய் சூலே, சினிமா எடுக்கும் ஆசையில் தொழில் வாழ்க்கையை தொடங்கி, இந்தியாவின் மிகப்பெரிய கிளாசிபைட் ஆன்லைன் தளம் Quikr நிறுவி ஸ்டார்ட்-அப் உலகில் முத்திரை பதித்தார்.

#100Unicorns | 'யுனிக்' கதை 08 | Quickr: சினிமா கனவில் தொடங்கி இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் தளத்தை நிறுவிய பிரணய்!

Friday August 19, 2022 , 5 min Read

#100Unicorns | 'யுனிக் கதை 08 | Quikr

க்விக்கர் (Quikr)... ஸ்டார்ட் அப் யோசனையை மனதில் வைத்திருப்பவர்களுக்கு இந்த நிறுவனம் இன்றும் என்றும் மிகப் பெரிய முன்னுதாரணம். ஏன் என்பதற்கு காரணம் தெரிந்துகொள்ளும் முன் க்விக்கர் வரலாறு தெரிந்துகொள்வது அவசியம்.

இணையம் என்ற ஒன்று வந்தபிறகு நாம் பயன்படுத்திய, நமக்குத் தேவைப்படாத ஒரு பொருளை கூட, விற்று காசு பார்க்கலாம். Quikr அதற்கான ஒரு தளம் தான். க்விக்கரில் எந்தப் பொருளை விற்க வேண்டுமென்றாலும் இலவசமாக விளம்பரம் செய்யலாம். அந்தப் பொருளை வாங்க நினைப்பவர்கள் உங்கள் வீடு தேடிவந்து பணத்தை கொடுத்து வாங்கிச் செல்வார்கள். க்விக்கரின் இந்த ஐடியா அதன் இணை நிறுவனர் பிரணய் சூலேவின் எண்ணத்தில் உதித்தது.

Quikr Pranay Chulet

நம்பிக்கை ஒளி: 

பிரணய் சூலே உத்(வேகம்)-க்கு பெயர்போன நபர். இதற்கு இரு சிறு உதாரணம்: ராஜஸ்தானில் சுரங்கங்கள் நிறைந்த பகுதி தரிபா. இந்த சுரங்கங்களில் பணிபுரிபவர்கள் குடும்பத்துடன் சுரங்கங்களை ஒட்டிய பகுதிகளில் தங்கியிருப்பர். இதனால் சுரங்கம் அவர்களுக்கு பழக்கமானக்கதாகவே இருந்தது. சிறுவயதில் இருந்த பிரணய் சூலேவுக்கும் பழக்கமே.

ஒருநாள் சிறுவனாக இருந்த பிரணய், தனியே சுரங்கத்திற்குள் லிஃப்ட் மூலமாக சென்றபோது பழுதாகி நின்றுவிட்டது. பூமிக்குக் கீழே பல அடி ஆழத்தில் இருள் சழ்ந்த லிஃப்டில் மாட்டிக் கொண்டிருந்த பிரணய்க்கு தெரிந்தது ஒரு சிறு வெளிச்சம். சிறுவயதில் எந்த பயமும் கொள்ளாமல், அந்த சிறு வெளிச்சத்தை நம்பிக்கையாகக் கொண்டு காத்திருந்தார்.

அந்த நம்பிக்கை அன்று மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு படிநிலைகளில் பிரணயின் ஓர் அங்கமாகவே தொடர்கிறது. அதனால் தான், சுரங்கத்தில் அன்று சிக்கிக்கொண்ட போது மட்டுமல்ல, இன்று வரை வாழ்நாளில் ஜெயித்துக்கொண்டே உள்ளார்.

பிரணயின் தந்தை தான் அந்த சுரங்கத்தின் மேனேஜர். சுரங்கப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட பள்ளியில்தான் பிரணயின் ஆரம்ப படிப்பு. அரசு சுரங்கம், அரசு நடத்தும் பள்ளி என்றாலும் பல பாடங்களுக்கு ஆசிரியர்களே கிடையாது. என்றாலும் இயற்பியல் போன்ற பாடங்களில் ஆசிரியர்கள் இல்லாமலே நல்ல மார்க் எடுத்தவர் பிரணய்.

அதுமட்டுமில்ல, ஐ.ஐ.டி.யில் சேர கோச்சிங் கிளாஸ் எதுவும் போகாமல் தபால் மூலமே படித்துவெற்றி கண்டவர். இப்படி, ஐ.ஐ.டியில் படிப்பை முடித்த பின், ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் மேலாண்மைப் பட்டம். கல்லூரி காலங்களில் பிரணய்யின் பலமான நம்பிக்கை கல்வி மட்டுமே தன்னை வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்பது. அது நடக்கவும் செய்தது.

தீராத தாகம்: ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்மில் படித்தவர்களின் பெரும்பாலான சாய்ஸான அமெரிக்கா, பிரணய்க்கும் புகலிடம் கொடுத்தது. நல்ல வேலை, நல்ல சம்பளம் என வாழ்க்கையை கழித்துக்கொண்டவருக்கு தனது தீராக்காதலான சினிமாமீது மோகம் ஏற்படத் தொடங்கியது. அந்த மோகத்துக்கு வேகம் கொடுத்தவர், நியூயார்க்கில் ஃபிலிம் மேக்கிங் படிப்பில் சேர்ந்தார்.

ஃபிலிம் மேக்கிங் படித்து முடிக்க, ஸ்கிரிப்ட் எழுதி அதை படமாக்கவும் கையோடு கையாக முயற்சித்தார். பரிச்சயமில்லாத ஹாலிவுட் தளத்தில் அவரின் படத்துக்கு நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை தேடுவதற்கு கைகொடுத்தது craiglist.com என்ற இணையதளம். இந்த தளம் மூலம் நடிகர்களைத் தேர்வு செய்து படத்தை முடித்தவர், தனது வருங்காலம் திரைப்படம் என்று முடிவு செய்து அந்த கனவுடன் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு நியூயார்க்கில் இருந்து இந்தியா திரும்பினார்.

“வேலை செய்துகொண்டிருப்பது மட்டுமே என் பொழுதுபோக்கு” - பிரணய் சூலே

ஐடியா உதித்த தருணம்: இந்திய சினிமா பார்த்து பழக்கம் என்றாலும், சினிமா எடுக்கும் அளவுக்கு இங்கும அவருக்கு யாரையும் தெரியாது. நியூயார்க்கில் தனது முயற்சிக்கு கைகொடுத்த craiglist.com இணையதளம் போல் இங்கு எந்த தளமும் கிடையாது. இதனால் சிரமப்பட்ட பிரணய் சிந்திக்கத் தொடங்கினார்.

craiglist தளம் போன்று ஒன்றை உருவாக்க ஆசைப்பட்டார். சினிமா ஆசையை தாண்டிய ஆசையின் சிந்தனையில் உதித்தது தான் Quikr. அனைத்து விஷயத்திலும் வேகம் காட்டுவது பிரணய் வழக்கம். அதனால் தான் என்னவோ வேகத்தை குறிக்கும் Quikr என்ற சொல்லையே தனது தளத்துக்கு பெயராக வைத்துவிட்டார்.

Quikr Pranay Chulet

Quikr நிறுவனர் பிரணய் சூலே

e-bay-வில் பிரணயுடன் பணிபுரிந்த ஜிபி தாமஸ் என்ற நண்பருடன் இணைந்து கிவிக்கரை தொடங்கினார். பெயர் வைத்ததற்கேற்ப க்விக்கரின் வளர்ச்சியும் வேகமாகவே இருந்தது. 2008-ல் தொடங்கப்பட்ட க்விக்கர், அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 2500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை பெற்று தொடங்கிய சில ஆண்டுகளிலேயே யூனிகார்ன் ஸ்டார்ட்அப் அந்தஸ்து பெற்றது. ஆம், இந்தியாவின் 8-வது யூனிகார்ன்தான் இந்த க்விக்கர்.

இவ்வளவு வேகமாக வளர்ச்சி பெற மற்ற நிறுவனங்களில் இருந்து வித்தியாசம் காண்பித்தது க்விக்கரின் ஓர் அடையாளமாக மாறிப்போனது. க்விக்கர் போலவே அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களிலும் நாம் பொருட்களை வாங்க முடியும். ஆனால், அந்த போர்ட்டல்களில் பொருள்களை தொட்டு பார்த்து வாங்க முடியாது. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்கள் புதிய பொருட்களை விற்பனை செய்பவை.

ஆனால், க்விக்கர் ஏற்கெனவே பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய உதவும் ஒரு தளம். எந்தப் பொருளையும் தொட்டுப் பார்த்து, வாங்கும் பழக்கம் கொண்ட நம் இந்தியர்கள், ஏற்கெனவே உபயோகப்படுத்திய பொருட்களை நிச்சயம் கண்ணால் பார்த்தே வாங்க வேண்டும் என நினைப்பார்கள். இந்த எண்ணத்தை மனதில் கொண்டு வித்தியாசம் காட்டியது க்விக்கர். 

இதனால், பொருளை விற்க நினைப்பவரையும் வாங்க நினைப்பவரையும் ஆன்லைனில் கைகோக்கும் தளமாகவே க்விக்கர் செயல்பட்டது. அதேநேரம், பொருள்களின் விற்பனையை ஆஃப்லைனில் நடக்கச் செய்தது. இதற்கென சேவைக்கட்டணம்கூட க்விக்கர் வசூலிப்பதில்லை. மாறாக, புதிய தொழில் வாய்ப்புகளைக் கண்டறிந்து அதை அந்தந்தத் தொழில் செய்பவர்களுடன் பகிர்ந்து கொள்வது மூலமாகவும், Paid listing மூலமாகமும் மட்டுமே க்விக்கர் வருமானம் ஈட்டியது.

இப்படி தொடங்கிய க்விக்கர், 2015-ல் 1 பில்லியன் டாலர் மதிப்பை கடந்து (இந்திய ரூபாயில் 10,000 கோடி) யூனிகார்ன் அந்தஸ்தத்தை பெற்றது. க்விக்கரின் வேகமான வளர்ச்சிக்கு மற்றொரு காரணம் சின்னச் சின்ன நிறுவனங்கள் பலவற்றை வாங்கியது. கிட்டத்தட்ட 15 ஸ்டார்ட்-அப்’களை கையகப்படுத்தி, Quikr Cars, Quikr Jobs, Quikr Homes, Quikr Bazaar, Quikr Bikes, Quikr Easy என க்விக்கர் 6 முக்கியமான பிரிவுகளில் செயல்படத்துவங்கியது. இந்தப் பிரிவுகளில் அனைத்திலும் ஒவ்வொரு ஊருக்கு தகுந்தது போல் சேவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற வித்தியாசங்களே க்விக்கரின் வெற்றியை சாத்தியப்படுத்தியவை.

“திறமையானவர்களால் சூழப்பட்டது இந்த உலகம். தனி ஒருவரின் சாதனைகளை கூட்டு உழைப்பு எளிதில் ஜெயித்துவிடும். அதனால் தான் என் அணியை போன்றே வெளியில் இருக்கும் திறமைகளையும் நம்புகிறேன். அப்படி திறமையானவர்கள் தயாரிப்புகளையும் வாங்கிக் கொள்கிறேன். இவை நம்மை மேலும் பலமாக்கும்,” - என்பார் பிரணய் சூலே.

சறுக்கலும் ஓட்டமும்: வெற்றி மட்டுமே க்விக்கர் சந்திக்கவில்லை. சறுக்கல்களும் தான். 2015ல் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற க்விக்கர், அடுத்த ஐந்து ஆண்டுகளிலேயே அந்த அந்தஸ்த்தை இழந்தது. தனது முக்கிய முதலீட்டாளரான ஸ்வீடிஷ் நாட்டைச் சேர்ந்த கின்னெவிக் ஏபி 2020-ம் ஆண்டில் தனது முதலீட்டின் நியாயமான மதிப்பை 45 சதவிகிதம் திருத்தியதால் வீழ்ச்சியை சந்தித்தது க்விக்கர்.

Pranay Quikr

மோசடியான நடத்தை புகார்கள் சுமத்தப்பட்டது. வாடகை மற்றும் கார் பிரிவுகளில் உள்ள சில டீலர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தவறான பரிவர்த்தனைகள் செய்தது, கொரோனா லாக்டவுன் சரிவுகள் என அடுத்தடுத்து சந்தித்த சிக்கல்களால் இன்றைய சூழலில் யூனிகார்ன் அந்தஸ்த்தை இழந்து நிற்கிறது Quikr.

"வாழ்க்கையில் எல்லா நல்ல விஷயங்களும் நீங்கள் நினைப்பதை விட அதிக நேரத்தையும் பணத்தையும் எடுக்கும்," - பிரணய் சூலே

வெற்றி, தோல்வி என எவை வந்தாலும் ஒன்று மட்டும் க்விக்கரை சுழல வைத்துக்கொண்டு இருக்கிறது. அது பிரணய் சூலே சிறுவயதில் சுரங்கத்தில் தன்னை காப்பாற்றிக்கொள்ள கண்ட சிறிய ஒளிக்கீற்றோ அல்லது தனது பலமான நம்பிக்கையோ அல்லது தனது வேகமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது பிரணய் சூலே மட்டுமல்ல, அவரின் சிந்தை உழைப்பான க்விக்கரும்.

‘ஃபாரஸ்ட் கம்ப்’, ‘லால் சிங் சத்தா’ என்ற ஹாலிவுட், பாலிவுட் கதாப்பாத்திரங்கள் கொண்ட கதையை சினிமாவாக எடுத்து சாதிக்க நினைத்த பிரணய் சூலே, அவர்கள் இருவரும் ஸ்டார்ட் அப் உலகில் களமிறங்கி ஓடினால் எப்படி சாதித்து இருப்பார்களோ, அதற்கு ஒப்பாக பிரணயும் தன்னை தொழில்முனைவராக நிலைநிறுத்திக் கொண்டார் என்றே சொல்லவேண்டும்.

ஸ்டார்ட் அப் யோசனையை மனதில் கொண்டிருப்பவரா நீங்கள், இப்போது சொல்லுங்கள்... தொழில்முனைவோருக்கு க்விக்கர் இன்றும் என்றும் மிகப்பெரிய உதாரணம்தானே!

கட்டுரை உதவி: ஜெய்

யுனிக் கதைகள் தொடரும்....