#100UNICORNS | ‘யுனிக்’ கதை 25 - Icertis - ‘சாஸ்’ பிரிவில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டிய இருவர்!
ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரைத் தயார் செய்து, அவற்றை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடாமல், மாதந்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதற்குரிய பணத்தை மட்டும் கட்டணமாக பெறுவதே சாஸ் (Software as a Service - SaaS) தொழில்நுட்பம். இப்படியான சாஸ் உலகில் பரிச்சயமான பெயர் Icertis.
#100Unicorns | 'யுனிக் கதை 25 | Icertis
கடந்த யூனிகார்ன் எபிசோட் போல் இந்த அத்தியாயமும் சாஸ் நிறுவனம் பற்றியதே. கடந்த அத்தியாயத்தில் கண்ட 'துருவா' (Druva) நிறுவனத்துக்கும், இப்போது நாம் காணப்போகும் 'ஐசெர்டிஸ்' ( ) நிறுவனத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.
இரண்டுமே சாஸ் யூனிகார்ன் நிறுவனங்கள், இரண்டுமே கிளவுட் தொழில்நுட்பத்தில் செயல்படும் நிறுவனங்கள், இரண்டுமே 2019-ல் யூனிகார்ன் அந்தஸ்த்தை பெற்ற நிறுவனங்கள், இரண்டு நிறுவனங்களுக்கும் தலைமையிடம் அமெரிக்கா. இப்படி பல ஒற்றுமைக்கு மத்தியில் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு, அவற்றின் தயாரிப்புகள் மற்றும் அதன் நிறுவனர்கள்.
ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரைத் தயார் செய்து, அவற்றை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடாமல், மாதந்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதற்குரிய பணத்தை மட்டும் கட்டணமாக பெறுவதே சாஸ் (Software as a Service - SaaS) தொழில்நுட்பம். இப்படியான சாஸ் உலகில் பரிச்சயமான பெயர் Icertis. இந்தியாவின் சில மதிப்புமிக்க சாஸ் யூனிகார்ன் நிறுவனங்களிலும் இதுவும் ஒன்று.
ஐசெர்டிஸ் எப்படியான தயாரிப்பை வழங்குகிறது, எப்படி யூனிகார்ன் அந்தஸ்தை எட்டிப்பிடித்தது என்பதை பார்ப்பதற்கு முன் இருவர் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.
காணாமல் போன கனவு
மோனிஷ் தர்தா - புனேவை அடிப்படையாகக் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க மார்வாடி குடும்பம், ஒர் சிறிய அறை கொண்ட வீடு, அதில் ஒன்பது பேர் குடித்தனம் செய்து வளர்ந்தவர். மார்வாடிகளுக்கே உரித்தான வணிகம், ‘ஜுகாத்’ செய்வது, அதுதான் பிரச்சனைகளை தாங்களே சரி செய்வது, புரிகிற மாதிரி சொல்வதென்றால் ‘பேரம் பேசுவது’, இவற்றையெல்லாம் கற்றுக்கொள்வதே பிரதான பணியாகக் கொண்டு மோனிஷ் தர்தாவின் குழந்தைப் பருவம் புனேவை சுற்றி இருந்தது.
அவரின் தந்தை மெக்கானிக்கல் இன்ஜினியர். வீட்டின் அருகில் ஒரு அறிவியல் கருவிகள் ஆய்வகத்தில் பணிபுரிந்தார். தாயார் ஒரு வங்கியாளர். கல்வி பின்னணியுள்ள குடும்பத்து பையனான மோனிஷுக்கு பஸ் கண்டக்டராக வேண்டும் என்பதே சிறுவயது ஆசை. இதே ஆசை பின்னாளில் டிக்கெட் கலெக்டிங் தொடங்கி விமானியாக வேண்டும் என்ற கனவில் கொண்டுபோய்விட்டது. பெற்றோர்கள் மகனின் கனவுக்கு தடை போடவில்லை என்றாலும், மோனிஷின் விமானி கனவு கைகூடவில்லை. பொறியியல் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போக, அவரின் விமானி கனவு காணாமல் போனது.
சொந்த வீடு என ஓரளவுக்கு செட்டில் ஆன குடும்பம்தான் என்றாலும், கனவை துரத்துவத்துக்கு நன்கொடை கொடுத்து சீட் வாங்கும்நிலையில் மோனிஷின் குடும்பப் பின்னணி இல்லாததால், டிப்ளமோ படிப்பில் சேர்ந்து முதல் மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பு என கியரை மாற்றினார். ஐந்தாவது செமஸ்டருக்குப் பிறகு, கொதிகலன் உற்பத்தி நிறுவனமான தெர்மாக்ஸில் ஆறு மாத இன்டர்ன்ஷிப்பிற்குச் சென்றார். அதன் நிறுவனர் ஒரு சாஃப்ட்வேர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தையும் நடத்திவந்தார்.
ஒருமுறை அந்த சாஃப்ட்வேர் கம்பெனிக்கு சில பைல்களை கொண்டுசென்ற மோனிஷ், அங்குள்ள பணியாளர் உடன் உரையாடிக்கொண்டிருக்க, உரையாடலின் முடிவில் தெர்மாக்ஸின் சாஃப்ட்வேர் பிரிவில் பணியாற்ற மோனிஷுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மெக்கானிக்கல் இன்ஜினியருக்கு சாஃப்ட்வேர் கம்பெனியில் என்ன வேலை என்று நினைக்க வேண்டாம். அந்த சமயத்தில் மோனிஷ் கம்ப்யூட்டர் புரோகிராமிங் குறித்து படித்து கொண்டிருந்தார். அதில் மோனிஷுக்கு இருந்த சிற்றறிவு தெர்மாக்ஸ் சாஃப்ட்வேர் பணி வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. மோனிஷின் தொழில்நுட்பவியலாளர் பயணம் இப்படித்தான் தொடங்கியது.
தெர்மாக்ஸ் உண்மையான கோடிங் அனுபவத்தை கற்றுக்கொடுக்க, சொந்தமாக சாஃப்ட்வேர் உருவாக்கும் அளவுக்கு தேர்ந்தார். சில ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு பறந்து மேற்படிப்பை மேற்கொண்டவர், மீண்டும் புனே திரும்பி தந்தையின் நண்பர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.
அந்த சமயத்தில் புனேயில் உள்ள இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா விற்பனைக் கூட்டத்தின்போது, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான ஒரு நிர்வாகியை அவர் சந்திக்க நேர்ந்தது. மோனிஷின் நிபுணத்துவத்தை புரிந்துகொண்ட அந்த நபர் அவரை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.
இதற்கிடையே, அமெரிக்காவிலிருந்து வந்த நண்பர் ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற அவரது ஆசையை மோனிஷிடம் விதைத்தார். அவர் பெயர் சமீர் போதாஸ்.
இணைந்த கைகள்
சமீர் போதாஸ் - அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கல்லூரிக் கல்வி, நேஷனல் இன்ஸ்ட்ரூமென்ட் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் புரோகிராமர். வார்டன் பிசினஸ் பள்ளியில் எம்பிஏ பட்டம், பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் விண்டோஸ் என்டி குழுமத்திற்கான புரோகிராம் மேனேஜர். இதுதான் சமீரின் சுருக்கமான பின்னணி.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 8 ஆண்டு கால பணி காலத்தில் சமீர் SME பிரிவின் இயக்குநர் தொடங்கி விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு வரை வகித்த பதவிகள் ஏராளம். 1990-களில் அமெரிக்காவின் பீக்கில் இருந்த பைரஸி பிரச்சனைக்கான தீர்வு காண்பதில் தொடங்கி சமீருக்கு டெக் உலகில் அனுபவங்களும் அதிகம்.
2000-ன் தொடக்கத்தில் டாட்காம் உச்சம் பெற, சமீர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறி ஐமாண்டி நிறுவனத்தில் சேர்ந்தார். பிறகு ஜாம்கிராக்கரின் துணைவேந்தராக ஒரு வருடம் பணி, அதன்பின், 2002-ல் திஷா டெக்னாலஜியில் சிஇஓ பணி. சமீரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது திஷா டெக்னாலஜியில் சிஇஓ-வாக பணிபுரிந்த காலகட்டத்தை சொல்லலாம்.
சமீரின் தலைமையில் திஷா டெக்னாலஜியின் வருவாய் ஐந்து மடங்கு அதிகரித்தது. நிறுவனத்தின் மதிப்புகூட, திஷாவை 2004ல் ஆஸ்டெக்சாஃப்ட் (Aztecsoft) நிறுவனம் கைப்பற்றியது. அது அப்படியே 2009-ல் மைண்ட்ட்ரீ (MindTree) நிறுவனத்திடம் கைமாற, சமீர் வேலையை துறந்துவிட்டு இந்தியாவுக்கு விரைந்தார் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு.
அதே எண்ணத்தை நண்பரான மோனிஷிடமும் சேர்க்க, இருவரின் கூட்டணியில் 2009-ல் உருவானதுதான் ஐசெர்டிஸ் (Icertis). முதலில் இருவருக்கும் தொழில் தொடங்க வேண்டும் என்பதே எண்ணம். ஆனால், எந்த மாதிரியான தொழில் என்பதில் சுத்தமாக இருவருக்கும் தெளிவு இல்லை. பணம் சம்பாதிப்பதற்காக அல்ல. மாறாக, ஏதாவது ஒன்றை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையின் பெரிய நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பதே இருவரின் யோசனையில் இருந்தது.
தடம் பதித்த தருணம்
“தொழில்நுட்பத் துறையில் வெற்றி என்பது இரண்டு உத்திகளில் ஒன்றிலிருந்து வருகிறது என்று நான் நம்புகிறேன். ஒன்று புதிய/புதுமையான தொழில்நுட்ப அலையை உருவாக்குங்கள் அல்லது எந்த மாதிரியான அலை உள்ளதோ அதில் சவாரி செய்யுங்கள். தொழில்நுட்ப அலையை உருவாக்குவது கடினம்தான். அந்த கடினங்களை தாண்டித்தான் பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், எலான் மஸ்க் போன்றவர்கள் சாதித்திருக்கிறார்கள்" - சமீர் போதாஸ்.
அந்த நேரத்தில் கிளவுட் துறையில் நடக்கும் விஷயங்கள் குறித்த ஆர்வம் சமீரிடம் அதிகமாக இருந்தது. மைக்ரோசாஃப்ட் ஊழியர் ஒருவருடன் ஒரு விருந்தில் கிளவுட் ஆர்வத்தை முன்னாள் ஊழியரான சமீர் வெளிப்படுத்தினார். ஏனென்றால், அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் கிளவுடில் பெரிய முதலீடுகளைச் செய்துவந்தன. முதலீடுகளுக்கு மத்தியில் மைக்ரோசாப்ட்டுக்கு கிளவுடில் ஒப்பந்த மேலாண்மை தீர்வைத் தேடிக்கொண்டிருந்தது.
சந்தையில் இருக்கும் தீர்வுகள் போதுமானவையாக இல்லை என்பதை சமீரிடம் விளக்கிய அந்த மைக்ரோசாஃப்ட் ஊழியர், “நீங்கள் ஏன் ஒப்பந்த மேலாண்மையில் ஏதாவது உருவாக்கக் கூடாது. மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தில் அதை உருவாக்குங்கள். அப்படி உருவாக்கினால் மைக்ரோசாஃப்ட் உங்களின் முதல் வாடிக்கையாளராக இருக்கும்” என்று உறுதிகொடுக்க, சமீருக்கு இதுகுறித்து பொறிதட்டியது.
உடனே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கான ஒப்பந்த மேலாண்மை தீர்வை உருவாக்கும் முனைப்பில் மோனிஷுடன் சேர்ந்து சமீர், ஐசெர்டிஸை தோற்றுவித்தார். அப்படியாக வணிக நிறுவனங்களுக்கு ஒப்பந்த மேலாண்மை மென்பொருளை வழங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஐசெர்டிஸ் தொழில் உலகில் காலடி எடுத்துவைத்தது.
பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை நிர்வகிப்பதற்கும், இணக்கத்தை உறுதி செய்வதற்கும் மற்றும் ஆபத்தைக் குறைப்பதற்கும் உதவும் வகையில் கிளவுட் அடிப்படையிலான ஒப்பந்த மேலாண்மை மென்பொருள் நிறுவனமே இந்த ஐசெர்டிஸ்.
ஒப்பந்த மேலாண்மை மென்பொருள் என்றால் என்ன?
ஒப்பந்த மேலாண்மை மென்பொருள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களுக்கு வணிக ஒப்பந்தங்களை உருவாக்க, பேச்சுவார்த்தை நடத்த, புதுப்பிக்க மற்றும் சேகரிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் ஆகும். ஒப்பந்த மேலாண்மை மென்பொருளானது, ஒரு நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு ஒப்பந்தத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் ஒரு தவிர்க்க முடியாத கருவியாக செயல்பட்டு வருகிறது.
சொன்னதுபோலவே, மைக்ரோசாஃப்ட் முதல் வாடிக்கையாளராக கைகொடுக்க, ஐசெர்டிஸின் சாம்ராஜ்ஜியம் மெல்ல தொடங்கியது. விரைவாகவே, ஐசெர்டிஸின் பெயரும் புகழும் பரவ, வாடிக்கையாளர் எண்ணிக்கையும் பெருகியது. 2014ம் ஆண்டளவில், ஜான்சன் மற்றும் ஜான்சன், ஜென்பேக்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் பல ஐசெர்டிஸின் வாடிக்கையாளர்களாக மாறின. இன்றளவில் மைக்ரோசாப்ட், ரோச், ஹூண்டாய் ஹாட்டா, கெமோனிக்ஸ் மற்றும் சன்எடிசன் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் ஐசெர்டிஸின் வாடிக்கையாளர்களாக உள்ளன.
“யாருடைய அறிவுரையையும் பெறாதே. ஆனால் அவர்களின் அனுபவங்களைக் கேளுங்கள், அதுதான் சரியான தீர்வுகளைக் கண்டறிவதற்கான திறவுகோல்” - மோனிஷ் தர்தா.
90+ நாடுகளில் உள்ள 40+ மொழிகளில் 5.7 மில்லியன் ஒப்பந்தங்களை நிர்வகிக்கும் ஐசெர்டிஸின் ஒப்பந்த மேலாண்மை இயங்குதளம் Airbus, Cognizant, Daimler, Microsoft மற்றும் Roche போன்ற நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் அதிகரிக்க, அலுவலகங்களும் அதிகரித்தன. இந்நிறுவனத்தின் தலைமையகம் வாஷிங்டனின் பெல்வியூவில் உள்ளது. தற்போது உலகளவில் 12 அலுவலகங்களைக் கொண்டுள்ளது, இதில் இந்தியாவின் புனேயில் ஒரு பொறியியல் அலுவலகம், சிங்கப்பூர் மற்றும் சிட்னியில் அலுவலகங்கள் மற்றும் 3 ஆதரவு மையங்கள் உள்ளன. சமீபத்தில் பல்கேரியாவின் சோபியாவில் புதிய கிளை திறக்கப்பட்டது.
அதேநேரம் முதலீடுகளும் குவிந்தன. ஐசெர்டிஸின் நிறுவனத்தின் வருவாயில் 10 சதவீதத்தை இந்திய சந்தை வழங்குகிறது. 2015ம் ஆண்டு காலத்தில் ஐசெர்டிஸ் தனது முதல் சுற்று நிதியாக 6 மில்லியன் அமெரிக்க டாலரை திரட்டியது. Eight Roads Ventures, Greycroft, Ignition Partners, B Capital Group, Meritech Capital Partners, PremjiInvest ஆகிய நிறுவனங்கள் ஐசெர்டிஸின் முக்கிய முதலீட்டாளர்கள். இதில், 2019ல் PremjiInvest மற்றும் Greycroft ஆகிய நிறுவங்கள் 115 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை குவிக்க, இந்தியாவின் மதிப்புக்கு சாஸ் யூனிகார்ன் என்ற அந்தஸ்த்தை பெற்றது ஐசெர்டிஸ். 2019 வாக்கில், ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்னாக ஐசெர்டிஸ் .
ஐசெர்டிஸ் இப்போது பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
"கடின உழைப்புதான் முக்கியம். கல்வி தரங்கள் அதிகமாக மதிப்பிடப்படுகின்றன. எனினும், விடாமுயற்சி என்பது வாழ்க்கையைப் போலவே தொழில்முனைவிலும் முக்கியமானது. எதையாவது தொடங்கி அதைச் செய்து கொண்டே இருங்கள்; பல காரணிகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்பதால் அதிக சிந்தனை இல்லாமல் ஒரு நேரத்தில் ஒரு படி நகர்த்துவதில் கவனம் செலுத்துங்கள்," - சமீர் போதாஸ்.
சமீர் போதாஸின் இந்த அறிவுரை உண்மைதான். அவர் சொன்னது போல் கடின உழைப்பை கொடுப்பவர்கள் அவர் அடைந்த உயரத்தை விட பல மடங்கு உயரம் எட்ட முடியும் என்பதில் ஐயமில்லை.
யுனிக் கதைகள் தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 24 | Druva: 7 பேரில் தொடங்கி 700 பேர் ஆகிய மா(சா)ஸ் நிறுவனம்!