Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 24 | Druva: 7 பேரில் தொடங்கி 700 பேர் ஆகிய மா(சா)ஸ் நிறுவனம்!

இந்த யூனிகார்ன் எபிசோட் துருவா (Druva) பற்றியதே. ஒரு சாதாரண மனிதர் துருவாவை பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேற விரும்பும் இளம் தொழில்முனைவோர்களுக்கு உத்வேகம் கொடுக்கக் கூடிய ‘துருவா’வின் கதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

#100UNICORNS | ‘யுனிக்’ கதை 24 | Druva: 7 பேரில் தொடங்கி 700 பேர் ஆகிய மா(சா)ஸ் நிறுவனம்!

Sunday May 28, 2023 , 6 min Read

இந்திய ஸ்டார்ட்-அப் பிரிவுக்கு 2019-20 அற்புதமான ஆண்டாக அமைந்தது எனலாம். இந்த ஆண்டுகளில் மட்டும் ஏழு ஸ்டார்ட்அப்'கள் யூனிகார்ன் கிளப்பில் இணைந்தன.

ஒவ்வொரு யூனிகார்னும் தனித்தனி வெற்றிக் கதையாக இருந்தாலும், மென்பொருள் சேவை (SaaS) துறை என்று வரும்போது Zoho, Freshworks, Druva மற்றும் Icertis எனக் குறிப்பிட்டு சொல்லும் வகையில் நிறுவனங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை.

Freshworks; 2018-ல்தான் யூனிகார்ன் எனும் அந்தஸ்தைப் பெற்றது. அதன் தடத்தை பின்பற்றி, அதேநேரம் தனித்துவத்துடன் யூனிகார்ன் கிளப்பை எட்டி பிடித்த ஓர் நிறுவனமே 'துருவா' (Druva).

இந்த யூனிகார்ன் எபிசோட் துருவா (Druva) பற்றியதே. ஒரு சாதாரண மனிதர் துருவாவை பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேற விரும்பும் இளம் தொழில்முனைவோர்களுக்கு உத்வேகம் கொடுக்கக் கூடிய ‘துருவா’வின் கதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும்.

ஒரு நிறுவனத்துக்குத் தேவையான சாஃப்ட்வேரைத் தயார் செய்து, அவற்றை அந்த நிறுவனத்திடம் விற்றுவிடாமல், மாதந்தோறும் எவ்வளவுக்கு பயன்படுத்துகிறார்களோ அதற்குரிய பணத்தை மட்டும் கட்டணமாக பெறுவதே சாஸ் (Software as a Service - SaaS) தொழில்நுட்பம்.

druva unicorn

இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற முதல் இந்திய நிறுவனம் ’ஃப்ரெஷ்டெஸ்க் என்றால், இரண்டாவது நிறுவனம் துருவா ஆகும். ஆனால், துருவாவின் ஆரம்பக்கட்டம் சாஸ் தொழில்நுட்பத்தை பின்பற்றியதாக இல்லை.

Druva உருவாகியது எப்படி?

ஜஸ்ப்ரீத் சிங், மிலிந்த் போராடே மற்றும் ரமணி கோதண்டராமன் ஆகியோர் உழைப்பில் 2008-ல் தொடங்கப்பட்ட துருவாவின் நோக்கம், தரவுப் பாதுகாப்பு அதாவது, டேட்டா பாதுகாப்பு. தரவுகளை எளிமையாகவும் செலவு குறைந்ததாகவும் நிர்வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொழில்நுட்பத் துறையில் அடியெடுத்து வைத்தது துருவா.

இதற்கு அச்சாரமிட்டது ஜஸ்ப்ரீத் சிங், மிலிந்த் போராடே கூட்டணி. ஐஐடி கவுகாத்தி பட்டதாரியான ஜஸ்ப்ரீத் சிங்க்கும், ஐஐடி பாம்பே பட்டதாரியான மிலிந்த் போராடேவுக்கும் உள்ள ஒற்றுமை இருவரின் தந்தையும் இந்தியாவை பாதுகாக்கும் பணியில் இருந்தவர்கள். போராடேவின் தந்தை ஒரு ராணுவ பொறியாளர். ஜஸ்ப்ரீத் சிங்கின் தந்தையோ விமானப்படை அதிகாரி.

ஒற்றுமைகள் இருந்தாலும், இருவரும் இருவேறு துருவங்களாக தொழில்நுட்பத் துறைகளில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். இருவரையும் இணைத்தது அவர்களுக்கு நிறுவனத்தில் கொடுக்கப்பட்ட புராஜெக்ட். அப்படியாக இருவரும் அறிமுகமான சமயத்தில் போராடே, டேட்டா மேனேஜ்மென்ட் நிறுவனமான வெரிடாஸ் சாப்ட்வேரில் முன்னணி ஊழியராக இருந்தார். பிரெஞ்சு ஸ்டார்ட்அப் ஒன்றில் பணியாற்றி கொண்டிருந்த ஜஸ்ப்ரீத் சிங்கை வெரிடாஸில் ஊழியராக்கியதும் போராடேதான். அங்குதான் ரமணி கோதண்டராமன் பணியாற்றியதால் இயல்பாக மூவருக்குள்ளும் நட்பு உருவானது. நட்பு பிற்காலத்தில் தொழில்முனைவோர் ஆகும் என்று அவர்கள் அப்போது நினைத்திருக்கவில்லை.

அப்போது மட்டுமல்ல, சிறுவயதிலும் சரி, கல்லூரி படித்துக்கொண்டிருந்த போதும் சரி அவர்கள் அப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை. அதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது வெரிடாஸ் - ஸிமான்டெக் நிறுவனங்களின் இணைப்பு. 2005-ல் இந்த இரு நிறுவனங்களும் இணைந்தன. புதிய நிர்வாகம் குறித்த அச்சத்தினால் 11 ஆண்டுகள் பணியாற்றிய வெரிடாஸ் உடனான உறவை முறித்துக்கொண்டார் மிலிந்த் போராடே. வெளியேற பின் வழக்கமான ஒரு வேலைக்கு மீண்டும் போக விரும்பாத அவர், ஏன் தானே சொந்தமாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கக் கூடாது என்ற சிந்தனை பொறி தட்டியது.

தனக்கு உறுதுணையாக ஜஸ்ப்ரீத்தையும் ரமணியையும் அழைத்துக்கொண்டு மூவரும் சேர்ந்து புனேவை தலைமையிடமாக கொண்டு தொடங்கியதே துருவா.

Druva founders

துருவாவின் ஐடியா

2007-ல் பேரிடர் மீட்பு பற்றியான விவாதத்தின்போது மீட்பு பணிக்கான தரவுகள் அதில் முக்கிய அங்கம் வகித்தது. தரவு (டேட்டா) பாதுகாப்பு என்பது அச்சமயத்தில் கேள்விக்குறியாக இருந்தன. பாதுகாப்பு என்றாலே antivirus எனப்படும் வைரஸ் தடுப்பு அப்போது பிரதானமாக இருந்தன. ஆனால், தரவு பாதுகாப்பு? தரவு பாதுகாப்பு என்பது பேக்அப் பற்றியது.

அப்போதிருந்த தொழில்நுட்ப உலகில் இதற்கான பிசினெஸும் பெரிதாக இல்லை. தொழில்நுட்பத்தில் பெரிய ஜாம்பவானாக இருந்த நிறுவனங்களுக்கும் டேட்டா பாதுகாப்பின் இயக்கம் பற்றியும் சரியாக புரிந்து கொண்டிருக்கவில்லை.

“தகவல் தொழில்நுட்ப தொழில் துறை வளர்ந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் பல ஆலோசனை நிறுவனங்களே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. ஆனால், தயாரிப்பு ரீதியான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இல்லை என்பது எங்களின் தேடலில் உணரவைத்தது. பெரிய நிறுவனமோ, சிறிய நிறுவனமோ எல்லாவற்றுக்கும் முக்கியமான தகவல்கள் தொகுப்புகள் இருந்தன. ஆனால், தரவு மீட்புக்காக அந்த நிறுவனங்கள் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்பது அப்போதைய உண்மை" - மிலிந்த் போரோடே ஒருமுறை துருவா எப்படித் தொடங்கியது என்பதை வெளிப்படுத்திய வார்த்தைகள்.

மொபைல் போன் வருகையால் கம்ப்யூட்டர் பிசியின் புகழ் மங்கத் தொடங்கிய அந்த நேரத்தில் தரவு பாதுகாப்பு மற்றும் மீட்பு அவசிய தேவையாக மாறத் தொடங்கியது. இதைப் புரிந்துகொண்ட துருவா டீம் டேட்டாவை நிர்வகிப்பதற்கான ஒரு தீர்வாக லோக்கல் ஹார்டு டிஸ்க்கில் இருந்து தகவல்களை நகல் எடுத்து அதனை இன்னொரு கம்ப்யூட்டருக்கு இணையதளம் உதவியுடன் அனுப்பும் ஒரு கெர்னல் டிரைவரை (kernel driver) 30 லட்சம் முதலீட்டில் உருவாக்கியது.

வெற்றிகரமாக, துருவாவின் முதல் தயாரிப்பு வெளிவந்தாலும் சந்தையின் தேவை வேறாக இருந்தது. சர்வரில் இருந்துத் தகவல்களை மீட்பதைவிட, லேப்டாப் போன்ற தினசரி பணியாற்றும் ஹார்டுவேரில் இருந்து தகவல்களை மீட்பதே அப்போதைய சந்தையின் தேவையாக இருந்தது. இதற்கேற்ப சிறிய மாற்றங்களை செய்துகொண்டு புதிய தயாரிப்பை உருவாக்க உழைத்தனர்.

“அந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. எனினும், நாங்கள் ஒன்றிணைந்திருந்தோம். லேப்டாப்பில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும் ஒரு தயாரிப்பை உருவாக்குவது குறித்து நாங்கள் வெவ்வேறு வழிகளில் பணியாற்றத் தொடங்கினோம்” - போரோடே.

உழைப்புக்கேற்ற பலனாக உலகளாவிய நிறுவனங்களுக்கான மென்பொருளாக 2009-ல் அத்தயாரிப்பு சந்தைக்கு வந்தது. அதன் தரம் சிறப்பாக, நாசா உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் ஆரம்பகால வாடிக்கையாளர்களில் ஒருவராக மாறியது. கொஞ்சம், கொஞ்சமாக சிறிய ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கும், அலுவலக வாடகை, சொந்த செலவுகள் ஆகியவற்றை ஈடுகட்டவும் அந்த ஆர்டர்கள் போதுமானதாக இருந்தன. 

2009-ல் கோடையின் தொடக்க சமயம் அது. யாரும் எதிர்பாராத அந்த நேரத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 1,00,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆர்டரை துருவாவுக்கு வழங்கியது. இது அவர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த தருணம். அப்போதில் இருந்து அவர்களின் வளர்ச்சி முன்னோக்கியே இருந்தது எனலாம்.

ஆம், அதன்பின் எந்த சரிவையும் துருவா சந்திக்கவில்லை. சில மாதங்களிலேயே நான்கு பெரிய நிதி நிறுவனங்கள் துருவாவின் வாடிக்கையாளர்களாக மாறின. விரைவாகவே வருவாயும் அதிகரித்தன. களமும் மாறியது. பயனர்கள் மொபைல் சாதனங்களுக்கு மாறியதால், பேக்அப் என்பது முக்கியமான அங்கமாக மாறியது.

2010-ல் Sequoia-விடம் 2.5 மில்லியன் அளவுக்கு நிதியுதவியும் கிடைக்க, லேப்டாப் தகவல்களை மீட்டுக் கொடுப்பதில் இருந்து மொபைல்போன் தகவல்களை மீட்டுக் கொடுப்பதிலும் களம் இறங்கியது துருவா. 2012-ல் அடுத்த கியரை மாற்றியது. 2012-ல் துருவா செய்த இரண்டு முக்கிய மாற்றங்கள் அதன் இன்றைய நிலைக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.

ஒன்று, நிறுவனத்தின் தலைமையகத்தை புனேவில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள சன்னிவேலுக்கு மாற்றியது. தகவல் தொழில்நுட்ப உலகில் சிலிக்கான் வேலியின் பங்கு இந்த இடமாற்றத்துக்கு முக்கிய க்காரணம். அதேபோல், மற்றொரு காரணம், துருவா எடுத்த இரண்டாவது மாற்றம். அதுவரை, துருவாவின் தயாரிப்பு பதிவிறக்கம் செய்யப்பட்டு கம்ப்யூட்டரில் நிறுவப்படும் ஒரு மென்பொருளாக இருந்தது. 2012-ல் இதில் மாற்றத்தை கொண்டுவந்து கிளவுட் அடிப்படை அடிப்படையிலான தயாரிப்பாக வெளிவந்தது.

druva team

கிளவுட் தொழில்நுட்பம்

இதனை எளிய முறையில் குறிப்பிட வேண்டுமென்றால், நாம் கணினி பயன்படுத்தும்போது டேட்டாக்களை ஹார்டு டிஸ்க் அல்லது பென் ட்ரைவ்வில் சேகரித்து வைத்துகொள்வோம். இதுமாதிரியான எக்ஸ்ட்ரா பொருள் எதுவும் இல்லாமல், இன்டர்நெட்டை பயன்படுத்தி டேட்டாக்களை சேகரித்து வைத்துகொள்ள பயன்படும் ஒரு தொழில்நுட்பம்தான் இந்த கிளவுட் தொழில்நுட்பம்.

“விரைவான கண்டுபிடிப்புகள், தேவைக்கேற்ப அளவிடுதல், வலுவான பாதுகாப்பு மற்றும் கம்ப்யூட் பவர் ஆகியவற்றுக்கான இன்றைய தேவைகளுக்கு ஏற்ப ஒரே ஒரு தொழில்நுட்பம் மட்டுமே உள்ளது - அது கிளவுட்,” - துருவா CEO ஜஸ்பிரீத் சிங்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் மென்பொருளை ஆன்லைனில் லாக் இன் செய்து தங்கள் தகவல்களை நிர்வகிக்கும் வகையில் துருவா தனது தயாரிப்புகளை மாற்றியது. கிளவுட் அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு அமெரிக்க சந்தையில் வாடிக்கையாளர்களுக்கான அணுகல் இந்தியாவை விட மிகவும் எளிதாக இருந்தது.

இக்காரணமும் சிலிக்கான் வேலியை நோக்கி துருவாவை நகரவைத்தது. இதே ஆண்டு, சாஸ் (Software as a Service - SaaS) தொழில்நுட்பத்தின் வாயிலாக கிளவுட் சாஸ் நிறுவனமாக மறுபிறவி எடுத்து தங்களின் தயாரிப்புகளை விற்க ஆரம்பித்தது. இதன்பின் துருவாவின் வளர்ச்சி எட்ட முடியாத உயரத்தில் சென்றது.

ஜப்பான் மற்றும் ஜெர்மனியில் துணை நிறுவனங்களை நிறுவியது மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் கிளை அலுவலகங்களைத் திறந்தது என துருவா வளர்ச்சி கண்டுவருகிறது. துருவா இதுவரை 328 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இதன் முக்கிய முதலீட்டாளர்கள் Sequoia Capital, Viking Global Investors, Tenaya Capital, Riverwood Capital மற்றும் Nexus Partners ஆகும்.

2019-ல் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹெட்ஜ் ஃபண்ட் வைக்கிங் குளோபல் இன்வெஸ்டர்ஸ் 130 மில்லியன் டாலர் நிதியுதவி செய்ய இந்தியாவின் இரண்டாவது SaaS ஸ்டார்ட்அப் யூனிகார்ன் ஆனது துருவா.

அதன் வாடிக்கையாளர்களில் சுமார் 65% அமெரிக்காவிலும், 25% ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கிலும், 10% ஆசியா பசிபிக் பிராந்தியத்திலும் உள்ளனர். இதன் மூலம் துருவாவுக்கு உலகளாவிய பிராண்ட் இமேஜ் கிடைத்துள்ளது மட்டுமில்லாமல் 600-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் தரவுகளை பாதுகாக்க துருவாவை நம்பியுள்ளனர். இவற்றில், Flex, Hitachi, Live Nation, Marriott மற்றும் Pfizer போன்ற நிறுவனங்கள் முக்கியமானவை.

தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆலோசனை நிறுவனமான கார்ட்னரின் கூற்றுப்படி, டேட்டா பாதுகாப்பு என்பது 650 மில்லியன் டாலருக்கும் அதிகம் புழங்கும் சந்தையாகும். இது ஆண்டுக்கு 10% வளர்ந்து வருகிறது. இத்துறையில் மிகப்பெரிய பங்களிப்பாக HP இருந்தாலும் அவர்களின் தயாரிப்பு 13 ஆண்டுகள் பழமையானது. அதனால் வருவாய் குறைந்து வருகிறது. இப்படியான நேரத்தில்தான் இந்த சந்தையில் துருவா நுழைந்து தனி சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்து வருகிறது.

Druva Founder and CEO Jaspreet Singh

Druva Founder and CEO Jaspreet Singh

2025-ம் ஆண்டிற்குள், 80 சதவீத நிறுவனங்கள் முற்றிலும் கிளவுட் டேட்டா பாதுகாப்பை நோக்கி நகரும் என்று கார்ட்னர் நிறுவனம் கணித்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் துருவாவின் எதிர்காலம் இப்போது இருக்கும் நிலையை விடவும் உச்சத்தை தொடும் என்பதில் ஐயமில்லை.

துருவாவை ஜஸ்ப்ரீத் சிங் இன்னும் வளர்ந்து வரும் ஒரு சிறிய நிறுவனம் என்று அழைக்கிறார். ஆம், வருங்காலத்தின் தேவைகள் (மேலே சொன்ன) கார்ட்னர் கூற்றுபோல் அமைந்தால், புனேவில் 7 பேரில் தொடங்கி உலகம் முழுவதும் 700 பேர் பணியாற்றும் துருவா ஒரு சிறிய நிறுவனமாகவே இருக்கும். ஆனால் அதன் சேவை பெரியதாக அமையும்.