#100Unicorns | ‘யுனிக்’ கதை 20 - Swiggy: உணவும் பணியும் நல்கும் ஸ்ரீஹர்ஷா டீம் கட்டிய கோட்டை!
ஒரு பிசினஸ் என்பதை தாண்டி, பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் ஒரு கோட்டையாக உருவெடுத்து, ஸ்டார்ட் அப் வரலாற்றில் புரட்சி செய்த ‘ஸ்விக்கி’ நிறுவனத்தின் வெற்றிக் கதையே இந்த யூனிகார்ன் எபிசோட்.
#100Unicorns | ‘யுனிக்’ கதை 20 | Swiggy
ஒவ்வொரு தொழில்முனைவோரின் பயணமும் நிறைய ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வித்தியாசமாக இருக்கும். ஆனால், எல்லோரையும் பிணைப்பது அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு உள்ள மனப்பான்மை. தொழில்முனைவோர் கனவுள்ள ஒவ்வொருக்கும் இதுபோன்றவர்களின் பயணங்கள் ஊக்கம் தரும். அத்தகைய ஓர் உத்வேகம் தரும் நிறுவனர் கதையையே இந்த அத்தியாயத்தில் பார்க்கப் போகிறோம்.
நம் எல்லோருக்கும் பரிச்சயமான, தற்காலத்தில் நாம் ஒருமுறையேனும் பயன்படுத்தியிருக்கும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கதையே இந்த யூனிகார்ன் எபிசோட். ஆம், பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ‘ஸ்விக்கி’ (
) தான் அது.ஆன்லைன் யுகத்தில் அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. இதனால், ஆன்லைன் ஆப்கள் மூலமாக உட்கார்ந்த இடத்தில் இருந்தே பொருட்களை வாங்கும் பழக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மளிகை முதல் மருந்து வரை, ரோட்டோரக் கடைகள் முதல் ஸ்டார் ஓட்டல்கள் வரை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி செய்ய எண்ணற்ற நிறுவனங்கள் போட்டி போட்டு காத்திருக்கின்றன. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் நிறுவனங்களில் உணவு டெலிவரி செய்வதில் முன்னிலை வகிக்கிறது ‘ஸ்விக்கி’.
கடந்த ஓராண்டில் நம்மில் யாரேனும் சென்னை உட்பட இந்தியாவின் எந்த பெருநகரங்களுக்கு சென்றிருந்தாலும், ஆரஞ்சு நிற டி-ஷர்ட்டுடனும், கறுப்பு நிற பேக் பேகுடனும் ஸ்விக்கி ஊழியர்கள் பரபரப்பாக செல்வதை பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ஒவ்வொரு மாதமும் 1.4 கோடி பேரின் பசி தீர்த்து இந்தியாவின் மிக முக்கியமான, வலிமையான ஸ்டார்ட்அப் நிறுவனமாக உருவெடுத்துள்ளது ‘ஸ்விக்கி’.
இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் யுனிகார்ன் அந்தஸ்தை பெற்ற முதல் நிறுவனம் ஃப்ளிப்கார்ட். இந்த மதிப்பை பெற ஃப்ளிப்கார்ட் எடுத்துக்கொண்ட காலம் ஆறு ஆண்டுகள். இதே மதிப்பை வெறும் நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் எட்டிய ‘ஸ்விக்கி’யின் உத்வேகம் கொடுக்கும் கதை சற்று சுவாரஸ்யமானது.
பயணத்தில் தொடங்கிய ‘பயணம்’
‘ஸ்விக்கி’க்கு மூன்று நிறுவனர்கள் என்றாலும், மூவரில் முக்கியமானவர் ஸ்ரீஹர்ஷா மெஜட்டி. ‘ஸ்விக்கி’ ஐடியா பொறியாளரான இவருடையதே. ஸ்ரீஹர்ஷா படித்தது ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பிலானியில். மற்ற பொறியியல் கல்லூரிகளில் இருந்து சற்று வித்தியாசமான கல்லூரி பிட்ஸ் பிலானி. கட்டாய வருகைப்பதிவேடு அங்கு கிடையாது. இதனால், மாணவர்கள் தங்களுக்கு பிடித்ததை அங்கு செய்ய முடிந்தது. பயண ஆர்வலரான ஸ்ரீஹர்ஷா, அங்கு படிக்கும்போது நிறைய இடங்களுக்கு பயணித்து பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்தார். அவர் மேற்கொண்ட பயணங்களே அவரை செதுக்கியது. டிகிரி முடித்ததும் லண்டனில் நல்ல ஊதியத்தில் வேலை. ஆடிய கால் சும்மா இருக்குமா, சில காலங்களில் ஒரே இடத்தில் இருந்து பணிபுரிவது பிடிக்காமல் வேலையை உதறினார்.
பயண ஆர்வத்தை மீண்டும் தூசி தட்டினார். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஒரு சைக்கிள் டிரிப் கிளம்பிவிட்டார். போலந்து சென்றபோது அந்த நாட்டின் பருவ நிலையைச் சரியாகக் கணிக்காததால் கடினங்களை சந்திக்க வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில் பயணத்தை பாதியில் கைவிட துணிந்தவருக்கு உள்ளூர்வாசி ஒருவரின் உதவி ஸ்ரீஹர்ஷாவின் எண்ணத்தை மாற்றியது. மலையில் சைக்கிளிங் சென்றவருக்கு...
“மலை மீது ஏறும்போது காரில் ஏறு. இறங்கி வரும்போது சைக்கிளில் வந்தால் எளிதாக இருக்கும். வாழ்க்கையில் இதுபோன்ற சின்னச் சின்னத் தோல்விகளுக்கு எல்லாம் பயந்தாள் பெரிய வெற்றிகளை பெற முடியாது.”
- இப்படி அந்த உள்ளூர்வாசி கொடுத்த அட்வைஸ் ஹர்ஷாவின் மனதை புரட்டிப்போட்டது.
“என்னை உற்சாகப்படுத்தும் விஷயங்களைச் செய்வதில் நான் மிகவும் பிடிவாதமாக இருந்தேன், அதற்காக என்னை ஈடுபடுத்த தயாராக இருந்தேன்” என்பார் ஸ்ரீ ஹர்ஷா.
தோல்விகளையும் ஆயத்தமின்மையையும் எப்படி அமைதியாகவும் பொறுமையுடனும் சமாளிப்பது என்பதை இந்தப் பயணம் அவருக்கு உணர்ந்த இந்தியா திரும்பினார். தாய் நாட்டுக்கு திரும்பிய அவருக்கு எதாவது ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியில் இணைந்து பணிபுரிவது என்பதே முதல் யோசனையாக இருந்தது. ஆனால், எந்த ஸ்டார்ட்அப் நிறுவனமும் அவர் எதிர்பார்த்த ரேஞ்சில் இல்லாததால் தானே ஒரு ஸ்டார்ட்அப் தொடங்குவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
“தொழில்முனைவு என் ரத்தத்தில் ஊறிப்போனது. எனது தந்தை விஜயவாடாவில் ஓர் உணவகத்தை நடத்தியவர். மேலும் எனது தாய் ஒரு மருத்துவர். சொந்தமாக கிளினிக் நடத்துகிறார். எனது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பிசினஸ்தான்”
- இப்படி வெளிப்படுத்தும் ஹர்ஷா தனது குடும்பத்தையே உத்வேகமாக கொண்டு புதிய பாய்ச்சலை தொடங்கினார். எடுத்த எடுப்பில் அவருக்கு எல்லாம் கைகூடவில்லை. எல்லாம் பாடங்களே கற்றுக்கொடுத்தன.
முதல் டெலிவரி செயலி!
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கின் ஆரம்ப காலகட்டம் 2012. அப்போது ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பலவும் சந்தித்த பெரிய பிரச்னை டெலிவரி. குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதில் சிக்கல்களை எதிர்கொண்டன. இதனை சரிசெய்யும் முயற்சியில் இறங்கிய ஹர்ஷா, தனது நண்பர் நந்தன் ரெட்டியுடன் இணைந்து Bundl என்ற செயலியை உருவாக்கினார். டெலிவரி நிறுவனங்கள், சின்னச் சின்ன கொரியர் நிறுவனங்களை ஒன்றிணைத்து Bundl செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யலாம் என்பதே ஹர்ஷாவின் பிளான்.
ஒரு வருட உழைப்பின் விடியலாக Bundl செயலியை நடைமுறைக்கு கொண்டுவந்த நேரத்தில் ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் சொந்தமாகவே டெலிவரி சேவையை தொடங்கிவிட்டனர். இதனால், ஆரம்பித்த சில காலத்திலேயே மூடுவிழா கண்டது Bundl. நல்லவேளையாக யாரிடமும் எந்த நிதியுதவியும் பெறாமல் ஒருவருட உழைப்பை கொடுத்ததால் தலைக்கு வந்த கத்தி தலைப்பாகையோடு போன கதையாக தப்பி இருந்தார் ஹர்ஷா.
முதல் முயற்சியில் ஏமாற்றம் இருந்தாலும் கற்ற பாடங்கள் அதைவிட அதிகமாக இருந்தன. அவற்றில் ஒன்று, இந்திய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள் டெக்னாலஜியை சரியாக பயன்படுத்திவில்லை என்பது. இந்த யுக்தியை ஹர்ஷா பயன்படுத்த விரும்பினார். ஆன்லைனின் சக்தி, ஆஃப்லைனின் வாய்ப்புகளைக் கொண்டு புதிய வரலாற்றை எழுத முடிவு செய்தார். அப்படி உருவானதே ஸ்விக்கி.
ஸ்விக்கியின் மாடலை போலவே வேறு சில நிறுவனங்கள் அப்போது களத்தில் இருந்தன. ஆனால், அவை பிரச்னைகளில் சிக்கித் தவித்தன. ஒரு நிறுவனம் தன்னிடம் இருந்த முதலீடு காலியாகு வரை வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்களை வாரி வழங்கியது. முதலீடுகள் காலியாகவும் ஆஃபரைக் குறைக்க வாடிக்கையாளர்கள் வெளியேறினார்கள். இன்னொரு நிறுவனம், டெலிவரியிலேயே சொதப்ப மீளமுடியாத அளவுக்கு மரண அடி வாங்கியது. இவற்றையெல்லாம் உன்னிப்பாக கவனித்த ஹர்ஷா தலைமையிலான ‘ஸ்விக்கி’ டீம், இந்தப் பிரச்னைகள் தங்களுக்கு வராமல் பார்த்துக்கொள்ள முனைப்புக் காட்டியது. உணவகங்கள் நீண்ட காலம் இருப்பவை என்பதால் பெரிய பிரச்சனையில்லை.
பெங்களூரு தொடங்கி சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் முக்கிய உணவகங்கள் உடன் கைகோர்த்தனர். ஸ்விக்கி மாடலில் முக்கியமானது டெலிவரி. Bundl கற்றுக்கொடுத்த பாடத்தில் டெலிவரியை தலையாய வேலையாக கொண்டு அவற்றில் கவனம் செலுத்தினர், டெலிவரி பாய்ஸ்க்கு நல்ல கமிஷன் என்ற அடிப்படையில் வேலைக்கு அமர்த்தினர்.
தடம் பதித்த ஸ்விக்கி
ஆஃப்லைனின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஸ்விக்கி, ஆன்லைன் சக்தியிலும் தவறு நேராத தொழில்நுட்பத்தை வடிவமைத்தனர். அதையும் மீறி தவறுகள் நேர்ந்தால் உடனடியாக உதவி செய்ய வாடிக்கையாளர் சேவை என இந்திய ஆன்லைன் உணவு டெலிவரி துறையின் தன்மையையே மாற்றி எழுதிகொண்டு வலுவான தடம் பதித்தது ‘ஸ்விக்கி’. அன்று எடுத்த இந்த முயற்சியின் பலன்தான் இன்று சராசரியாக 40 நிமிடத்துக்குள் ஆர்டரை அவர்களால் டெலிவரி செய்ய முடிகிறது.
இதே துறையில் உள்ள மற்ற நிறுவனங்களை காட்டிலும் வெளிப்படைத்தன்மை கொண்டது ‘ஸ்விக்கி’. ஒருமுறை, ஸ்விக்கியிலிருந்து வெளியேறிய ஊழியர் “ஸ்விக்கி, ஆர்டர் எண்ணிக்கையை ஏமாற்றுகிறது” என புகார் சொல்ல, சோஷியல் மீடியா பரபரப்பானது. எந்தவித பதற்றமும் காட்டாத ஹர்ஷா அண்ட் டீம் தங்களின் மொத்த டேட்டாவையும் பொதுப் பார்வைக்கு வைத்தது.
ஸ்விக்கியின் மதிப்பு இந்திய உணவு டெலிவரி சந்தையில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2018-ல் யூனிகார்ன் நிறுவனமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 700 மில்லியன் டாலர் நிதி திரட்டி அதன் முந்தைய சந்தை மதிப்பான 5.5 பில்லியன் டாலரில் இருந்து 10.7 பில்லியன் டாலர் சந்தை மதிப்புக்கு உயர்ந்துள்ளது. ‘ஸ்விக்கி’யின் முதலீட்டாளர்கள் அல்பா வேவ் குளோபல், கதார் இன்வெஸ்ட்மண்ட் அத்தாரிட்டி, ஏ.ஆர்.கே இம்பேக்ட் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர் ப்ரோசஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள்.
இன்றைய தேதியில் இந்தியாவின் பெரிய சிறிய நகரங்கள் என 500+ இடங்களுக்கு ‘ஸ்விக்கி’யின் சேவை விரிவடைந்துள்ளது. உணவு டெலிவரி என்பதோடு நில்லாமல், உடனடி மளிகை டெலிவரி சேவையான ‘இன்ஸ்டாமார்ட்’ என்பதை தொடங்கி, அதனை ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நிலைக்கு சென்றிவிட்டது. ஸ்டார்ட்அப் வரலாற்றில் ‘ஸ்விக்கி’ செய்திருக்கும் புரட்சி பெரியது.
ஒரு பிசினஸ் என்பதை தாண்டி, பலருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கும் ஒரு கோட்டையாக உருவெடுத்துள்ளது. மாதம் 18,000 ரூபாய்க்கும் குறையாத அளவுக்கு தனது டெலிவரி பாய்களுக்கு ஊதியமாக கொடுக்கிறது. என்றாலும், ஊதியப் பிரச்னை, உணவகங்களின் தரம் குறித்து ‘ஸ்விக்கி’ அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறது. அவற்றையும் ஸ்ரீஹர்ஷா அண்ட் டீம் சரி செய்யும் என்று நம்புவோம்.