மத்திய பட்ஜெட் 2024: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நற்செய்தி - 'ஏஞ்சல் வரி’ முழுமையாக நீக்கம்!
ஏஞ்சல் வரியை நீக்குவது இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலுக்கான நிதி வரத்தை அதிகரிக்கும் மற்றும் நிறுவனர்களுக்கான வரி இணக்க சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மத்திய பட்ஜெட்டில் ஏஞ்சல் வரி முழுமையாக ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட் தாக்கலில் அறிவித்துள்ளார். இதனால் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பெரிய அளவில் நன்மை அடையும்.
நிர்மலா சீதாராமன் தன் பட்ஜெட் அறிவிப்பில்,
"அனைத்து வகை தொழில் முதலீட்டுக்கான ஏஞ்சல் வரி என்பது நீக்கப்படுகிறது, என்று அறிவித்தார். ஏஞ்சல் வரி விதிப்பு முறை என்பது 2012 முதல் நடைமுறையில் இருந்து வரும் வரிவிதிப்பாகும்."
ஏஞ்சல் வரியை நீக்குவது இந்திய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலுக்கான நிதி வரத்தை அதிகரிக்கும் மற்றும் நிறுவனர்களுக்கான வரி இணக்க சுமையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஞ்சல் வரியின் முதல் நோக்கம் என்பது தனியார் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் பண மோசடியைத் தடுப்பதாகும். பொதுவாக தனியார் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை பெரும்பாலும் பங்கு முதலீடுகளாக வெளியிலிருந்து பெறுகின்றனர். இந்த முதலீடுகளில் பங்குகளின் விலை நியாயவிலையை விட அதிகமாக நிர்ணயிக்கப்படும் நிலையில் அதிகப்படியான தொகைக்கு வரி விதிக்கப்படும்.
வருமான வரிச்சட்டத்தின் 56 பிரிவு 2 ன் கீழ், பிற ஆதாரங்களில் இருந்து பெறும் வருமானம் என்ற பெயரில் 30.9% வரை இந்த வரி விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் வளர்ச்சியடைந்த தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமில்லாது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டு வந்தது. இதுதான் ஏஞ்சல் வரி என்று அழைக்கப்பட்டு வந்தது.
தற்போது இது நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஸ்டார்ட்-அப் துறையில் உள்ளவர்கள் வரவேற்றுள்ளனர். அதாவது, இந்த ஏஞ்சல் வரி நீக்கம் என்பது ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உள்ள ஒரு பெரிய தடையை நீக்குவதாக அமைந்துள்ளது என்று அந்தத் துறையினர் இதை வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக 3ஒன்4 கேப்பிட்டல் மேனேஜிங் பார்ட்னர் சித்தார்த் பாய் கூறுகையில்,
"அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ஏஞ்சல் வரி நீக்கப்படும். இந்த அறிவிப்பு என்பது மிகப்பெரிய சீர்திருத்தமாகும். ஸ்டார்ட்-அப்கள் இந்தியாவில் இருக்கவும், இங்கே அதன் கட்டமைப்புகளை உருவாக்கவும் இந்த நடவடிக்கை என்பது அவசியம். இது இந்திய ஸ்டார்ட்அப் துறையில் முக்கிய படியாகும். ஏனென்றால் முதலீடுகள் மீதான வரி என்பது முதலீட்டாளர்களை துன்புறுத்தும் செயலாகும். தற்போது இந்த வரி நீக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கெல்லாம் பெரிய நிம்மதியாக உள்ளது,'' என்றார்.
சிலபல தனியார் நிறுவனங்கள் கிளை நிறுவனங்களை உருவாக்கி இந்த ஏஞ்சல் வரி விதிப்பு முறையை ஏமாற்ற கிளை நிறுவனங்களை ஆரம்பிக்கும் செயல்கள் இருந்தன. இதனைத் தடுக்கவே வருமான வரிச்சட்டத்தின் 56 பிரிவு 2 ன் கீழ் இந்த வரி விதிப்புக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, முதலீட்டுக்கே வரி என்பதால் ஸ்டார்ட் அப் முதலீடுகள் பாதிக்கப்பட்டன.
இதனையடுத்து, நாஸ்காம், உண்மையான முதலீடுகளுக்கும் இந்த ஏஞ்சல் வரி தடையாக இருக்கும் என்று எச்சரித்தது. அது போலவே ஸ்டார்ட்-அப் ஆரம்ப முதலீடுகளுக்கு ஏகப்பட்ட தடைகள் இருந்து வந்தன. இப்போது இந்த ஏஞ்சல் வரி விதிப்பு முற்றிலும் அகற்றப்பட்டதால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துறை இந்த முடிவை வரவேற்றுள்ளது.