வெற்றி; தோல்வி; கடன்; நிறுவனம் மூடல்: எல்லாம் கடந்து 55வயதில் ‘Again' களத்தில் இறங்கிய ‘வைத்தீஸ்வரன்’

By vasu karthikeyan
January 20, 2022, Updated on : Tue Feb 01 2022 09:12:52 GMT+0000
வெற்றி; தோல்வி; கடன்; நிறுவனம் மூடல்: எல்லாம் கடந்து 55வயதில் ‘Again' களத்தில் இறங்கிய ‘வைத்தீஸ்வரன்’
அமோகமாக சென்று கொண்டிருந்த முதல் நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கலுக்குப் பிறகு இரண்டாவது நிறுவனத்தைத் தொடங்கி அதற்குக் காப்புரிமை வாங்கி இருக்கிறார் இந்தியா பிளாசா வைத்தீஸ்வரன்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

தோல்வி அடைகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த தோல்வியில் இருந்து எவ்வளவு விரைவாக மீண்டு எழுகிறோம் என்பதுதான் முக்கியம். 'வைத்தீஸ்வரன்' அப்படித்தான் விரைவாக வளர்ந்து, வீழ்ந்து இன்று மீண்டும் மீண்டு எழுந்திருக்கிறார்.


அமோகமாக சென்று கொண்டிருந்த முதல் நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கலுக்குப் பிறகு இரண்டாவது நிறுவனத்தைத் தொடங்கி அதற்குக் காப்புரிமை வாங்கி இருக்கிறார். இரண்டாவது நிறுவனம் தொடங்கும்போது அவருக்கு வயது 55. தொழில் தொடங்குவற்கு வயது ஒரு தடையில்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.


’Again' என்னும் பானத்தை ஓர் ஆண்டுக்கு முன்பு அறிமுகம் செய்திருக்கிறார் வைத்தீஸ்வரன். பானங்களை பொறுத்தவரை இரு சிக்கல்கள் இருக்கின்றன. ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதாவது, அதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, செயற்கை நிறமூட்டிகள் இருக்கக் கூடாது, பிளேவர் இருக்கக் கூடாது.

vaitheesawaran

உதாரணத்துக்கு பிஸ்தா இருக்க வேண்டும் என்றால் பிஸ்தா சுவை மட்டுமல்லாமல் பிஸ்தாவே இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் இவை முக்கியம். அடுத்ததாக அதிக நாட்கள் பயன்படுத்த முடியும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், குளிர்சாதன வசதியில்லாமல் பயன்படுத்த முடிய வேண்டும் என இரு விஷயங்கள் இருக்கின்றன. பானங்களை பொறுத்தவரை இவை அனைத்தும் இருக்காது.


நிறமூட்டிகள் இருக்கும் அல்லது குளிர்பதன வசதியில்லாமல் பருக முடியாது என எதாவது ஒரு சிக்கல் இருக்கும். இவை அனைத்தும் இருப்பதுபோன்ற பானம் சர்வதேச அளவில் இல்லை. அதனால் இது போன்ற ஒரு பானத்தை உருவாக்கி அதற்கு காப்புரிமை பெற்றிருக்கிறார் வைத்தீஸ்வரன்.


பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த வைத்தீஸ்வரனுடன் நீண்ட நேரம் உரையாடினேன். இதில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவை இதோ.

ஆரம்ப காலம்

அப்பா இந்திய ரயில்வேயில் வேலை செய்தார். பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொல்கத்தாவில். 7-ம் வகுப்பு வரை அங்குதான் படித்தேன். அதன் பிறகு 12-ம் வகுப்பு வரை சென்னை மயிலாப்பூரில் படித்தேன். திருநெல்வேலியில் அப்போதுதான் பொறியியல் கல்லூரி தொடங்கினார்கள். 1981ம் ஆண்டு முதல் பேட்ச் மாணவன். இசிஇ படித்தேன்.


படித்து முடித்த பிறகு முருகப்பா குழுமத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். எலெக்ட்ரானிஸ் பிரிவில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதில் சேர்ந்த சில நாட்களில் கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டிய சூழல். எனக்கு பெங்காளி மற்றும் ஹிந்தி தெரியும் என்பதால் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் ஆரம்ப காலங்களில் பணியாற்றினேன். சில ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்தேன்.


அப்போதுதான் கம்யூட்டர்கள் வரத்தொடங்கி இருந்த காலம். விப்ரோ நிறுவனத்தில் பணி வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருந்தது. வேலைக்கு விண்ணப்பித்தேன். 1989-ம் ஆண்டு விப்ரோவில் வேலைக்கு சேர்தேன். ஆரம்பத்தில் புராடக்ட் எக்ஸிகியூட்டிவ்வாக சேர்ந்தேன். 1999-ம் ஆண்டு வேலையில் இருந்து விலகும்போது ஹெட் ஆப் மார்க்கெட்டிங்காக இருந்தேன்.

Vaithee

பெரிய சேமிப்பு இல்லை, பின்புலமும் இல்லை. வேலையில் இருந்தேன் அவ்வளவுதான். தொழில் தொடங்கலாம் என்று முடிவெடுத்த பின்பு, இதுவரை விப்ரோ நிறுவனம் கொடுத்த வீட்டில்தான் இருந்தேன். அதனால் தொழில் தொடங்குவதற்கு முன்பு கடனில் ஒரு வீடு வாங்கிய பிறகுதான் தொழில் தொடங்கினோம்.


ஃபேப்மார்ட்.காம் (Fabmart) என்னும் பெயரில் நிறுவனம் தொடங்கினோம். என்னை தவிர ஐந்து நபர்கள் என மொத்தம் ஆறு நண்பர்கள் இணைந்து தொடங்கினோம். அப்போது இணையம் என்பது மிகக் குறைந்த நபர்களே பயன்படுத்தினார்கள் என்பதால் வளர்ச்சி குறைவாக இருந்தது. அதனால்,

ஃபேப்மால் என்னும் பெயரில் ஆஃப்லைன் ஸ்டோர்களை 2002-ம் ஆண்டு முதல் தொடங்கினோம். நான்கே ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி. சென்னை, ஹைதராபாத், கொச்சி, பெங்களுரூ என 130 சூப்பர் மார்கெட்களை திறந்திருந்தோம்.

இந்த சமயத்தில் ஆதித்யா பிர்லா குழுமம் எங்களை வாங்க திட்டமிட்டது. ஆனால், அதில் சிக்கல் என்னவென்றால் எங்களின் இ-காமர்ஸ் நிறுவனத்தை வாங்கவில்லை. ஆனால் 130 சூப்பர் மார்கெட் ஸ்டோர்களை மட்டுமே வாங்க முடிவெடுத்தது. அதே சமயம் நிறுவனர்கள் எங்களுடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என விதி இருந்தது.


அதனால், நான் மட்டுமே இணையதளத்தை பார்த்துக்கொள்ளச் சென்றேன். மற்ற ஐவரும் ஆதித்யா பிர்லா குழுமத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்கள். (ஐவரில் ஒருவர்தான் சந்தீப். இவருடன் இணைந்துதான் ’அகெயின்’ நிறுவனத்தை வைத்தீஸ்வரன் தொடங்கி இருக்கிறார். மீதமுள்ளவர்கள் தொடங்கிய நிறுவனம்தான் ’பிக்பாஸ்கெட்’.

’இந்தியா பிளாசா’ தொடக்கம்

ஃபேப் மார்ட் என்னும் பெயரை பயன்படுத்த முடியாததால் ’இந்தியாபிளாசா’ என்னும் பெயரை மாற்றி நிறுவனத்தை நடத்தினோம். 2011ம் ஆண்டு நிதி திரட்டினோம். நிறுவனத்துக்குள் புதிய இயக்குநர்கள் வந்தார்கள். நான் இல்லாமல் நான்கு இயக்குநர்கள். இவர்கள் இருபிரிவுகளாக செயல்பட்டதால் கருத்து வேறுபாடு அதிகரித்தது.

நிறுவனத்தில் 85 சதவீதத்துக்கு மேல் முதலீட்டாளர்கள் வசம் இருந்தது. என்னிடம் குறைவான சதவீதம் (ஒற்றை இலக்கத்தில்) அளவுக்கு மட்டுமே பங்குகள் இருந்தன. இதனால் மேலும் பணம் திரட்டுவதில் பெரும் சிக்கல் இருந்தது. நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்தது. பணியாளர்கள் விலகினார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. டாடா குழுமத்தைச் சேர்ந்த ட்ரெண்ட் நிறுவனம் வாங்குவதாக இருந்தது. அனைத்து பிரச்சினைகளும் முடிந்தது என நினைத்தேன். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

டாடா குழுமம் எங்களது நிறுவனத்தை ட்ரேட்மார்க் செய்து கொடுக்க வேண்டும் எனக் கேட்டது. ஆனால் அது சாத்தியமில்லை. காரணம் இந்தியாபிளாசா என்னும் பெயரை ட்ரேட்மார்க் செய்ய முடியாது. இந்தியா என இருப்பதால் அது சாத்தியமில்லை எனப் புரிந்துவிட்டது. ஆனால், டாடா குழுமம் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. இணையதளத்தை பொறுத்தவரை url முக்கியம் எனும் வாதம் எடுபடவில்லை.

”இதனைத் தொடர்ந்து பலமுறை தனிப்பட்ட முறையில் அவமானப்பட்டேன். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தார்கள். வீட்டுக்கே வந்து மிரட்டினார்கள். என்னை என் மனைவி, குழந்தையை அவமானமாகப் பேசினார்கள். கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் நிறுவனத்தை நடத்தி எந்த பயனும் இல்லை. ரூ.10 கோடி அளவுக்கு நிறுவனத்துக்கு கடன் இருந்தது. வேறு வழியில்லாமல் 2013ம் ஆண்டு நிறுவனத்தை மூடினோம். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூட தோன்றியது...”

இவற்றையெல்லாம் எப்படியோ கடந்து வந்து இன்று மீண்டும் தொழில்முனைவர் ஆகியிருக்கிறேன்.

அடுத்து என்ன?

என்னுடைய தொலைபேசி அல்லது இ-மெயில் மாற்றவில்லை. 1999ம் ஆண்டு என்ன இருந்ததோ அதுவேதான் தற்போது இருந்தது. அதன் பிறகு டாடா குழுமத்தில் ஆலோசகராக இருந்தேன். திங்கள் கிழமை காலை பெங்களூருவில் இருந்து மும்பை, வெள்ளிக்கிழமை மாலை மும்பையில் இருந்து பெங்களூரு என ஓர் ஆண்டு சென்றது. அதனைத் தொடர்ந்து டெலாய்ட்-ல் ஆலோசகராக இருந்தேன்.


இந்த சமயத்தில் இ-காமர்ஸ் துறையில் பெரிய மாற்றங்கள் நடந்தது. இ-காமர்ஸ், ஸ்டார்ட் அப் என்னும் வார்த்தைகள் புழக்கத்தில் இல்லாத சமயத்திலே நாங்கள் செயல்பட்டோம் என்பதால், அந்த அனுபவத்தை புத்தகமாக எழுதலாம் என திட்டமிட்டு, எழுதியும் வந்தேன். Failing to Succeed: The Story of India’s First E-Commerce Company என்னும் புத்தகம் வெளியானது.

failing to succeed

புத்தகம் எழுதும் சமயத்தில் என்னுடைய நண்பர் சந்தீபை சந்தித்தேன். அப்போது எங்களுடைய உரையாடல் புதிய நிறுவனம் தொடங்குவது தொடர்பாக இருந்தது. அப்போது எனக்கு சில நிபந்தனைகள் இருந்தன. இதுவரை சேவை துறையில் இருந்துவிட்டோம். அதனால் புராடக்ட் தொடர்பான நிறுவனம் தொடங்க வேண்டும் என முடிவெடுத்தேன்.


இதுதவிர இதுவரை யாரும் செய்யாத ஒரு பிரிவில் இறங்க வேண்டும், இதுவரை எனக்கு அனுபவம் இல்லாத புதிய தொழிலில் இறங்க வேண்டும், சமூகத்துக்கு பயன்பட வேண்டும் என எல்லைகளை வகுத்துக்கொண்டு பேசினோம். அப்போது கிடைத்ததுதான் ’அகெயின்’ ட்ரிங்.

தொழில் வாழ்க்கையை ’Again' தொடங்கிய வைத்தீஸ்வரன்

ஏற்கெனவே சொன்னது போல ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். தவிர கோல்ட் செயின் தேவைப்படாமல் இயற்கையான சூழலில் வைத்து பருகவும் வேண்டும் என்னும் இலக்கை எங்களுக்கு நாங்களே நிர்ணயம் செய்துகொண்டேன்.


சரிவிகித உணவு என்பது பால், பழம், காய்கறி, புரோட்டீன் மற்றும் தானியங்கள் இருக்க வேண்டும். அதனால், அந்த பானத்தில் இவையும் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டோம். 2016ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2018ம் ஆண்டு புராடக்டை முடித்தோம். இதுவரை உலகில் இப்படி ஒரு புராடக்ட் இல்லை என்பதால் அதற்கு காப்புரிமை வாங்கும் முயற்சியை 2018-ம் ஆண்டு தொடங்கி 2021-ம் ஆண்டு ஜூலையில் முடித்தோம்.


இப்போதைக்கு இந்தியாவில் காப்புரிமை வாங்கி இருக்கிறோம். பல ஆராய்ச்சிகள் தரவு, விவாவதங்களுக்கு பிறகு இந்த காப்புரிமை கிடைத்தது. 2041-ம் ஆண்டு ஜூலை வரை இந்த காப்புரிமை எங்கள் வசம் இருக்கும்.

again

Again நிறுவனர்கள்: சந்தீப் மற்றும் கே வைத்தீஸ்வரன்

நிதி மற்றும் விற்பனை

புராடக்ட் தயார் செய்வது வரைக்கும் நாங்கள் எங்களுடைய சொந்த முதலீட்டை செய்திருந்தோம். அதன் பிறகு, புராடக்ட் தயாரான உடன் சில ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் பேசி 2 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை திரட்டினோம்.

காஞ்சிபுரத்தில் உள்ள ஆலையில் புராடக்ட் தயார் செய்கிறோம். அனைத்தும் சரியாக நடக்கும் சமயத்தில் 2020-ம் ஆண்டு லாக்டவுன் வந்தது. அதனால் மொத்த விற்பனையும் சரிந்தது. தற்போது மீண்டும் மெல்ல மெல்ல விற்பனை உயரத்தொடங்கி இருக்கிறது. ஒரு பாட்டில் 55 ரூபாய் என நிர்ணயம் செய்திருக்கிறோம். இதுவரை சில லட்சம் பாட்டில்கள் விற்பனையாகி இருக்கிறது.

மூன்று வழிகளிலும் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். வழக்கமான ரீடெய்ல் ஸ்டோர்கள், ஃபிளிப்கார்ட், அமேசான், பிக்பாஸ்கட் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்கள் மூன்றாவதாக எங்களது தளத்தில் விற்பனையை (டி2சி) தொடங்கி இருக்கிறோம்.


அடுத்தகட்ட நிதி திரட்டலுக்கு தயாராகி வருகிறோம். அந்த நிதி கிடைத்தவுடன் இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் ஆலை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் தென் இந்தியாவில் மட்டுமே உள்ள விற்பனையை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல இருக்கிறோம்.


நிதி கிடைத்த பிறகு வெளிநாட்டிலும் காப்புரிமை பெறுவதற்கு முயற்சி செய்ய இருக்கிறோம். தற்போது இந்தியாவில் காப்புரிமை கிடைத்திருப்பதை வைத்தே பல நாடுகளில் இருந்தும் (அமெரிக்கா, துபை, இலங்கை) எங்களுக்கு அழைப்பு வருகிறது. அதனால், இதனை சர்வதேச பிராண்டாக மாற்றும் திட்டத்தையும் நாங்கள் வைத்திருக்கிறோம் என்றார் வைத்தீஸ்வரன்.


ஏற்கெனவே ஒரு தொழிலில் தோல்வி, இருந்தபோது 55வயதில் இரண்டாம் நிறுவனம் தொடங்க காரணம் என்ன? ஒரு வயதுக்கு மேல் ஏஞ்சல் முதலீட்டாளரகவோ அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருப்பதுதானே வழக்கம் என்று கேட்டதற்கு,

சில நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறேன். ஆலோசகராகவும் இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை தொழில் தொடங்கிவிட்டால் எண்ணம் அதிலேயே இருக்கும்.

தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய வாழ்க்கை முழுவதும் ஸ்டார்ட் அப் ஆகவே இருக்கிறது. நான் படித்த கல்லூரியில் முதல்பேட்ச் நான். எந்தவசதியும் இல்லாமலே படித்தேன். முருகப்பா குழுமத்தில் வேலையில் இருந்தாலும் அந்த நான் வேலை செய்தது புதிய நிறுவனம். அதேபோல விப்ரோவும் அப்போது ஸ்டார்ட் அப் நிறுவனம்தான். அதனால் புதிய தொழில் தொடங்குவது என்பதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை. 60 வயதில் தொழில் தொடங்கிய உதாரணம் நிறைய இருக்கிறது என்றார்.

அதனால்தான் Again என பெயர் வைத்தீர்களா என்று கேட்டதற்கு, சினிமா பஞ்ச டயலாக் போல இருக்கிறது என உங்களைப் போல பலரும் கேட்டார்கள். ’திரும்பிவந்துவிட்டேன்’ என்று சொல்வதற்கு வசதியாக இருக்கிறது. ஆனால் அதற்காக வைக்கவில்லை. மக்கள் மீண்டும் மீண்டும் குடிக்க வேண்டும் என்பதற்காக வைத்தேன் என வைத்தீஸ்வரன் விடைகொடுத்தார்.


இவரிடம் உரையாடி முடித்த பிறகு Failing to Succeed புத்தகத்தின் கடைசி பகுதியான End game-யை  மீண்டும் ஒரு முறை படித்தேன். வெற்றிக்கதைகள் கொடுக்கும் உற்சாகத்தை விட தோல்விக்கதைகள் கொடுக்கும் படிப்பினைகள் மிக அதிகம். மாநாடு படம் போல, நிறுவனத்தை தக்கவைக்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலே முடிந்தது. படத்தில் முதலமைச்சர் காப்பாற்றப்படுவார். ஆனால், அத்தனை முயற்சிகளுக்கு பிறகும் இந்தியாபிளாசா தோற்றது. பரவாயில்லை, தற்போது அகெயின் – ஆக உருமாற்றம் அடைந்திருக்கிறது.


சர்வதேச பிராண்டாக இது மாறுவதற்கு எங்கள் வாழ்த்துகள்...!

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற