மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கிய கிரிப்டோ பரிவர்த்தனை தளம் WazirX
கடந்த ஆண்டு ஜூலையில் நிகழ்ந்த சைபர் தாக்குதலில் சுமார் 230 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் இழந்த WazirX நிறுவனம், அதன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்து, அக்டோபர் 24 முதல் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கிரிப்டோ பரிவர்த்தனை தளம் 'வசிர்எக்ஸ்' (WazirX) ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அக்டோபர் 24 முதல் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்கியது. கடந்த ஆண்டு ஜூலையில் நிகழ்ந்த சைபர் தாக்குதலில் சுமார் 230 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் இழந்ததைத் தொடர்ந்து இததளம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்நிறுவனம், அதன் மறுசீரமைப்பு செயல்முறையை நிறைவு செய்ததாகவும், சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் வசிர்எக்ஸ் மீட்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவித்துள்ளது. Zettai Pte Ltd தலைமையிலான இந்த திட்டத்திற்கு 95.7% வாக்குகள் ஆதரவாக இருந்தன; இது மொத்த கடன்தாரர்களின் மதிப்பில் 94.6% ஆகும்.
மீண்டும் தொடக்கத்தின் ஒரு பகுதியாக, வாசிர்எக்ஸ் அனைத்து வர்த்தக ஜோடிகளுக்கும் 0% வர்த்தகக் கட்டணம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் சில கிரிப்டோ-டு-கிரிப்டோ ஜோடிகள் மற்றும் பின்னர் USDT/INR பரிவர்த்தனைகள் மூலம் செயல்பாடுகள் தொடங்கும். அடுத்த சில நாட்களில் பிற சந்தைகளும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் திறக்கப்படும்.
பிளாட்ஃபாரத்தின் சொத்துகளை பாதுகாப்பதற்காக நிறுவனம் BitGo நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இது நிறுவனத் தரமான காப்பீடு செய்யப்பட்ட பாதுகாப்பு சேவையாகும்.

“இந்த கடினமான காலங்களில் எங்களை நம்பி காத்திருந்த WazirX சமூகத்துக்கு நன்றி. எங்கள் நோக்கம் இந்தியாவில் அனைவருக்கும் கிரிப்டோவை எளிதாகக் கிடைக்கச் செய்வதே,” என்று நிறுவனர் நிஷ்சல் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், வாசிர்எக்ஸ் டோக்கன் மாற்றம், இணைப்பு, டோக்கன் நீக்கம், மற்றும் மறுபெயரிடல் போன்ற பணிகளை நிறைவு செய்தது. மேலும், கடன்தாரர்களுக்கான ’ரிகவரி டோக்கன்கள்’ வழங்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ரிகவரி டோக்கன்கள், WazirX மீட்டெடுக்க முயலும் சொத்துகளில் ஒவ்வொரு கடன்தாரரின் உரிமையை பிரதிபலிக்கின்றன. இத்திட்டத்தின் கீழ், இழப்பீட்டின் ஒரு பகுதி பணம் அல்லது கிரிப்டோ வடிவில் வழங்கப்படும்; மீதமுள்ள பகுதி ரிகவரி டோக்கன்களாக வழங்கப்படும். இவை எதிர்கால லாபப் பங்குகள் மற்றும் டோக்கன் மீள்கொள்முதல் வாயிலாக வருவாய் பெறும் உரிமையையும் வழங்கும்.

