திருடப்பட்ட கிரிப்டோக்களில் 3 மில்லியன் USDT மதிப்பிலான தொகுப்பை முடக்கியது WazirX நிறுவனம்!
235 மில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்கள் திருட்டுக்கு காரணமான சைபர் தாக்குதலில் திருடப்பட்ட சொத்துக்களில் முதல் தொகுப்பை வெற்றிகரமாக முடக்கியுள்ளதாக WazirX நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிப்டோ பரிவர்த்தனை சந்தையான 'வசிர் எக்ஸ்' (WazirX), 235 மில்லியன் டாலர் மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்கள் திருட்டுக்கு காரணமான சைபர் தாக்குதலில் திருடப்பட்ட சொத்துக்களில் முதல் தொகுப்பை வெற்றிகரமாக முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
முடக்கப்பட்டுள்ள தொகுப்பின் மதிப்பு 3 மில்லியன் டாலர் ஆகும்.
திருடப்பட்ட கிரிப்டோ நாணயத்தை அணுக முடியாமல் கட்டுப்படுத்துவதே முடக்கம் என குறிப்பிடப்படுகிறது. புலனாய்வு அதிகாரிகள், பரிவர்த்தனை சந்தைகள் மற்றும் பிளாக்செயின் மேடைகள் இணைந்து, திருடப்பட்ட நிதிகளை அடையாளம் கண்டு, அவற்றை வேறிடத்திற்கு கொண்டு செல்ல அல்லது மேற்கொண்டு வர்த்தம் செய்ய முடியாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கையாக இது அமைகிறது. இதன் அடுத்த கட்டம் அவற்றை மீட்டெடுப்பதாகும்.
இந்த சைபர் தாக்குதலுக்கு வடகொரியா ஹேக்கர்கள் காரணம், என அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா அரசுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து சில நாட்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
“இது ஆரம்பம் தான்: திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதில் முழு உறுதி கொண்டுள்ளோம். மீட்பு திட்டத்தின் கீழ், மீட்பை அதிகமாக்குவதில் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம். இந்த சவலான சூழலை ஒன்றாக எதிர்கொள்ளும் நிலையில் பயனாளிகளின் பொறுமையையும், ஆதரவையும் பாராட்டுகிறோம்,” என்று வாசிர் எக்ஸ் நிறுவனர் நிஷல் ஷெட்டி கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் வாசிர் எக்ஸ் மேடையை இயக்கும் ஜன்மாய் லேப்ஸ் தாய் நிறுவனமான Zettai Pte Ltd, மீதமுள்ள திருடப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து மீட்பதில் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் காவல் துறையிடனருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதற்கு முன் நவம்பர் மாதம், இந்த சைபர் தாக்குதல் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட செய்தியை யுவர்ஸ்டோரி பிரத்யேகமாக வெளியிட்டது.
ஜெட்டாய் நிறுவனம், சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில், திவால், மறுசீரமைப்பு மற்றும் மூடல் சட்டம் 2018, 64வது பிரிவின் கீழ், அவகாசம் கோரியுள்ளது. இது நிறுவனம் தனது கடன் பொறுப்புகளை சீரமைப்பதற்குத் தேவையான அவகாசத்தை அளிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசிர் எக்ஸ் பயனாளிகள் அண்மை காலத்தில், சமூக ஊடக மேடைகளில், பிட்காயின் ஏறுமுக சூழலை தங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை, என முறையிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தி ஆறுதலாக அமைந்துள்ளது.
நிறுவனம் புதிய அம்சங்களோடு தனது மேடையை பிப்ரவரி மாதம் மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது. பயனாளிகள் நேரடியாக கிரிப்டோ சொத்துக்களை பரிமாறிக்கொள்ள வழி செய்யும் மையமில்லாத மேடையை உருவாக்கும் பணியில் இருப்பதாக ஏற்கனவே நவம்பர் மாதம் தெரிவித்திருந்தது.
ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்
கிரிப்டோ தாக்குதலில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவ ரூ.600 கோடி நிதியை அறிவித்தது 'CoinSwitch'
Edited by Induja Raghunathan