‘ஆர்கானிக் விவசாயம்’ என்றால் என்ன?
ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்துவதால் உடல் நலனுக்காக நாம் உட்கொள்ளும் உணவே நம் உடல் நலனிற்கு கேடாக மாறிவிடுவதால் இயற்கை விவசாயம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இன்று எங்கு பார்த்தாலும் 'ஆர்கானிக்' , 'இயற்கை விவசாயம்’ என்கிற வார்த்தை பரவலாக முக்கியத்துவம் பெற்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது. கடைகளுக்கு செல்லும்போதோ ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போதோ சாதாரண காய்கறிகள், பழங்களின் விலை ஒருபக்கம் பட்டியலிடப்பட்டிருக்க, ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் தனியாக விலைப்பட்டியலுடன் வைக்கப்பட்டிருக்கும்.
ஒப்பீட்டளவில் இந்த ஆர்கானிக் வகைகள் விலை அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம். ஏன் இவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கான பதில் இவை இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படுகின்றன என்பதே.
ஆர்கானிக் விவசாயம் என்றால் என்ன?
எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் செய்யப்படுவதுதான் ஆர்கானிக் விவசாயம். இதில் இயற்கையான உரங்கள், இயற்கையான பூச்சிக்கொல்லிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்படும்.
ரசாயனங்கள் பயன்படுத்துவதால், உடல் ஆரோக்கியத்திற்காக உண்ணும் உணவே நம் உடல் நலனிற்கு கேடாக மாறிவிடுகிறது. இதைத் தவிர்த்து இயற்கையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி இயற்கையான முறையில் செய்வதே ஆர்கானிக் விவசாயம்.
இயற்கையின் முக்கியத்துவம்
இன்று ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பது முக்கியமாகிவிட்டது. ஏனெனில், இன்று வணிக நோக்குடன் உற்பத்தியை அதிகரிக்க, ரசாயனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி விளைவிக்கப்படும் காய்கறிகள் அல்லது பழங்களை சாப்பிடும்போது உடல்நலன் பாதிக்கப்படுகிறது.
விவசாயத்திற்கு ரசாயனங்கள் பயன்படுத்தும்போது மண் வளம் குன்றிவிடுகிறது. அதுமட்டுமல்ல நிலத்தடி நீரிலும் நச்சுத்தன்மை கலந்துவிடுகிறது. மழை பெய்யும்போது நிலத்திலுள்ள நீர் அருகேயிருக்கும் ஆறுகளிலும் ஓடைகளிலும் கலந்துவிடுகிறது. இதனால் நீர்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
உடல்நலனும் மண் வளம் பாதுகாக்கப்படும்
இயற்கை விவசாய முறையில் மாட்டு சாணம், மண்புழு உரம் போன்ற இயற்கையான உரங்கள் பயன்படுத்தப்படும். இதனால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் உற்பத்தியும் அதிகரிக்கும். இப்படி இயற்கையான முறையில் உரமிட்டு உற்பத்தியாகும் விளைபொருட்களை சாப்பிடும்போது உடலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது. அத்துடன் மண்ணிற்கும் நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
இயற்கை பூச்சிக்கொல்லிகள்
பயிர் சாகுபடியின்போது பயிர்களில் பூச்சிகள் வருவது தவிர்க்கமுடியாதது. அவற்றிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கவேண்டும். உரமிடுவதற்கு எப்படி ரசாயனங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறோமோ அதேபோல் வேப்பெண்ணெய், கோமியம், மஞ்சள், சாம்பல், பூண்டு, துளசி போன்ற இயற்கையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவேண்டும்.
ஆர்கானிக் விளைச்சல் விலையுயர்ந்தவை
ரசாயன பயன்பாட்டுடன்கூடிய விவசாயத்துடன் ஒப்பிடுகையில் ஆர்கானிக் விளைச்சல் விலையுயர்ந்தவையாகவே இருக்கும். இதற்குக் காரணம் ரசாயன உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்கள் விலையுயர்ந்தவை. ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மாட்டு சாணம், மண்புழு உரம் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே ஆர்கானிக் விளைச்சல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழில்: ஸ்ரீவித்யா