2,000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியதற்கு இது தான் காரணமா?
2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பின் போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை புதிதாக அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. இந்த ஆண்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படாததற்கு என்ன காரணம்?
ரிசர்வ் வங்கியின் 2018-19 ஆம் நிதியாண்டின் ஆண்டறிக்கையின் சில அம்சங்கள் அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிவந்துள்ளது. இதன்படி கடந்த 18 மாதங்களாக புதிய ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. உயர் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது ஏன் நிறுத்தப்பட்டது என்று ரிசர்வ் வங்கி எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
படஉதவி : இந்துஸ்தான் டைம்ஸ்
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கருப்புப் பண ஒழிப்பு மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அப்போது காரணம் கூறப்பட்டது. செலவுக்கு பணம் கிடைக்காமல் மக்கள் நாடு முழுவதும் திண்டாட்டினர். இதையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பணப்பற்றாக்குறை இருந்த போது உயர் மதிப்புடைய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இருந்தது.
தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ள நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த ஆண்டில் எவ்வளவு புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது என்று ஆர்டிஐ போட்டு கேட்டபோது, கிடைத்த பதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.
இந்த நிதியாண்டில் ஒரே ஒரு புதிய ரூ. 2,000 நோட்டு கூட அச்சடிக்கப்படவில்லை என்று ஆர்பிஐ பதில் கூறியுள்ளது.
3,542.991 மில்லியன் புதிய ரூ.2,000 நோட்டுகள் 2016-17 நிதியாண்டில் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டது. அடுத்த நிதியாண்டில் 111.507 மில்லியன் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டிலேயே புதிய ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது வெகுவாக குறைக்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் அதாவது 2018-19 நிதியாண்டில் 46.690 மில்லியன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
உயர் மதிப்புடைய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சடிக்கப்படாததற்கு முக்கியமாக இரு காரணங்கள் இருக்கக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுவது கருப்புப் பணம் மற்றும் லஞ்சம். உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் கூறிய தகவலின் படி,
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் குறிப்பாக ரூ. 2,000 நோட்டுகள் கருப்புப்பண புழக்கத்தை எளிமையாக்கி விட்டதோடு, லஞ்சத்தையும் ஊக்குவிக்கிறது.
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் 100 பண்டல்களைச் சேர்த்தால் எளிதில் 2 லட்சம் ரூபாயை எடுத்துச் செல்ல முடியும். இது ஊழல் பெரிச்சாளிகளுக்கு சாதகமாக இருக்கிறது. என்ன காரணத்திற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது எடுக்கப்பட்டு புதிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டனவோ அதன் அடிப்படை சித்தாந்தமே இங்கே தோற்றுப் போய் இருக்கிறது.
இதை மனதில் வைத்தே ஆர்பிஐ மற்றும் நிதியமைச்சகம் சோதனை அடிப்படையில் ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தை குறைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதற்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுவது கள்ள நோட்டுகள். உளவுத்துறை தகவலின்படி பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் இந்திய சந்தையில் புழக்கத்ததில் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரூபாய் நோட்டுகள் உயர் தரமானவையாக இருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.50 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுகளை கண்டறிந்த பின்னர் மீண்டும் புதிய ரூ. 2,000 நோட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கலாம்.
உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் இருப்பது கருப்புப் பண பரிமாற்றத்தை தடுப்பதோடு ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும் உதவும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் உதவி: Business Today
