வேர்ல்ட் பேமஸ் சமையல் போட்டியில் 1.25 கோடி ரூபாய் பரிசுடன் முதலிடம் வென்ற தமிழர்!
உலக பிரபல குக்கிங் ஷோவான ‘மாஸ்டர் செஃப்’ ஆஸ்திரேலியா’வின் 11வது சீசனில், டைட்டில் வின்னர் என்ற பட்டத்துடன், 1.25கோடி ரூபாய் ரொக்கப்பரிசை பெற்றது யார் தெரியுமா? மதுரையைப் பூர்விகமாக கொண்ட சிங்கப்பூர் வாழ் தமிழர் சசி செல்லையா.
தொலைக்காட்சி சமையல் போட்டி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ஜாம்பவான் ‘மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா’. போட்டியில் கலந்துகொண்டாலே, பங்கேற்பாளர்களுக்கு தனி கெத்து தான். ஆனால், கடந்த சீசனில் பார்வையாளர்களான நமக்கு தான் படு கெத்து. ஏனென்றால், மாஸ்டர் செஃப்பின் இறுதிப் போட்டியில் இதுவரை யாரும் பெற்றிடாத 93 மதிப்பெண்களை பெற்று பட்டத்தை பறித்த சசி செல்லையாவின் பூர்விகம் மதுரை. ஆம், அவருடைய தாத்தா, பாட்டி மதுரையைச் சேர்ந்தவர்கள். இங்கிருந்து சிங்கப்பூருக்கு ஷிப்ட்டாகியது சசி செல்லையாவின் குடும்பம்.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து, பட்டம் பெற்று அவர், அந்நாட்டு காவல் துறையில் பணியாற்றியுள்ளார். பின்னே, அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து சிறைக்காவலராக பணியாற்றி உள்ளார். அச்சமயத்தில் அவர் விரும்பி உண்ணும் ஆசிய உணவுகள் எளிதாய் கிடைக்காமல் போக, வீட்டிலே சமைக்க தொடங்கியுள்ளார். அங்கு தான் தொடங்கியது சசியின் சமையல் பயணம். ஆம், சசியின் சமையல் பயணம் தொடங்கியதே 2012ம் ஆண்டில் தான்.
“சிறு வயதிலே அம்மாவும் அத்தையும் சமைத்தால், கிச்சனிலே தான் இருப்பேன். அப்போதிருந்தே சமையல் மீது ஒரு ஆர்வம் என்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தபோது தான் தேவை ஏற்பட்டது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்தோம். தென்கிழக்கு ஆசிய உணவுகள் சாப்பிடனும்னு அவ்ளோ ஆசையா இருக்கும். ஆனா, அவ்வளவு ஈசியா கிடைக்காது. சோ, நானே சமைக்க ஆரம்பித்தேன். நான் சமைத்ததை சாப்பிட்ட அனைவரும், புதுசா ஒரு ஓட்டல் ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டு இருப்பாங்க. அப்புறம் நண்பர்கள் வீட்டு பர்த்டே பங்கஷனுக்கு நானே சமைத்து கொடுப்பேன். மத்தப்படி, எனக்கு உணவு துறையில் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. ஏன்... மாஸ்டர் செஃப் போட்டியில் கலந்துக்கொள்ளவும் முழுக் காரணம் என் மனைவி தான்,” என்கிறார் அவர்.
7 மாத படப்பிடிப்பு, 24 போட்டியாளர்கள், ஒரே அறையில் தங்கி சமைக்கும் மாஸ்டர்செஃப்பின் இறுதிப் போட்டியில் சசி செல்லையா, 93 மதிப்பெண்கள் பெற்று பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார். அவருக்கு போட்டியாய் களமிறங்கிய பென் போர்ஸ் 77 புள்ளிகள் மட்டுமே பெற்றார் என்பதே ஹைலைட். தி நியூஸ் மினிட் தளத்திற்கு பேட்டி அளித்த சசி,
“உண்மையில், இறுதிப்போட்டியில் வெற்றியாளராக என் பெயரை அறிவித்த தருணம் கிளாசிக் மூவி போன்றது எனக்கு. ஒவ்வொரு முறை அந்த எபிசோட்டை பார்க்கும் என்னை அறியாமல் எழும் ஒரு மகிழ்வு, புல்லரிப்பை அளிக்கும். இறுதிப்போட்டியில், என் மனைவி, மகன்கள் மற்றும் அம்மா முன்பு சமைத்தேன். அதுவே எனக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. சமைக்கையில், ‘என் பசங்க வந்திருக்காங்க. அவர்களுக்கு நான் ரோல்மாடலாக இருக்கிறேன். இந்த இடத்தில் பலத்தை இழந்துவிடக்கூடாது.’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டே சமைத்தேன்.” என்றார்.
தொடர்ந்து ஏழுமாதங்கள் நடக்கும் படப்பிடிப்பு. நோ இன்டர்நெட். ஒரு வாரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போன்கால்களுக்கு மட்டுமே அனுமதியுண்டு. போட்டியாளர்கள் சமையலில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்ற கடுமையான விதிகள். நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே இந்திய மற்றும் ஆசிய சுவைகளை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார் சசி.
சோ, உங்களுக்கு பிடித்தமான இந்திய உணவு? என்று கேட்டதற்கு உடனடியாக...
“கண்டிப்பாக, பிரியாணி தான்... எனக்கு காரசாரமான உணவுகள் மீது காதல் உண்டு. வீட்டில் எப்போது சமைத்தாலும், அது காரசாரமான உணவாகத்தான் இருக்கும்.” என்றார் பளீச் புன்னகையுடன்.
சசி ஆல்ரெடி, அடுத்த கட்ட நகர்வாய், ரெஸ்ட்ராண்ட் திறந்து சக்சஸ்புல்லாய், சமையல் உலகிலே தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்துவிட்டார். இந்திய மற்றும் ஆசிய உணவுகளால் நிரம்பிய மற்றொரு ரெஸ்டாரண்ட்டையும் வெகு விரைவில் ஆஸ்திரேலியாவில் திறக்கவுள்ளார். மேலும், அந்த உணவகத்தில் விடுதலையாகிய கைதிகளை பணிக்கு அமர்த்தும் திட்டத்தில் இருக்கிறார்.
“உணவில் சைனீஸ், மலாய், இந்தியன் என மூன்று வெரைட்டிகளையும் இணைக்க முயற்சித்து வருகிறேன். ஆஸ்திரேலியாவில் நிறைய பாப் அப் நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தபின், ரெஸ்டாரன்ட்டை திறக்கஉள்ளேன். அங்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அளித்து, பணியில் அமர்த்தலாம் என்றுள்ளேன். சிறைச்சாலையிலே உணவுப்பொருள்களை பேக்கிங் செய்தல், பேஸ்ட்ரி உணவுகள் தயாரிப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறையில் இருந்து வெளியேவந்த பிறகு அவர்கள் வேலையில் சேர, போராட வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை தீட்டியுள்ளேன்,” என்றார் அவர்.
தகவல்கள் உதவி : vogue India and The news minute