பார்பி-கென் கல்யாணம்; குடும்பம் நடத்தும் பார்பி - யூடியூப்பில் வீடியோ போட்டு கலக்கும் கடலூர் பார்பி லவ்வர்!
ஒரு பொம்மைக்கும், பொம்மைக்கும் கல்யாணம் செய்து வைத்து அதை ஊரே பார்க்கும் க்யூட் சீரியலாக யூடியூப்பில் பதிவேற்றி, அதை காண்பதையே பார்பி அன்ட் மினியேச்சர் லவ்வர்களின் லாக்டவுன் தெரபியாக்கியுள்ளார் கீர்த்தனா. லாக்டவுனில் தொடங்கப்பட்ட யூடியூப் சேனல் ஹிட்டடித்ததில் 1000 டாலர் வருவாய் ஈட்டுகிறார்.
ஜிமிக்கி கம்மல், ஒட்டியாணம், வளையல், தலை நிறைய பூ, பட்டுப் புடவை என மணப்பெண் லுக்கில் கையில் காபியுடன் வந்து நிற்க, நாற்காலியில் அமர்ந்திருந்த மாப்பிள்ளை காபியை குடித்து, திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, இருவரது திருமணம் பார்பிகளால் நிச்சயிக்கப்படுகிறது. என்னது பார்பியா...?
மணப்பெண்ணாக பார்பி, மணமகனாக கென் பொம்மை என தென்னந்திய திருமணத்தின் சகல நிகழ்வுகளையும் மினியேச்சர் வெர்ஷனில் பார்பிகளை கொண்டு ப்ளே செய்து யூ டியூப்பில் கீர்த்தனா அப்லோடும் வீடியோக்கள் தான் பார்பி அன்ட் மினியேச்சர் லவ்வர்களின் ரீசென்ட் லாக்டவுன் தெரபி.
நம்மூர் ஓடு வீடு, ஆடு, மாடுகளின் பொம்மைகளுடன், சேலைகள் அணிந்த பார்பி பொம்மைகள் வீட்டை சுத்தம் செய்வது, மாட்டை குளிப்பாட்டுவது என நம் லைப்ஸ்டைலை அப்படியே பிரதிபலித்துள்ளார்.
'பார்பி டைனி ஃபுட்' ’Barbie tiny food' எனும் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட யூடியூப் சேனலில் அப்லோடு செய்யப்பட்டுள்ள வீடியோக்களில், ஒவ்வொரு வீடியோவிற்கும் மில்லியன் கணக்கான வியூஸ்கள் கொட்டிக் கிடக்கின்றன.
மணப்பெண் பார்க்க வர்றதுல தொடங்கி, நலங்கு, பந்தகால் ஊன்றுதல், நிச்சயதார்த்தம், கல்யாண ஷாப்பிங், மெகந்தி பங்ஷன், திருமணம் வரை பார்பி தொடராக இருநாளுக்கு ஒருமுறை அப்லோடு செய்யப்படும் வீடியோ ஒவ்வொன்றும் செம க்யூட்டு. அதைவிட, தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ், நியூ இயர் என பண்டிகைகளை பார்பிகள் கொண்டாடும் வீடியோக்கள் அத்தனையும் வேறமாதிரி அழகு.
பார்பி யூட்யூப் பின் இருப்பவர் யார்?
கடலுார் மாவட்டம் குறிஞ்சிபாடியைச் சேர்ந்த கீர்த்தனா, சிறுவயதில் இருந்தே பார்பி லவ்வர். லாக்டவுன் நாட்களின் வெறுமை நீக்க தத்தமவர்களும் அவர்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து கொள்ள, கீர்த்தனா லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆன யூடியூப் சேனல் துவங்க எண்ணியுள்ளார். யூடியூப்பில் எது சார்ந்த வீடியோக்களை பதிவேற்றுவது என சிந்திக்கத் துவங்கியவரது மனதில் தோன்றிய முதல் யோசனை பார்பி.
மேலைநாட்டு பார்பிக்கு நம்மூர் வடிவம் கொடுத்து, நம் கலாச்சாரத்தையும், நம் வாழ்க்கைமுறையும் பிரதிபலிக்கத் தொடங்கினார். இன்று, 8 லட்சம் சப்ஸ்கிரைபர்களுக்கு மேல் அதற்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளார். இவர்கள் தொடங்கிய ஓர் ஆண்டிலே சேனல் பெற்றிருக்கும் மொத்த வியூஸ் 7,08,43,292.
"எங்க அம்மா குறிஞ்சி டாட் காம் என்ற பேர்ல யூடியூப் சேனல் வச்சிருக்காங்க. அவுங்க, கிட்டதட்ட 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸோடு இருக்கிற யூடியூப் செலிபிரிட்டி. வீட்டிலேயே அப்படி ஒருத்தர் இன்ஸ்பிரேஷனா இருக்கிறனால, எனக்கும் ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணனும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன். அதற்கு சரியான நேரம் வந்ததும், சேனல் ஓபன் பண்ணிட்டேன்.
சேனல் ஆரம்பிக்கனும்னு நினைச்ச உடனே எனக்கு டக்குனு தோணுனது மினியேச்சர் தான். ஏன்னா? எனக்கு சின்ன வயசுல இருந்தே மினியேச்சர் பொருள்கள், டால்ஸ்னா ரொம்ப பிடிக்கும். ஆனா, மினியேச்சர் குக்கிங் நிறைய பேரு பண்ணிட்டு இருந்தாங்க. அதனாலே, நான் கொஞ்சம் யுனிக்கா பண்ணனும்னு நினைச்ச அப்போ,
ஃபாரினர்ஸ் பார்பி பொம்மைகளே ஷாப்பிங் பண்ற மாதிரியும், டே டூ டே லைஃப்பை பார்பி வச்சு ரீகிரியேட் செய்து வீடியோ எடுத்து அப்லோடி வந்தனர். எனக்கு அதை பார்த்ததும் நம்ம மக்களோட லைஃப் ஸ்டைல், பண்டிகைகள், கல்யாணம் சம்பிரதாயங்கள் பண்ணலாம்னு யோசனை வந்தது. நம்முடைய கலாச்சாரமும் குழந்தைகளுக்கு சென்று அடையும்னு வேறு தோன்றியது.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி சேனல் தொடங்கி, வீடியோ போஸ்ட் பண்ண ஆரம்பிச்சேன். மினியேச்சர் குக்கிங் ட்ரென்டிங்கில் இருப்பதால், அதற்குத் தேவையான பாத்திரங்கள், அடுப்பு எல்லாம் கடைகளிலே கிடைக்குது. ஆனா, நான் தீபாவளி, பொங்கல் எல்லாம் மினியேச்சர் வெர்ஷனில் வீடியோ எடுப்பதால், நம்ம ஊரு ஸ்டைலில் பொம்மைகளுக்கு டிரஸ், வீடு, ஃபர்னிச்சர்ஸ்னு நிறைய பொருள்களை கையிலேயே தான் செய்தாகணும், அதெல்லாம் கடைகளில் கிடைக்காது.
அதுலயும், கிராமத்து பாணியில் ஓடு வீடு செய்வதற்குலாம் ஒரு வாரமாச்சு. இதெல்லாம் பேக் வொர்க்காக பண்ணிட்டா கூட, வீடியோ எடுப்பதே ரொம்ப கஷ்டமாக இருக்கும். டைலாக் பேசும் போது பொம்மையை கரெக்ட்டா ஷேக் பண்ணனும், குட்டி குட்டி பொருள்களை வைத்து பண்றதால 5 நிமிஷ வீடியோ எடுக்க 1 மணி நேரம் இல்ல அதுக்கு மேலேயும்கூட ஆகிரும். இவ்ளோ கஷ்டப்பட்டு பண்ணாலும், வியூஸ் வராது.
மக்களுக்கு பிடிச்சிருக்கா, பிடிக்கலையானு வேறு ஒரு பக்கம் குழப்பமா இருந்தது. ஏன்னா உழைப்போடு சேர்ந்து காசும் நிறைய இன்வெஸ்ட் பண்ணிட்டு இருந்தேன். பார்பி டால் ஒன்னும் ஒன்னும் 1000ரூபாயில் தான் இருக்கும், அது போக கிச்சன் செட்லாம் காஸ்ட்லி. அதனால, எங்க அப்பா இதெல்லாம் குழந்தைங்க பாக்குறது, அவ்ளோ வியூஸ் வராது எதுக்கு இவ்ளோ செலவு பண்றனு திட்டுவாங்க.
ஏன், நான் பண்ற வீடியோ லிங்க்-ஐ கூட யாருக்கும் அனுப்ப மாட்டேன். டக்குனு, பாக்குற யாருக்கும் இது புரியாது சின்னப்பிள்ளதனமா பண்ணிட்டு இருக்குதுனு தான் நினைக்க தோணும். ஆனா, எனக்கு என் சேனல் ரீச் ஆகிரும்னு நம்பிக்கை இருந்தது. அம்மாவுடைய யூடியூப் சேனல் எப்படி பிக்-அப் ஆச்சுனு தெரியும். இத்தனைக்கும் மத்தியில் நான் வீடியோ அப்லோடுவதை நிறுத்தவில்லை.
அதே மாதிரியே, ஹவுஸ் வொஃயிப்-வோட காலை வேளை எப்படியிருக்கும்? சாயங்காலம் என்ன பண்ணுவாங்கனு ஒரு வீடியோ பண்ணேன். அது மில்லியன் வியூஸ் போக ஆரம்பிச்சிருச்சு. அதுக்கு அப்புறம் தான் கான்பிடென்டுடன் பண்ண ஆரம்பிச்சேன். இத்தனைக்கும் சேனல் ஆரம்பித்த அப்போ நான் 3 மாதம் கர்ப்பமாக இருந்தேன். அந்த சமயத்தில் கீழே இப்படி உட்காரக் கூடாதுனு நிறைய திட்டு வாங்கினேன். டெலிவரிக்கு ஹாஸ்பிட்டலுக்கு போகிற முந்தின நாள் கூட ஒரு வீடியோ அப்லோடு பண்ணிட்டு தான் போனேன்.
குழந்தை பிறந்த அப்புறம் அம்மா ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. அவங்க இல்லன்னா பிறந்த குழந்தைய வச்சிட்டு எதுவுமே பண்ணியிருக்க முடியாது. என் தங்கச்சி ஸ்ரீலேகா பொம்மைகளை கையாள, நான் கேமிரா, எடிட்டிங், பார்பிக்கு தேவையானதை செய்வது எல்லாத்தையும் பார்த்து கொள்வேன். சப்ஸ்கிரைபர்சும் கமணெ்ட் பாக்சில் நிறைய ஐடியா கொடுப்பாங்க. அந்த காலை, மாலை ரோட்டீன் வொர்க் வீடியோ ஹிட்டாகியதுடன், கல்யாண சீரிஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணேன். அந்த வீடியோஸ் ரொம்ப நல்லா ரீச் ஆகுச்சு. அந்த சீரிஸ்காக நிறைய மெனகெட்டேன்.
பொம்மைகளுக்கு கல்யாண டிரசுக்கு தேடித் தேடி கடைசிலே என்னோட டிரஸ்ஸை கிழிச்சு ரெடி பண்ணேன். கிட்டத்தட்ட மணப்பெண் பார்க்க வர்றதுல தொடங்கி, நலங்கு, பந்தகால் ஊன்றுதல், நிச்சயதார்த்தம், கல்யாண ஷாப்பிங், மெகந்தி பங்ஷன், திருமணம், இப்போ கர்ப்பமாகியிருப்பது வரை நம்முடைய வாழ்க்கையை பார்பியில் பிரதிபலித்து பண்ண சீரிஸ் அது. தென்னிந்திய கல்யாணம் எப்படியிருக்கும்னு பாக்கிற எல்லோருக்குமே எளிதில் புரியும்.
நம்முடைய லைஃப் ஸ்டைல், பண்டிகைகள், ட்ரெடிஷன் எல்லாவற்றையும் குழந்தைகள் அவுங்களுக்கு ஈஸியா கனெக்ட் செய்து கொள்கிற பொம்மைகள் வழியாகவே தெரிந்து கொள்ளுவாங்க. நான் கரகெ்ட்டா தான் பயணிக்கிறேன் என்பதற்கு சாட்சியாக, எங்களை போல நிறைய பேரு சேனல் ஓபன் பண்ணியிருக்காங்க. அதுவே சந்தோஷம் தான்.
நம்முடைய டே டூ டே லைஃபை பிரதிபலிக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதால், நாம் இப்போது சந்திக்கும் சம்பவங்களைக் கொண்டு ஒவ்வொரு வீடியோவையும் எடுக்க ஆரம்பித்தேன். அப்படிதான், எலெக்ஷன் சமயத்தில் பார்பியும், கென்னும் ஓட்டு போட சென்றது போலும், கென் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தது போன்ற கான்செப்டில் வீடியோ அப்லோடினேன்.
பொம்மைகள் எல்லாம் ஆர்டர் செய்து டெலிவரியாகிய அன்று ஒரு நாள் முழுவதும் நானும், என் தங்கச்சியும் பொம்மையை வைத்து விளையாடினோம்.
மிடில் கிளாஸ் குழந்தைகளுக்கு பார்பி காஸ்ட்லியான பொம்மை இல்லையா. எங்களுக்கும் சின்னவயசுல பொம்மை வச்சு விளையாடலாம் வாய்ப்பு கிடைக்கல. இப்போ, கிட்டத்தட்ட எங்க சின்ன வயசு ஆசையெல்லாம் நிறைவேறுது. கண்ணில்படும் மினியேச்சர் பொருள்களையெல்லாம் வாங்கி குமிக்கிறேன். வீட்டில் எதுவும் சொல்றதில்லை. எப்படி சொல்லுவாங்க, இதே பொம்மை யூடியூப்பில் 70,000 ரூபாய் வருவாய் ஏற்படுத்திக் கொடுத்திருக்கு."
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்ததை பகிர்ந்த கீர்த்தனா, எனக்குக் கிடைக்கும் ஆனந்தம் இன்னொரு பார்பி லவ்வருக்கு மட்டுமே புரியும் என்கிறார்.
பார்பி டைனி ஃபுட் யூடியூப் பக்கம் :
முருகன்-வள்ளியாக மிளிரும் ‘பார்பிகள்’ - அமெரிக்காவில் இருந்து பிரியாவின் கைவண்ண பொம்மைகள்!