உள்ளடக்கம் உருவாக்குவதில் வெற்றி பெற்றதன் ரகசியம் என்ன? கிரியேட்டர் மாநாட்டில் தன்மே பட்!
யுவர்ஸ்டோரியின் கிரியேட்டர்ஸ் மாநாட்டில் யூட்யூபர், காமெடியன், பெர்ஃபார்மர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், ஏஞ்சல் முதலீட்டாளர் என புதுப்புது பரிமாணம் எடுத்து வரும் தான்மே பட் தன்னுடைய வெற்றிப் பயணத்தின் ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டார்.
யூட்யூபர், காமெடியன், பெர்ஃபார்மர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் என்பதையெல்லாம் தாண்டி தற்போது ஒரு ஏஞ்சல் முதலீட்டாளர் என புதிய பரிமாணம் எடுத்துள்ளார் தன்மே பட்.
இவர் தனது பயணம் குறித்தும் வெற்றியின் ரகசியம் குறித்தும் கிரியேட்டர்ஸ் இன்க் மாநாட்டில் பகிர்ந்துகொண்டபோது மிகவும் தன்னடக்கத்துடன் தான் உண்மையில் அப்படி எதுவும் செய்யவில்லை என்கிறார்.
“ஒரு விஷயத்தை நாம் செய்திருக்கிறோம். அதை எப்படிச் செய்தோம் என அதிலிருந்து நம்மை வேறுபடுத்திப் பிரித்துப் பார்க்காமல் நம்மால் எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்?” என கேள்வி எழுப்புகிறார் தன்மே.
யுவர்ஸ்டோரியின் 2022 கிரியேடிவ் மாநாட்டில் யுவர்ஸ்டோரியின் நிறுவனரும் சிஇஓ-வும் ஆன ஷ்ரத்தா ஷர்மாவிடம் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். இருப்பினும், உள்ளடக்கம் உருவாக்கும் உத்தியை சில ரகசியங்கள் மேம்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார்.
உங்கள் வேலையில் மகிழ்ச்சியைத் தேடுங்கள்
”உங்கள் வேலையை நீங்களே ரசிக்காமல் போனால், மற்றவர்கள் எப்படி ரசிப்பார்கள்?” என்கிறார்.
உங்கள் வேலையை மகிழ்ச்சியாக ரசித்து அனுபவியுங்கள். இலக்குகளில் பிடிவாதம் காட்டுவது சரியல்ல.
இத்தகைய அணுகுமுறையே கிட்டத்தட்ட இருபதாண்டு கால பணி வாழ்க்கையின் வெற்றிக்கு உதவியதாக தன்மே பட் சுட்டிக்காட்டுகிறார்.
நீங்களே உங்களை ஆச்சரியப்படுத்திக்கொள்ளுங்கள்
உள்ளடக்கம் உருவாக்கும் செயல்முறையில் தொடர்ந்து தன்னைத் தானே ஆச்சரியப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கிறார்.
All India Bakchod நிறுவனத்தின் ஆரம்ப நாட்களில் ஸ்கெட்ச் தயாரித்தது, ‘ஆலியா பட் – ஜீனியஸ் ஆஃப் தி இயர்’ என்கிற பெயரில் வைரலான பிரபல மாக்குமெண்டரி (Mockumentary) உருவாக்கியது, ரோஸ்ட்ஸ் என்கிற நகைச்சுவை வகைகள் உருவாக்கியது என அனைத்திலும் தொடர்ந்து ஆச்சரியப்படுத்திக்கொண்டது பலனளித்தது என்பதை நினைவுகூர்ந்தார்.
புதுமையை ரசிக்கவேண்டும்
உள்ளடக்கம் உருவாக்கும் பிரிவில் தன்மே கவனம் செலுத்தாத பகுதிகளே இல்லை எனலாம். ஆனால், மாறி வரும் சூழலுக்கேற்ப புதுமை படைக்கும் திறன் பணி வாழ்க்கை முழுவதும் உதவியது என்கிறார்.
தொடர்ந்து செயல்படும்போது சூழலுக்கேற்ப எளிதாக மாறிவிட முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.
மறு சிந்தனையும் மறு உருவாக்கமும்
உள்ளடக்கம் உருவாக்கும் ஒவ்வொருவரும் செய்வதுபோல் தன்மே தன்னிடமே கேட்டுக்கொள்ளும் கேள்வி இதுதான்:
“என்னால் உள்ளடக்கம் உருவாக்காமல் ஐந்தாண்டு காலத்தைத் தள்ளமுடியுமா? ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல நம்மை வேறுபடுத்திப் பிரித்துப் பார்க்கவேண்டும் என்பதும் நம் தனிப்பட்ட சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதுமே இதற்கான பதில் என்கிறார்.
இருப்பினும் இணையத்தில் ஏராளமானோர் உள்ளடக்கம் உருவாக்குகின்றனர். பெரும்பாலானோர் அல்காரிதங்களை நம்பியிருக்கின்றனர். ஆனால், பெரியளவில் முன்னேறுவதற்கு அல்காரிதங்களை சார்ந்திருப்பது சரியல்ல என்கிறார் தன்மே.
மறு உருவாக்கம் பற்றி அவர் வலியுறுத்தும்போது,
“தொடர் மறு சிந்தனையும் மறு உருவாக்கமும் அவசியம். அல்காரிதத்தின் தயவில் நீண்டகால அடிப்படையில் பலன் கிடைக்காது. அத்தகைய நீண்டகால வளர்ச்சிக்கு மறு உருவாக்கம் முக்கியம்,” என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: நயினா சூட் & டென்சின் பெமா | தமிழில்: ஸ்ரீவித்யா