கரையான் அரித்த கூரை வீட்டில் பிறந்த ஐஏஎஸ்: வயநாட்டில் கலெக்டராகிய முதல் ஆதிவாசி பெண்!

2018ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, வயநாடு பகுதியைச் சேர்ந்த ஆதிவாசி பெண் தன்யாஸ்ரீ புதிய சாதனை படைத்துள்ளார்.
3 CLAPS
0

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொழுவண்ணா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் சுரேஷ்- கமலம் தம்பதியினர். குருச்யா என்ற ஆதிவாசி பிரிவைச் சேர்ந்த இவர்களின் மகள் ஸ்ரீதன்யா (26). ஏழ்மை காரணமாக குடிசை வீட்டில் வசித்து வரும் தன்யாவுக்கு, சிறு வயதில் இருந்தே கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார்.

ஓரு முறை அந்த ஊருக்கு வந்த வயநாடு பெண் கலெக்டரின் நடவடிக்கைகள் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் மரியாதையால் ஈர்க்கப்பட்ட தன்யா, தானும் இதே போன்ற நிலைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தார்.

இதற்காக சிறு வயதில் இருந்தே தீவிரமாக படித்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் முதன்மையாக வந்தார். வீட்டில் செய்தித்தாள் வாங்கித் தரக்கூட இயலாத அளவிற்கு வறுமை. ஆனாலும், தன் இலக்கில் இருந்து விலகிச் செல்லவில்லை அவர். கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள போராடினார்.

தீவிர உழைப்பின் பலனாக, தேர்வுகளில் வெற்றி பெற்று, ஒரு வழியாக ஐஏஎஸ் நேர்காணல் செல்வதற்கு தேர்வானார் தன்யா. ஆனால்,

டெல்லி செல்லக்கூட கையில் காசில்லை. தன் நண்பர்கள் பலரிடம் கடனாகப் பெற்ற ரூ.40 ஆயிரத்துடன் டெல்லி சென்றார். வறுமை தன் கனவைத் தின்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த தன்யா, நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தார்.

பின்னர் மீண்டும் சொந்த ஊர் திரும்பிய தன்யா, நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைக்க, தன் பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலைக்குச் சென்று வந்தார். சமீபத்தில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார் தன்யா. இதில், அவரது இடது கை எலும்பு முறிந்தது. உடைந்த கையோடு தன் பெற்றோருக்கு இயன்ற உதவிகளைச் செய்து வந்தார் அவர்.

இந்நிலையில், 2018ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. அதில்,

தன்யா 410வது இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளது தெரிய வந்தது. தேர்வு முடிவுகளால் தன்யாவும், அவரது பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தன்யாவின் வெற்றியை தங்களது வெற்றியாக அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர். காரணம், கேரளாவில் இருந்து ஆதிவாசி பெண் ஒருவர் கலெக்டர் ஆவது இதுவே முதல்முறை ஆகும். தங்கள் இன மாணவர்கள் செல்ல புதிய பாதையை போட்டு வைத்த தன்யாவிற்கு அவர்கள் நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தன்யாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனும், தனது வாழ்த்துக்களை தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘சமுதாயத்தில் பின்தங்கிய நிலையை எதிர்த்து ஸ்ரீதன்யா போராடி வெற்றி கண்டுள்ளார். அவரது சாதனை பிற மாணவர்களுக்கும் வரும் காலத்தில் ஊக்கமளிப்பதாய் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, வயநாடு மக்களவைத் தொகுதியில் தான் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் போட்டியிடுகிறார். எனவே, தன் தொகுதியில் இருந்து கலெக்டராகி இருக்கும் தன்யாவுக்கு அவரும் டிவிட்டர் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Photo Courtesy: Malayala Manorama

அந்தப் பதிவில் அவர், “தன்யாவின் கடின உழைப்பும் அவரது அர்ப்பணிப்பும் கனவை நினைவாக்க உதவியுள்ளது. தான் தேர்வு செய்யும் பணியில் மிகப்பெரும் வெற்றியை பெற ஸ்ரீதன்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கரையான் அரித்த ஓலை வீட்டில் இருந்து உருவாகி இருக்கும் கலெக்டரான தன்யா, தன்னைப் போல் பின் தங்கிய குடும்பங்களில் இருந்து வெளிவரும் ஏழ்மையான மாணவர்களுக்கு, ‘நிச்சயம் தங்களாலும் கலெக்டராக முடியும்’ என நம்பிக்கை டானிக் தரும் ஒரு முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.

தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த தன்யா, தனது வெற்றி குறித்து கூறுகையில்,

“சாதிப்பதற்கு எந்த சூழ்நிலையும் தடை இல்லை. என்னுடைய வெற்றி இன்னும் பல பேருக்கு உந்து சக்தியாக இருக்கும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

Latest

Updates from around the world