'சரவண பவன்' ராஜகோபால் கதை: தரைத் தூக்கம் தொடங்கி தனி ராஜாங்கம் வரை!
கேள்வி: உங்கள் பகுதியில் உணவகங்களே இல்லை என்று மக்கள் சலித்துக்கொண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
பதில்: ஓர் உணவகத்தைத் திறப்போம்.
தவறு, உள்ளூரில் மட்டுமின்றி நாடு முழுவதிலும், வெளி நாடுகளிலும் சங்கிலித் தொடர் உணவகங்களைத் திறக்க வேண்டும். கே.கே.நகரில் வசிக்கும் ஒருவர் மதிய உணவு சாப்பிட டி.நகர் வரை செல்ல வேண்டியிருக்கிறதே என்ற தன்னிடம் அலுத்துக்கொண்டபோது இதைத்தான் செய்தார் பி.ராஜகோபால்.
ஒரு பரபரப்பு சினிமாவைப் போன்றது பி.ராஜகோபாலின் கதை. இதில் வெற்றிக்கான அம்சங்கள் நிறைய உள்ளன. விழுந்து வாறிய அடி முதல் சிகரம் தொட்ட எழுச்சி வரையில் தனிக்காட்டு ராஜாவாக குற்றம், உணர்வுபூர்வ முயற்சிகள், அதிகாரம் என பல அம்சங்களையும் உள்ளடக்கியவை.
இந்தியாவில் 33 கிளைகளுடன், வெளிநாடுகளில் 45-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நிமிர்ந்து நிற்கிறது 'சரவண பவன்'. அவர் தனது சுயசரிதையில் சொல்கிறார், "என் இதயத்தில் வெற்றியை நிர்ணயித்தேன்."
குழந்தைப் பருவம்
தமிழகத்தில் புன்னையடி எனும் சிறு கிராமத்தில் 1947-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் ராஜகோபால். அந்தக் கிராமத்துக்கு பஸ் வசதி கூட இல்லை. வறுமை காரணமாக ஏழாம் வகுப்பிலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார். ஓர் உணவகத்தில் டேபிள் துடைக்கும் வேலையைச் செய்த அவர், இரவில் தரையிலேயே படுத்து உறங்கினார்.
சிறிது நாளில் தேநீர் போட கற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஒரு மளிகை கடையில் பணிபுரிந்தார். தன் தந்தை மற்றும் மைத்துனரின் உதவியுடன் சொந்தமாக ஒரு மளிகை கடையை ஆரம்பித்தார். தொழில் ரீதியில் இதுவே அவருக்கு முதல் முயற்சி என்பதால் நிறைய சவால்களை எதிர்கொண்டார். இளம் வயது என்பதால் ஒரு மளிகை கடையை நிர்வகிப்பது என்பது அப்போது பெரும் சவாலானதாக இருந்தது. நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு வழியாக தனது தன்னம்பிக்கையால் சவால்களை எதிர்கொண்டு வெற்றிக்கொடி நாட்டத் தொடங்கினார்.
தன் மளிகைக் கடையில் 1979-ல் விற்பனையாளருடன் நடந்த மேற்கண்ட உரையாடலின் மூலம் உதித்த யோசனையை செயல்படுத்தியதன் விளைவாக 1981-ல் உதயமானது சரவண பவன். சுவையைக் காட்டிலும் பசி தீர்ப்பதே அத்தியாவசியம் என்ற போக்கு நிலவிய காலகட்டம் அது. தேவை அதிகம் என்பதால் தொழிலில் பேரெழுச்சி ஏற்பட்டது.
ஊழியர்கள் நலனில் அக்கறை
வயிறு நிரம்பினால் போதும் என மக்கள் கருதி வந்த காலத்திலும் உணவின் தரத்திலும் வாடிக்கையாளர்களின் நல்ல அனுபவத்திலும் எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்பதில் முழு கவனம் செலுத்தினார் ராஜகோபால். மலிவு விலைப் பொருட்களை வாங்குவோம், ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்போம் என்றெல்லாம் ஆலோசனை கூறிய அதிகாரியை வீட்டுக்கு அனுப்பினார். தரமானது சுவையானதுமான உணவை வழங்கியதால் ஆரம்ப காலத்தில் நஷ்டத்தையே சந்திக்க நேர்ந்தது. ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 அளவில் இழப்பு ஏற்பட்டது. ஆனால், உணவகம் மீதான மதிப்பு கூடக் கூட, அந்த இழப்புகள் எல்லாம் லாபங்களாக மாறத் தொடங்கின.
நல்ல தரமான உணவுகளை வழங்குவது மட்டுமின்றி, ஊழியர்களின் பணிச் சூழலை மேம்பட்டதாக வைத்திருப்பதே சரவண பவனின் வெற்றிக்கு முக்கியக் காரணம். சாப்பாடு தட்டின் மீது வாழை இலை வைக்கும் முறையை ராஜகோபால் பின்பற்றுவதற்குக் காரணம், வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, அந்தத் தட்டைக் கழுவும் ஊழியர்களுக்கு வேலை எளிதாகும் என்பதற்காகவே.
ஊழியர்களை மாதம்தோறும் தலைமுடியைத் திருத்தச் சொல்கிறார். இதனால், உணவு மீது முடி விழுவது தவிர்க்கப்படுவதுடன், ஊழியர்களும் நல்ல தோற்றத்தை வெளிப்படுத்த முடியும். அடுத்த நாள் வேலையில் சோர்வு ஏற்படும் என்பதால், இரவுக் காட்சி சினிமா பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.
ஊழியர்களுக்கு முதலில் வேலை உறுதித்தன்மையை ராஜகோபால் தருகிறார். இருப்பிடத்தையும் நிர்வாகமே வழங்குகிறது. சரியான கால இடைவெளியில் ஊதிய உயர்வும் தரப்படுகிறது. தங்கள் குடும்பம் ஊரில் வசித்தால், அவர்களைப் பார்த்து வருவதற்கும் ஆண்டுதோறும் சிறப்பு விடுப்பு தரப்படுகிறது. ஒவ்வொரு ஊழியரின் முதல் இரண்டு குழந்தைகளுக்கான கல்விக்கும் ராஜகோபால் துணை நிற்கிறார். ஓர் ஊழியருக்கு உடம்பு சரியில்லை என்றால், அவரைப் பார்த்துக்கொள்ள நிர்வாகத்தில் இரண்டு பேரை நியமிக்கிறார். ஓர் ஊழியரின் குடும்பத்தை நல்லபடி பார்த்துக்கொள்ள வழிவகுத்துவிட்டாலே அந்த ஊழியர் மூலம் உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை.
ஆயுள் தண்டனை
சாந்தாரம் கொலை வழக்கில் 2009-ல் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தனது உதவி மேலாளரின் மகள் ஜீவஜோதியின் நெருங்கிய நண்பர்தான் சாந்தாராம். ஜீவஜோதியை மணக்க விரும்பினார் ராஜகோபால். ஆனால், சாந்தாராம் மீது ஆர்வம் கொண்டிருந்தார் ஜீவஜோதி. பல எச்சரிக்கைகளுக்குப் பிறகும் அவர்கள் சந்தித்துக்கொள்வதை நிறுத்தாத நிலையில், சாந்தாராம் கடத்தப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், ராஜகோபால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
நியூயார்க் டைம்ஸ் செய்தியாளரிடம் சரவண பவனின் நலம் விரும்பி ஒருவர் கூறும்போது, " 'இவர் உணவகத்தில் ஏன் சாப்பிடுகிறாய்? ஒரு கொலையாளியில் கல்லாவை நிரப்புகிறாயே' என்று சில நண்பர்கள் கேட்பதுண்டு. 'இதோ பாருங்க... என் அன்றாட வாழ்க்கையில் நான் யாருக்கு பிசினஸ் தருகிறேன் என்பது பற்றி கவலையில்லை. அவர் குடிகாரரா, மனைவியை அடிப்பவரா எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், பிசினஸ் என்று வரும்போது, நல்ல தரமான உணவு கிடைக்கும் வரை அந்த உணவகத்துக்குப் போகத் தயங்கமாட்டேன்' என்பதே அவர்களுக்கான எனது பதிலாக இருக்கும்" என்றார்.
ஆக்கம்: ஆதித்ய பூஷன் த்விவேதி | தமிழில்: கீட்சவன்