வளையல் வியாபாரம் டூ ஐ.ஏ.எஸ் அதிகாரி - உத்வேகம் தரும் மாற்றுத் திறனாளியின் கதை!
மாற்றுத்திறனாளியான ரமேஷ் கோலாப்-பின் வாழ்க்கை கதை!
மாற்றுத்திறனாளியான ரமேஷ் கோலாப்-ன் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருந்திருக்கவில்லை. அவர் சந்தித்த சவால்களும் கொஞ்ச நஞ்சமில்லை. அப்படியிருந்தும் இன்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாக அவர் உயர்ந்ததற்கு அவரது நம்பிக்கையும், தளராத மனமும் தான் காரணம்.
சிறுவயதில் குடும்ப வறுமை காரணமாக வளையல் விற்பனை செய்த அவரது கடந்த கால வாழ்க்கையைப் பார்ப்போம். உண்மையில் பலருக்கும் இது உத்வேகமாக இருக்கும். வளையல் விற்பனையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய 2012 பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரமேஷ், இப்போது ஜார்க்கண்டில் எரிசக்தி துறையில் இணை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ரமேஷ் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பார்ஷி தாலுகாவில், மகாகான் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். ரமேஷின் தந்தை மிதிவண்டி பழுதுபார்க்கும் கடையை நடத்தி வந்தார். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்ததால் பெரிதாக ஒன்றும் சிக்கல் வரவில்லை. அன்றைக்கான உணவுக்கு அவரது வருமானம் போதுமானதாக்கத்தான் இருந்தது.
ஆனால், ரமேஷ் பள்ளி படிக்கும்போதே, அவரது தந்தை தொடர்ந்து குடித்துக் கொண்டேயிருந்ததால், திடீரென்று ஒருநாள் அவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். சிறுவனான ரமேஷூக்கு தந்தையின் இழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வாழ்க்கையின் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்ளத் தயாரானார். ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை அவர் முன் நின்றது.
அதன்பின்னர், குடும்ப வறுமை காரணமாக ரமேஷின் தாய் விமல் கோலாப் அருகிலுள்ள கிராமங்களில் வளையல்களை விற்கத் தொடங்கினார். போலியோ காரணமாக ரமேஷின் இடது கால் பாதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், அவரும், அவரது சகோதரரும், தாயுடன் சேர்ந்து வளையளை விற்கத்தொடங்கினர்.
அன்று, ரமேஷ் அவரது சகோதரர் மற்றும் அவரது தாய் மூவரும் இணைந்து, அங்கிருந்த தெருக்களில், ‘பாங்டே கியா பேங்டே (வளையல்களை வாங்குங்கள்!)’ என்று சத்தமாகக் கத்துவார்கள்... அப்படி கத்தி கத்தி விற்ற காசை வைத்துதான் சிறுவயதில் ஒவ்வொரு நாட்களையும் நகர்த்தி வந்தனர்.
அவர்கள் வசித்த பகுதியில், ஒரே ஒரு தொடக்கப்பள்ளி மட்டுமே இருந்தது, அதனால் ரமேஷ் தனது மாமாவுடன் பார்ஷிக்கு மேல்படிப்புக்காக தங்கச் சென்றார். பள்ளி நாட்களில் நன்றாக படித்தாலும், ரமேஷ் கல்வியில் டிப்ளோமா மட்டுமே படித்தார். ஏனெனில் அப்போது அவர்களால் அதான் முடிந்தது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ஆர்வத்தால், திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைப் படித்து, 2009ல் ஆசிரியரானார்.
அவருக்கு அப்போது ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. தனது கல்லூரி காலங்களில் தாசில்தார் ஒருவரின் உத்வேகம் காரணமாக அரசு அதிகாரியாக வேண்டும் என்று விரும்பினார்.
அவர் ஆசிரியராக இருந்தபோது, அவரது தாயார், சுய உதவிக்குழு மூலம், கடன் வாங்கி கொடுத்தார். தனது மகனின் கனவுக்கான விதையாக அது அமைந்தது. பின்னர்,
ரமேஷ் தான் பார்த்துவந்த ஆசிரியர் வேலையை உதறித்தள்ளிவிட்டு, புனே சென்றார். கடுமையாகப் படித்து ஆறு மாதங்கள் யூ.பி.எஸ்.சி பயிற்சி எடுத்து 2012 ஆம் ஆட்சிப்பணிகள் தேர்வில் வெற்றிபெற்றார்.
உடலில் உள்ள குறையும், வறுமையும் வளர்ச்சிக்கு ஒருபோதும் தடையில்லை என்பதே ரமேஷ் போன்ற பலரும் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றனர்.
தொகுப்பு: மலையரசு