Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்: கனவு வாழ்க்கையை நிஜமாக்கிய சதீஷ் கிருஷ்ணன்!

கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்: கனவு வாழ்க்கையை நிஜமாக்கிய சதீஷ் கிருஷ்ணன்!

Friday December 02, 2016 , 5 min Read

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்... 

விவசாயம் சிறந்தால் ஒரு நாடே உயர்வடைந்து செழிப்புடன் இருக்கும் என்று அன்றே பாடிச்சென்றார் ஒளவையார்! ஆனால் இன்றோ விவசாயத்தொழில் நலிவடைந்த நிலையில், இருக்கும் கொஞ்ச நஞ்ச பாரம்பரிய விவசாயிகளும் இயற்கை முறைகளை கைவிட்டு அதிக லாபம் ஈட்டமுடியும் என்ற தவறான வழிகாட்டுதல்களால், ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விவசாயம் செய்வதால், வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது. 

தொடர் பிரச்சாரங்களும், விழிப்புணர்வு ஒருசிலரை இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வேளாண்மையை நோக்கி கொண்டுசெல்வது மட்டுமே நமக்குள்ள ஆறுதலான விஷயம். அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக வட அமெரிக்க கண்டத்தில் உள்ள கனடாவில் ஐ.டி துறையில் பணியாற்றி வரும் திருச்சியைச் சேர்ந்த சதீஷ் கிருஷ்ணன், அண்மையில் ஏர் கலப்பையை கையில் எடுத்துள்ளார். 

சதீஷ் கிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் நண்பர்கள்

சதீஷ் கிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் நண்பர்கள்


”வயல்களில் மாடு பூட்டி ஏர் உழுவதையும் பெண்கள் நாற்று நடுவதையும் வீட்டு மாடியில் இருந்தே பார்க்கும் அதிர்ஷ்டம் இன்று எத்தனை பேருக்கு கிடைக்கும். கண் எதிரில் வயல் வெளிகள் அனைத்தும் வீட்டு மனைகளாகவும் வணிக கட்டிடங்களாவும் மாறியது சிறு வயதிலேயே மிக ஆழமாக என் மனதில் பதிந்து விட்டது. இதனால் என்றாவது ஒரு நாள் நமக்கென ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய மாட்டோமா என்ற ஏக்கம் எனக்கு இருந்தது,” என்று தொடங்கினார் சதீஷ். 

குழந்தைப்பருவம் மற்றும் பின்னணி

தஞ்சையில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படித்துவிட்டு மேற்படிப்பிற்காக கனடா சென்றார் சதீஷ். தற்போது கனடாவில் ஐ.டி துறையில் மிகச்சிறந்த பணியிலும் உள்ளார். இவரது திறனை பாராட்டி பல ஐ.டி நிறுவனங்கள், தங்களுக்கு ஆலோசனை கூறுவதற்காக சதீஷுக்கு அழைப்பு விடுப்பதனால், அமெரிக்கா, லண்டன், மொராக்கோ போன்ற நாடுகளுக்கு பறந்து கொண்டே இருக்கிறார். 

”இந்த பாராட்டுகளையும், வெற்றிகளையும் என்றுமே நான் பெரிதாக நினைத்ததில்லை. இயந்திரமயமான வாழ்வில் எனக்கு நாட்டமும் வரவில்லை. இது என் வெற்றி அல்ல, எனக்கான உணவை என்று நானே விளைவித்து என் அடுத்த தலைமுறைக்கும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விதைக்கின்றேனோ அது தான் என் வெற்றி,” 

என்று தீர்கமாக பேசுகிறார். ஆனால் இவரது நண்பர்களில் சிலர் சதீஷின் இந்த கருத்தை கேலி செய்துள்ளனர். அவர்களுக்கு நான் பேசுவது புரியாது. ஒரு கார்பரேட் நிறுவனத்தில் வேலை பார்ப்பது தான் வாழ்க்கை என கருதுபவர்களுக்கு எப்படி புரியும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற என் கனவு வலுவானது என்கிறார். 

செல்போனில் ‘Pokemon’ பிடித்து விளையாடுவதைப் பற்றி பெருமையாக பேசும் சமூகத்திற்கு, இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் குதூகலமாக துள்ளி குதித்து வரும் காளைகளை பிடித்து விளையாடுவதை ரசிக்கத் தெரியவில்லை என்கிறார். குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து செல்போனில் அவர்கள் விளையாடுவதைப் பற்றி பெருமையாக பேசுவோருக்கு, குழந்தைகள் மண் வாசனை நிறைந்த காற்றை சுவாசித்து சேற்றில் குதித்து விளையாட வேண்டும் என்ற தனது கனவு புரியாது என்கிறார். சதீஷின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவருக்கு மண்ணின் மீது இருக்கும் காதலையும், பாரம்பரியத்தின் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பையும் வெளிப்படுத்தியது. 

image


ஐடி பணியுடன் ஏர் கலப்பையை எடுத்தது எப்படி?

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருவதைக் கண்டு மனக்குழப்பம் அடைந்ததாக கூறினார் சதீஷ். விவசாயிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் உள்ள இடைவெளியும், விவசாயக் கடனை அடைக்க முடியாமல் போனதும் தான் இதற்குக் காரணம் என்ற தவறான புரிதல்கள் மக்களிடையே இன்றும் பரவலாகக் காணப்படுகிறது - இதற்கு தான் மட்டும் விதிவிலக்கல்ல என்றார். 

”இந்த தவறான புரிதலோடு நான் என்னால் முடிந்த ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று எனது நெருங்கிய நண்பர் வடிவழகனிடம் கூறினேன். இதற்காக நாங்கள இருவரும் விவசாயிகள் சார்பில் இணையதளம் மற்றும் முகாம்கள் அமைத்து விளைபொருள்களை வாடிக்கையாளர்களிடம் நேரடியாக விற்பனை செய்ய வழிவகுக்க வேண்டும் என்ற முயற்சில் ஈடுபடத் தொடங்கினோம்.” 

அந்த சந்தர்ப்பத்தில் எதேச்சையாக நம்மாழ்வாரின் இயற்கை வழி வேளாண்மை பற்றிய ஒரு உரையாடலை கேட்டுள்ளார் சதீஷ். அதில், பசுமைப் புரட்சியின் பின்விளைவுகள் பற்றிய தகவல்கள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நம் விவசாயிகளுக்கு நேர்ந்தது தற்கொலை அல்ல, பசுமைப் புரட்சி என்னும் பெயரால் நேர்ந்த கொலை என்பது தன் பகுத்தறிவிற்கு எட்டியதாக விளக்கினார். 

மண்வளம் மற்றும் சுற்றுச்சூழலை நம் அறியாமையால் நஞ்சாக மாற்றி விட்டோமோ? நான்காயிரம் ஆண்டுகளாக நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த மண்புழுவுக்கும் உழவர்களுக்கும் இடையே இருந்த நட்பை ரசாயன உரங்களால் அழித்து விட்டோமோ?

இப்படியெல்லாம் இவரது மனதில் கேள்விகள் எழ, அன்று இரவே தனது நண்பரை தொலைபேசி மூலம் அழைத்து நாம் மாற்ற வேண்டியது விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இருக்கும் இடைவெளியை அல்ல, பசுமைப் புரட்சியால் விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமையையும் நஞ்சாக மாறிய நம் உணவு மற்றும் சுற்றுச்சூழலையும் தான் என்று முடிவெடுத்துள்ளார். 

இயற்கை விவசாயத்தை நோக்கி...

ஒரு மனிதன் சம்பாதிப்பதே அடுத்த வேலை உணவிற்கும் தன் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கும் தான். இன்று உணவும் நஞ்சாக மாறிவிட்டது, நம் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டதை ஆணித்தரமாக உணர்ந்தனர். 

”இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற முயற்சியை தொடங்கினோம். இந்த முடிவை எடுக்க இரண்டு நாட்கள் மட்டும் தான் தேவைப்பட்டது, ஆனால் இயற்கை விவசாயம் என்பது நம் அன்றாட வாழ்க்கை முறை என்பதை உணர்ந்து மிகுந்த ஆர்வத்தோடு இயற்கையைப் பார்த்து கற்றுக்கொண்டவை ஏராளம்.” 

மண்ணை வளப்படுத்துவது, அமிர்தகரைசல், பஞ்சகவ்யா போன்ற இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகளை இணையம் மற்றும் புத்தகங்கள் மூலம் தெரிந்து கொண்டதாக கூறினார். 

image


இந்த புரிதலோடும் மனதில் உறுதியோடும் இந்த ஆண்டு ஆடி மாதம் 21–ந்தேதி திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து இயற்கை வழி வேளாண்மை செய்யத் தொடங்கினார் சதீஷ் மற்றும் அவரது நண்பர் வடிவழகன். இவர் சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டே சதீஷுக்கு உதவுகிறார். இவர்கள் இருவரும், நண்பர்கள் ராம் மற்றும் எட்வர்ட் ஜோன்சுடன் இணைந்து 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்து விவசாயப்பணியை தொடங்கினர். சதீஷின் மனைவியும் இவரது முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருக்கிறார்.

”நம் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பா ஒரு ஏக்கரிலும், கிச்சிலி சம்பா ஒரு ஏக்கரிலும் சாகுபடி செய்கிறோம். மீதமுள்ள ஒரு ஏக்கரில் கடலை சாகுபடி செய்து மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுளோம். மாப்பிள்ளை சம்பாவின் வளர்ச்சியைக் கண்டு மற்ற விவசாயிகளும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து கேட்கிறார்கள்.” 

7 அடி உயரம் வளரக்கூடிய இந்தவகை மாப்பிள்ளை சம்பா நெல்லுக்கு பல மருத்துவக் குணங்களும் உடலுக்கு வலுவைத் தரக்கூடிய ஏராளமான சத்துக்களும் இருப்பதாக விளக்கினார். மேலும் வறட்சியை தாங்கக் கூடிய தன்மை நம் பாரம்பரிய நெல்லுக்கு மட்டுமே உண்டு, காவிரி பிரச்சனைக்கு நம் விவசாயிகளுக்கு தீர்வே பாரம்பரிய நெல்லும் மரபணு மாற்றப்படாத பயிர்களும் தான் என்று விளக்கினார். 

நாட்டு மாடுகள் மீதுள்ள மோகமும் வருங்கால திட்டமும்... 

அடுத்த சில மாதங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து மீன் வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, நாட்டு மாடு, ஆடு வளர்ப்பு மூலம் ஜீரோ பட்ஜெட், இயற்கை விவசாய முறையை பின்பற்ற உள்ளதாகவும் சொன்னார் சதீஷ். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் வந்த பிறகு தான் நம் நாட்டு மாடுகளின் மகத்துவத்தை பற்றியும் அதிகமாக தெரிந்துக் கொண்டோம்.

”நாட்டு மாடு சாணத்தில் மட்டும்தான் நிலத்தை வளமாக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் உள்ளது. ஆனால் வெண்மைப் புரட்சியால் நம் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுகிறது. தற்போது ஜல்லிக்கட்டு தடையினால் நம் நாட்டு மாடுகளின் இனமே அழிந்து வருகின்றன.” 
காங்கேயம் காளையுடன் சதீஷ் மற்றும் நண்பர்கள்

காங்கேயம் காளையுடன் சதீஷ் மற்றும் நண்பர்கள்


கலப்பின மாட்டுப் பால் உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியவை. பசுக்களை சினை ஊசி செலுத்தி செயற்கை கருவூட்டல் மூலம் கன்றுகள் ஈன்றுவதும், ஊசி போட்டு பால் சுரக்கச் செய்வதனால் அபாயகரமான விளைவுகள் நம் சந்ததியினருக்கு காத்திருப்பதாகவும் எச்சரித்தார். 

இயற்கை விவசாயத்திற்காக நாட்டு மாடுகள் வாங்கும் தேடுதலின் போது தான் ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன காங்கேயம் காளைகள் அழிவின் விளிம்பில் இருப்பதை உணர்ந்து, ஐம்பது ஆயிரம் ரூபாய் முதலீட்டில் காங்கேயம் மாடு ஒன்றை வாங்கியுள்ளனர். தற்போது குஜராத்திலிருந்து நான்கு காங்கிரேஜ் மாடுகளை வாங்க உள்ளனர்.

இயற்கை வழி வேளாண்மையின் நன்மைகள் மற்றும் பாரம்பரிய நெல்லின் மகத்துவம் குறித்து சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இயற்கை வழியில் மட்டுமே அதிக மகசூல் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து வருகின்றனர்.

தற்போதுள்ள ஐடி பணியே தன்னுடைய வாழ்வாதாரம், மற்றும் இதில் சேமிக்கும் பணத்தை கொண்டே விவசாயம் மற்றும் கால்நடைகளில் முதலீடு செய்து வருவதாக கூறினார் சதீஷ். விவசாயம் என்ற என் கனவை எப்போது வாழ்வாதாரமாக மாற்றி அமைக்கிறேனோ, அப்போது இப்பணியை முற்றிலும் விடுத்து முழு நேர விவசாயத்தில் ஈடுபடுவேன், என்றார். 

இயற்கை விவசாயம் மூலம் பெரிய லாபம் ஈட்ட வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. இயற்கையையும் நம் நாட்டு மாடுகளையும் வணங்கி நஞ்சில்லாத உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டும். மேலும் இயற்கை வழி விவசாயத்தின் முக்கியத்துவத்தை மற்ற விவசாயிகளுக்கும் எடுத்துரைத்து அவர்களுக்கும் உறுதுணையாய் இருக்க வேண்டும். 

”இயற்கை விவசாயம் என்பது தொழில் அல்ல அது நம் அடையாளம். அடையாளம் இழந்தால், தாய் நாட்டிலும் நாம் அகதிகள் தான்,”

என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ள சதீஷ் கிருஷ்ணனின் உன்னத முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துவோம்.