'பெண்கள் பச்சாதாபத்தை கேட்டுப் பெற வேண்டும்'- அஸ்வினி அசோகன்
"சிலிக்கான் வேலியில் இருந்து என் கணவருடன் இணைந்து ஒரு ஏஐ(AI) நிறுவனத்தை நடத்துவதற்காக இந்தியா வந்தேன்; நான் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நிறுவனத்தின் பெண் இணை நிறுவனர், ஆனால் நான் எந்த ஒரு நிரலையும் (Code) எழுதியதில்லை. நான் இந்த கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கான காரணம் ஒரே மாதிரியான சிந்தனைகளில் உள்ளவர்களிடம் மாற்றம் தேவை என்பதே என்னுடைய விருப்பம்" என்கிறார் மேட் ஸ்ட்ரீட் டென் (MadStreet Den) நிறுவனத்தின் அஸ்வினி அசோகன்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயான அஸ்வினி, நிரல்கள் பற்றி அறிந்திராத பெண்ணாக தொழில்நுட்ப யுகத்தில் அடிஎடுத்து வைத்தார். எனினும் பெண்களுக்கு ஸ்டார்ட் அப்பில் இந்த நேரத்தில் என்ன தேவை என்பதையும், பெண்கள் பொறுப்பேற்கும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் நன்கு தெரிந்து வைத்திருந்தார் அவர். வெறும் வாய் வார்த்தை ஜாலங்களில் இதை அஸ்வினி கூறவில்லை, அவரிடம் இவற்றை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த முன் உதாரணங்கள் இருந்தன. அவருடன் ஹர் ஸ்டோரி நடத்திய சுவாரஸ்ய கலந்துரையாடலில் அஸ்வினி தன் வாழ்க்கை, சவால்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பகிர்ந்து கொண்டார். அவற்றின் ஒரு பகுதி:
வளர்ந்த விதம்
அஸ்வினிக்கு சொந்த ஊர் சிங்காரச் சென்னை. பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடன மற்றும் இசைக் கலைஞர் என்பதால் 14-21 வயதில் நாடு முழுவதும் சுற்றப் பயணம் செய்து பல கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். அவர் ஒரு கலைஞர் என்பதால் எப்போதாவது கல்லூரிக்குச் செல்வார். ஆனால் அவருடைய தந்தையின் சிந்தனை வேறு விதமாக இருந்தது. அவர் அஸ்வினி இன்டரேக்ஷன் (Interaction) வடிவமைப்பில் முதுகலை பட்டம் பெற வேண்டும் என விரும்பினார். அதிர்ஷ்டவசமாக அஸ்வினிக்கு கார்நெகி மெல்லோனில் நடமாடும் இலக்கணம் பற்றி ஆராய்ச்சி செய்ய வாய்ப்பு கிடைத்தது. கலை சார்ந்த நடன உதவியுடன் எப்படி ரோபோக்களின் அசைவுகள் மற்றும் இதர டிஜிட்டல் உபகரணங்களை வடிவமைப்பது என்பதை பற்றி நம்மை யோசிக்க வைக்கும் கண்டுபிடிப்பு அது.
'என்னுடைய ஒட்டு மொத்த வாழ்வும் இசை, நடனம், வடிவமைப்பு, கணினிகள், மக்கள், கலாச்சாரம் என்ற நூலில் ஓடிக்கொண்டிருந்தது. இது அனைத்திற்கும் நான் ஒருவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் – அவர் வேறு யாருமில்லை என்னுடைய அப்பா. எல்லாவற்றைப் பற்றிய எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பவர் போல காணப்படுவார் அப்பா" என்கிறார் அஸ்வினி. அவரின் அம்மா குடும்பத்தை தாங்கி நிற்கும் முதுகெலும்பாக திகழ்ந்தார் மற்றும் தன் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும் பாட்டிக்கு நிகர் வேறு யாருமில்லை என்று நினைவுகளை அசைபோடுகிறார் அவர்.
இன்டெல்லில் பணியாற்றிய தருணம்
இன்டெல்லில் பணியாற்றிய அனுபவம் அஸ்வினியின் செயல்பாடுகளை நிரூபிக்க உதவியதோடு அவருக்கு எல்லாவற்றைப் பற்றியும் கற்றுக்கொள்ளும் அனுபவத்தைத் தந்தது. அஸ்வினியின் பாஸாக இருந்த Dr.ஜெனிவீவ் பெல் ஒரு மானுடவியலாளர். அவர் ஒரு UX அமைப்பை ஸ்மார்ட் வர்த்தகத்திற்குள் செய்ய நினைத்தார், அதற்காக வடிவமைப்பாளர்கள், மானுடவியலாளர்கள், தொலைக்காட்சியின் எதிர்காலத்தை ஆய்வு செய்யும் மனித காரணி பொறியாளர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி ஒரு முன் நோக்கிய பாதையை வடிவமைக்கத் திட்டமிட்டார்.
அஸ்வினியும் அந்தக் குழுவில் ஒருவராக இணைந்து ஹார்ட்கோர், மென்பொருள் மற்றும் தொடுதிரை போன்ற தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மக்களோடு சேர்ந்து பணியாற்றினார்.
“இன்டெல் பயணத்தில் எனக்கு கிடைத்த ஒட்டு மொத்த அனுபவமும் நல்ல பாடங்களை கற்றத் தந்தது. UX எப்படி சரிசெய்வது, வடிவமைப்பு மற்றும் மக்களை மையப்படுத்தும் ஆய்வின் மூலம் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுவது எப்படி என்பதை கற்றுக் கொண்டார் அவர்.”
இன்டெலில் பணியாற்றிய அந்த 4 ஆண்டுகளில் அஸ்வினி தன்னுடைய ஆய்வகத்திற்கான செல்போன் ஆராய்ச்சியை செய்து முடித்திருந்தார். அதே போன்று எந்திரங்களை பற்றிய கல்வி, படங்களை அடையாளம் காண்பது, தொடுதிரைகள் குழு மற்றும் கணினி ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணைந்து பணியாற்றியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த ஆர்வம் வளரத் தொடங்கியது.
அவர் தன்னுடைய தொழில் சார்ந்த வாழ்வில் கற்றுக் கொண்ட பாடம் வெளிப்படையாக இருங்கள் உங்களால் முடிந்த வரை பல பரிமாணங்களை முயற்சியுங்கள், உங்கள் பணிக்கு இணையான துறைகளில் புதிய முயற்சிகளை செய்யத் தயங்காதீர்கள். “நரம்புகளின் இணைப்புகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன், அதே போன்று எந்திரங்கிளின் மைய கொள்கைகளையும் அறிந்து கொண்டேன், இவை இரண்டையும் தொழில்நுட்பம் மூலம் எப்படி இணைப்பது என்பதும் எனக்குத் தெரியும், இவை எல்லாவற்றையும் விட என்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் – தொழில்நுட்பத்தை புரிந்து கொண்டு அவற்றை அர்த்தமுள்ள வகையில் உலகெங்கும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த நினைத்தேன்.”
மேட்ஸ் டீர்ட் டென்(MSD) தோற்றுவிப்பு
"நான் ஒரு நரம்பியல் ஆராய்ச்சியாளரை திருமணம் செய்து கொண்டேன். அவர் செயற்கை நுண்ணறிவின் தலைவரும் கூட. நாங்கள் பகல் இரவு பாராமல் மக்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் ஏஐ பற்றியே கலந்துரையாடிக் கொண்டிருப்போம். நாங்கள் இருவரும் இந்தப் பாதையில் பயணிப்பது இயற்கையாகவே அமைந்துவிட்டது. நான் அவரை திருமணம் செய்திருக்காவிட்டால் இது நடந்திருக்குமா என்று என்னால் கூற முடியாது. எதிர்காலத்தை பற்றிய பார்வையில் எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தது, இதனால் நாங்கள் தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ச்சி கண்டோம். எங்கள் திருமணத்திற்கு பிறகு நான் நிறையவே மாறி இருக்கிறேன், இதற்கு என் கணவரைத் தவிர வேறு யாரும் காரணமல்ல எல்லா பெருமைக்கும் சொந்தக்காரர் அவர் மட்டுமே.”
ஏஐ பற்றி நிலவிய தவறான கருத்தையும் அச்சுருத்தும் தோற்றத்தையும் மாற்ற நினைத்தார் அஸ்வினி. அவர் தன்னுடைய ப்ளாகை கருத்துகளை பரிமாறும் இடமாக வைத்து மக்களின் மனநிலையை மாற்றி வருகிறார். மேட் ஸ்டீர்ட் டென் அவருக்கு வெறும் தொழில்நுட்ப நிறுவனமல்ல – இந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவை வெளிக்கொணர்ந்து கணினி பற்றிய புரிதலை மக்களுக்கு அர்த்தமுள்ள வகையில் சென்றடையச் செய்யும் நம்பிக்கைக்கான அடையாளம்.
தொழில்முனைவோராக பயணித்தல்
அஸ்வினியைப் பொருத்த வரை ஒரு தொழில்முனைவர் சந்தையில் தமது தயாரிப்புகளுக்கு இருக்கும் இடம், நடப்பில் உள்ள திட்டங்களின் கதைகள், உணர்வுகள், பழக்கவழக்கம், மக்களின் மனநிலை பற்றி புரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் சந்தை நிலவரத்தை தெரிந்து வைத்திருந்தால் மட்டுமே உங்களின் தயாரிப்புகளை விற்பனைக்கு எடுத்துச் செல்லும் போது உதவியாக இருக்கும். தொழில்முனைவரின் வாழ்க்கை மாற்றங்களை வைத்தே விவரிக்க முடியும் என்று அஸ்வினி கருதுகிறார்.
“மாற்றங்களுக்கும் கற்றலுக்கும் எப்போதும் ஒருவர் தயாராக இருத்தல் வேண்டும்.”
அதே போன்று தொழில்முனைவோராக நீங்கள் சில நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக அஸ்வினி சொல்லும் ஒரு விஷயம் பச்சாதாபம்.
தொழில்நுட்பத்தில் பெண்கள்
தொழில்நுட்பத்திலும் சமூக தளங்களிலும் பெண்களின் நிலை பற்றி அஸ்வினி மிகவும் கவலை கொண்டிருந்தார். பெண்கள் பட்டம் பெற்று வேலைவாய்ப்பு பெறும் தகுதியைப் பெறுகின்றனர், ஆனால் சில ஆண்டுகளில் திருமணம் குழந்தைகள் என்று இல்லர வாழ்வில் நுழைந்த பின்னர் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்துவிடுகின்றனர். இதற்கான முக்கியக் காரணம் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் என்ற இரண்டிற்கும் இடையே இருக்கும் மெல்லிய பிரச்னையே. இது பெண்களின் பிரச்னையல்ல, “ஒட்டுமொத்த சமூகமும் பெண்களுக்கு எதிராக புனையப்பட்டிருக்கிறது.”
போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், கொள்கைகள் பெண்களின் வெவ்வேறு வாழ்க்கை முறையில் அவர்களின் வாழ்நாள் முழுமைக்கும் ஆதரவு அளிப்பவையாக இல்லாத நிலையில் இது எப்படி சாத்தியம் என்கிறார் அஸ்வினி. உண்மையில் ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையும் ஆண்களை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது; வீட்டுப் பிரச்னைகள் அல்லது குழந்தைகளை பராமரிக்கும் பணி இல்லாத ஆண்களுக்கானதாக இது விளங்குகிறது.
“ஸ்டார்ட் அப்களும் கூட ஆண்களுக்கான இடமாகவே இருக்கிறது; உதாரணமாக ஸ்டார்ட் அப் அலுவலகங்களில் கூட விளையாட்டு மேஜைகள், விளையாட்டு முனையம், மேலும் பளபளக்கும் கஃபேக்கள் இருக்கிறதே தவிர நர்சிங் அறைகள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் இருப்பதில்லை."
பெண்களின் முன்னேற்றம் அதிகரிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் அஸ்வினி ஆனால் இது தானாக நடக்காது. அதிகாரத்தில் உள்ள பெண்களும் இந்த நிலை மாற ஒத்துழைப்பு நல்க வேண்டும், ஒத்துழைப்பு என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிப்பதல்ல, அவை உண்மையில் பெண்களின் நிலையை உயர்த்தி வாழ்க்கைத் தரத்தை மாற்றுபவையாக இருக்க வேண்டும்.
ஆடுகளத்தில் தங்களின் நிலையை உயர்த்த நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு கற்பிக்க வேண்டியது தான் இது எல்லாவற்றிலும் மிக முக்கியமான காரணி.
“நீங்கள் எங்கோ இருந்து கொண்டு ஆம் நீங்கள் அனைவரும் சமம் என்கிறீர்கள், ஒரு வட்டத்தை விட்டு வெளியே வந்து உங்களை எங்களுக்கு நிரூபித்துக் காட்டுங்கள்.’ ஆடுகளத்தில் இருவரும் சமம் என்பதை உங்கள் செயல்கள் மூலம் வெளிகாட்டுங்கள், அதற்காக பாடுபடுங்கள் அதுவே தலைமுறைகளை கடந்து நீடிக்கும் பாகுபாட்டை தகர்த்தெரியும்.”
தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் குறைவான சதவீதமே இருக்கின்றனர், ஆனால் இந்த குறுகிய சதவீத பெண்களும் மாற்றத்திற்காக முயற்சிக்கிறார்கள், அதே போன்று அஸ்வினியும் தன்னுடைய சிறிய முயற்சியை செய்கிறார். “எம்எஸ்டியில் நாங்கள் 4 ஆண்கள் மற்றும் பெண்கள் தற்போது ஒரு குழுவாக செயல்படுகிறோம். எதிர்காலத்தில் எங்கள் குழுவில் ஒரு தாய் இணைந்தால் ஒரு விளையாட்டு/பராமரிப்புக்கான இடங்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம். அதே போன்று தாய்ப்பாலூட்டும் அறையையும் அமைக்க முடிவு செய்திருக்கிறேன்."
அஸ்வினி சென்னையில் சில அமைப்புகளோடு இணைந்து பெண்களை தொழில்நுட்பக் குழுவில் தக்கவைப்பதற்கான பணிகளை செய்து வருகிறார். இதன் மூலம் அவர்களை தொழில்நுட்பத்தின் ஒரு அங்கத்தில் இருந்து ஸ்டார்ட் அப் குழுக்களாக வெளி உலகிற்கு கொண்டு வரும் முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒருமுகத்தன்மையை தகர்தெரிதல்
தங்களின் சொந்த வாழ்க்கை மற்றும் தேவைகளுக்கு பெண்களே பொறுப்பாளர்கள். முதல் இடத்தில் இருக்க நீங்கள் யார் என்பதை தெளிவுபடுத்திக் கொள்வது முதலில் அத்தியாவசியமானது, அடுத்தது “கேள்வி கேட்க வெட்கப்படக்கூடாது” – இதுவே அஸ்வினி இன்டெலில் தன்னுடைய பெண் வழிகாட்டிகளிடம் கற்றக் கொண்ட முதல் பாடம்.
தன்னுடைய சொந்த அனுபவங்களையே உதாரணமாகச் சொல்கிறார் அஸ்வினி “நான் இந்தியாவிற்கு அண்மையில் இடம்பெயர்ந்தேன், என்னுடைய பதின்பருவம் முழுவதும் அமெரிக்காவில் வசித்தேன். நான் 20 வயது பெண்அல்ல, இரண்டு குழந்தைகளின் தாய். எனக்கு நான்கரை வயதில் ஒரு குழந்தையும், 6 மாத குழந்தையும் உள்ளது. இந்த 6 மாத காலங்களில் VC கூட்டத்திற்காக நான் நாடு முழுதிலும் எங்கே சுற்றுப்பயணம் செய்தாலும் என்னுடன் பால்உறிஞ்சும் (breast pump) எந்திரம் வைத்துக்கொள்வேன். VC கூட்டங்களில் பங்கேற்கும் போது கிடைக்கும் நேரத்தில் இரண்டு முறையேனும் ஓய்வு அறைக்கு வந்து தாய்ப்பாலை வெளியே எடுத்து சேமித்து மும்பை, பெங்களூர் என எங்கே சென்றாலும் அங்கிருந்து சென்னைக்கு என் குழந்தைக்காக அதை பாதுகாப்பாக எடுத்து வருவேன்.”
எம்எஸ்டி அண்மையில் தன்னுடைய நிதியை உயர்த்தியது அதாவது அஸ்வினிக்கு வேலைப்பளு மற்றும் சுற்றுப் பயணம் அதிகரித்தது. ஆனால் அவர் தன்னுடைய இணை நிறுவனரையே திருமணம் செய்து கொண்டதால் குடும்பம், வீடு, குழந்தைகள், வேலை அனைத்தையும் இருவரும் பகிர்ந்து கொண்டனர். “நாங்கள் இருவரும் இதை எதிர்பார்த்தோம் அதே போன்று நாங்கள் இருவரும் எதற்கும் குறைந்தவர்களல்ல. நான் எப்போதும் சொல்வது, நான் இதுவரை கண்டிராத சிறந்த பெண்ணியவாதி என் கணவர்.”
மரியாதையோடு இருங்கள், வெட்கப்படாமல் கேளுங்கள் என்கிறார் அஸ்வினி.
பாலுட்டும் அறையை கேட்டுப் பெறுங்கள் அப்போது தான் பணியாற்றும் பெண்கள் மீது பணிஇடத்தில் பச்சாதாபம் வரும். தொழில்நுட்ப மாநாட்டில் குழந்தை பராமரிப்பு பிரிவை கேளுங்கள் பெண்களுக்கு குழந்தைகள் இருக்கிறது அவர்களை மாலை 7 மணிக்குப் பிறகு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது அப்போது தான் அனைவருக்கும் தெரியும். பகல் இரவு முழுதும் பணியாற்றும் 48 மணி நேர நிகழ்ச்சிகளை பகலில் மட்டும் நடத்த வலியுறுத்துங்கள். நான் கேள்வி கேட்க தயங்கமாட்டேன்.
ஒரு நாள் நான் நிச்சயம் தொழில்முனைவராவேன் என்று உறுதியோடு சொல்கிறார் அஸ்வினி, ஆனால் பெண் தொழில்முனைவராக அல்ல என்கிறார் அவர். டாப் தொழில்முனைவர் பட்டியலில் நான் கட்டாயம் இடம்பெறுவேன், டாப் பெண் தொழில்முனைவர் பட்டியலில் அல்ல. “நான் ஒரு பெண் மற்றும் மைனாரிட்டி என்பதால் மட்டும் இது போன்ற ஒரு பட்டியலை தயாரிக்க விரும்பவில்லை. ஆனால் இன்று நான் இதை கையில் எடுத்திருப்பதற்கான முக்கியக் காரணம் துரதிஷ்டவசமாக மைனாரிட்டியில் நானும் அங்கம் வகிக்கிறேன், அதனால் அது பற்றி பேச வேண்டிய கட்டாயத் தேவை எனக்கு இருக்கிறது. எனக்கு இது பற்றிய போதுமான விழிப்புணர்வு இருக்கிறது. ஒரு தொழில்முனைவராக நான் என் பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன், நான் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் பெண் தொழில்முனைவர் என்ற வார்த்தையை கேட்கவே நான் விரும்பவில்லை, அப்படி ஒரு பிரிவே இருக்கக் கூடாது என்பதே என்னுடைய விருப்பம்.”
கட்டுரை: தன்வி துபே | தமிழில் : கஜலட்சுமி மகாலிங்கம்
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொழில்முனைவில் பெண்கள் தொடர்பு கட்டுரைகள்:
டெஸ்கோவின் தொழில்நுட்பப் பிரிவு இயக்குனர் வித்யா லட்சுமனின் பயணமும் சாதனைகளும்!