1946 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வரும் 101 வயது முதியவர்!
உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் வசிக்கும் 101 வயதான வி சந்தானம் 1946-ம் ஆண்டு நடந்த மாகாணத் தேர்தலில் முதல் முறையாக வாக்களித்துள்ளார்.
ஒவ்வொரு பொதுத்தேர்தல் அல்லது மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்திலும் நாம் அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்று ஊக்குவிக்கும் வகையில் பல பதிவுகளை சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்க்கமுடிகிறது. மக்கள் அனைவரும் தங்கள் கடமையை உணர்ந்து வாக்களிக்க முன்வராத காரணத்தால் மக்களிடம் இதை வலியுறுத்தவேண்டியது அவசியமாகிறது.
இந்தியாவில் 1952-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அதிலிருந்து 66.38 சதவீத வாக்குப்பதிவுடன் 2014-ம் ஆண்டு அதிகளவிலான வாக்குகள் பதிவாகியது. தேர்தலில் வாக்களித்தல் என்பது நாட்டை வழிநடத்தும் தலைவரை தீர்மானிக்கும் செயல் என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உத்திரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியில் செக்டார் 104-ல் வசிப்பவர் 101 வயதான வி சந்தானம். வாக்களிக்கும் தகுதியுள்ள பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்காத நிலையில் இவர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த காலம் முதல் ஒவ்வொரு பொதுத்தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வருகிறார்.
சந்தானம் 1946 மாகாண சபை தேர்தல் சமயத்தில் மார்க்கெட்டிங் பணியாற்றிக் கொண்டிருந்தபோது முதல் முறையாக வாக்களித்த அனுபவம் குறித்து ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ உடன் பகிர்ந்துகொள்கையில்,
”1946-ம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களின் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படுவதற்கு வெகு காலம் முன்பு வருமான வரி செலுத்தும் எந்த ஒரு நபரும் வாக்களிக்கமுடியும்,” என்றார்.
சந்தானம் மாகாண தேர்தலில் சுதந்திரா கட்சியின் மினூ மசானிக்கு முதலில் வாக்களித்தார்.
தற்போதைய தலைமுறையினரால் தகவல்களை எளிதாக அணுகமுடிகிறது. இதனால் நாட்டின் தலைவர்கள் குறித்து தெளிவாக முடிவெடுக்கமுடியும் என நம்புகிறார் சந்தானம். அவர் மேலும் கூறுகையில்,
“மக்கள் மாற்றத்தை விரும்புவது சரியே. ஆனால் அதை வாக்களிக்கும் சமயத்தில் வெளிப்படுத்தவேண்டும். தற்போதுள்ள புதிய தலைமுறையினரால் தங்களைச் சுற்றி நடப்பவற்றைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு சரி, தவறு என வேறுபடுத்திப் பார்க்கமுடியும். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி அவர்கள் வாக்களிக்கவேண்டும்,” என்றார்.
சந்தானம் போன்றே 100 வயது நாக்னாத் காலேவும் 1952-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் முதல் முறையாக வாக்களித்து வருகிறார்.
நாக்னாத் LiveMint உடன் உரையாடுகையில்,
”முன்பெல்லாம் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பார்கள். எங்கள் நாடு, எங்கள் தேர்தல் என்கிற எண்ணமே எப்போதும் ஏற்படும். நாம் சென்று நமது வேட்பாளரைத் தேர்வு செய்வது நமது கடமை. இதுவரை நான் ஒரு தேர்தலில்கூட வாக்களிக்கத் தவறியதில்லை,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA