தேர்வில் 89/100 மதிப்பெண்கள் எடுத்த 104 வயதில் கேரள மூதாட்டியின் சாதனை!
வயது வெறும் எண் என்பதை நிரூபித்த மூதாட்டி குட்டியம்மா!
100 சதவீத கல்வியறிவை எட்டும் நோக்கில் கேரள அரசு எழுத்தறிவு இயக்கம் நடத்தி வருகிறது. இதன் மூலமாக கல்வி அறிவு இல்லாமல் வயது முதிர்ந்தவர்களுக்கு கல்வியறிவு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக தற்போது ஒரு மூதாட்டி இணையத்தில் வைரலாகி வருகிறார்.
அவர் கோட்டயத்தைச் சேர்ந்த 104 வயதான கேரள மூதாட்டி குட்டியம்மா. இவர் கேரள மாநில அரசின் எழுத்தறிவு இயக்கத்தின் தேர்வில் 100-க்கு 89 மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
மூதாட்டி குட்டியம்மா செய்துள்ள இந்த சாதனையை கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
”கேரள மாநில எழுத்தறிவு இயக்கத்தின் தேர்வில் கோட்டயத்தைச் சேர்ந்த 104 வயதான குட்டியம்மா 89/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அறிவு உலகில் நுழைய வயது ஒரு தடையல்ல. குட்டியம்மாவுக்கும், புதிதாகக் கற்பவர்கள் அனைவருக்கும் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் வாழ்த்துகள்," என்று பதிவிட்டுள்ளார்.
அவரின் பதிவில் முகத்தில் தொற்றிக் கொள்ளும் புன்னகையுடன் உள்ள குட்டியம்மாவின் புகைப்படத்தையும் சேர்ந்து பதிவிட்டுள்ளார். கோட்டயம் மாவட்டம் ஆயர்குன்னம் பஞ்சாயத்தில் நடைபெற்ற சக்ஷரதா எழுத்தறிவு தேர்வில் கலந்துகொண்டு மூதாட்டி குட்டியம்மா இந்த சாதனையை செய்துள்ளார். இந்த சாதனை மூலமாக ஆர்வத்திற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் குட்டியம்மா.
தனது வாழ்நாளில் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு முன்னதாக மழைக்குக்கூட பள்ளி பக்கம் ஒதுங்காதவர் குட்டியம்மா. இதனால் எழுத்தறிவும், படிப்பறிவும் இல்லை. அதனை, தான் இறப்பதற்கு முன்னதாக மாற்ற வேண்டும் என்று இந்தத் திட்டத்தில் இணைந்து தற்போது மாற்றியிருக்கிறார். குட்டியம்மாவுக்கு ரெஹ்னா என்ற பெண் படிப்பிற்கு உதவியாக இருந்துள்ளார்.
இதனிடையே, எழுத்தறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் தற்போது குட்டியம்மா 4-ஆம் வகுப்பில் படிக்கத் தகுதி பெற்றிருக்கிறார். கேரள மாநில எழுத்தறிவு மிஷன் ஆணையம் மாநில அரசாங்கத்தால் நிதி அளிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்து குடிமக்களுக்கும் கல்வியறிவு, தொடர்ச்சியான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்த மிஷன் 4வது, 7வது, 10வது, 11வது மற்றும் 12வது வகுப்புகளுக்கு சமமான திட்டங்களை வழங்கி வருகிறது.
தகவல் உதவி: மலையாள மனோரமா | தமிழில்: மலையரசு