Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சிகாகோவில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவை முன்னின்று நடத்தவுள்ள 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிகாகோவில் 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

Monday January 14, 2019 , 4 min Read

10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இந்தாண்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாநகரில் நடைப்பெற உள்ளது. இதனை வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை (FeTNA) முன்னின்று நடத்தவுள்ளதாக சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.

இம்மாநாடுகளை அரசியல் தலையீடு இன்றி தமிழ் ஆராய்ச்சிக்கு முதலிடம் கொடுத்து நடத்துதல் சிறந்தது என மன்றத்தின் அலுவலர்களும் தமிழறிஞர்கள் பலரும் பலகாலம் எண்ணி வந்தனர். இக்கருத்தை முன்னெடுத்துச் சென்று, இனிவரும் ஆராய்ச்சி மாநாடுகளைத் தமிழ் ஆராய்ச்சிக்கு முதலிடம் கொடுத்து நடத்தவேண்டும் என்று துணிந்து ஊக்கம் அளித்தவர், ‘அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவரும், அறிவியல் அறிஞரும், பெரும் தமிழ் அறிஞரும் ஆன, மறைந்த முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்கள்.

அவரே அமெரிக்காவாழ் தமிழ்மக்கள் ஒன்று சேர்ந்து, அடுத்த ஆராய்ச்சி மாநாட்டை இந்தப் புதுவகையில் நடத்த வேண்டும் என்று ஊக்கம் அளித்தார். இக்கருத்தை உலகளாவிய ஆய்வு மன்ற அலுவலர்களிடமும் தெரிவித்தார். அவர் உந்துதலாலும் அளித்த ஊக்கத்தாலும் வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையும், சிகாகோ தமிழ் சங்கமும் இணைந்து, இந்த ஆண்டு மாநாட்டை புதுமுறையில் நடத்த முன்வந்துள்ளனர்.

மையப்பொருள்

இந்த ஆண்டு சிகாகோவில் நடைப்பெற உள்ள 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மையக்கருத்து, ‘கீழடி நாம் தாய்மடி’ என்று FeTNA அமைப்பின் தலைவர் சுந்தர் குப்புசாமி அறிவித்தார். மேலும் பேசிய அவர்,

“அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த மாநாட்டு ஏற்பாட்டிற்காக தங்களின் பங்கை ஆற்றிவருவதாகவும், இந்தாண்டு உலகெங்கிலும் இருந்து 6000 பங்கேற்பாளர்களை மாநாட்டில் எதிர்ப்பார்க்கப்படுவதாக,” கூறினார்.

மாநாட்டில் சிறப்பம்சங்களாக; தமிழினம், தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மையைப் புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்யப்படும் என்று மாநாடு ஒருங்கிணைப்பாளர் கால்டுவேல் வேல்நம்பி தெரிவித்தார்.

மாநாடு நிகழ்வுகள்:

·        நிகழ்த்துநர் : அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) & சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS).

·        நிகழிடம் : சாம்பர்க் (Schamburg) கருத்தரங்கு மையம், சிகாகோ-அமெரிக்கா.

·        நிகழும் நாள் : 4th, 5th, 6th, & 7th ஜூலை 2019.

·        பெரும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் : ஜூலை 4 & 5.

·        உலகத் தமிழ் தொழில்முனைவோர் கூடல் (GTEN) : ஜூலை 6.

·        அணிவகுப்பு & பெருவிருந்து : ஜூலை 6, மாலை.

·        தமிழ் ஆராய்ச்சி மாநாடு : ஜூலை 5 & 6.

·        நினைவேந்தல் : அமரர், முனைவர் வா.செ.குழந்தைசாமி

துணைத் தலைவர் – IATR & முன்னாள் துணைவேந்தர் – அண்ணா பல்கலைக்கழகம். இம்மாநாடு, அமெரிக்காவில் நிகழ விழைந்து பெரும்பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தகக்து.

ஜூலை 4, 5ம் தேதிகளில் தமிழ் ஆராய்சி நகர்வுகளுக்கும், 6ம் தேதி நடக்கவிருக்கும் உலகத்தமிழ் தொழில்முனைவர் கூடலில் அமெரிக்க வாழ் இளம் தொழில்முனைவர்கள், வெற்றியடைந்த தொழிலதிபர்கள் மற்றும் இந்தியா உட்பட உலக நாடுகளில் வசிக்கும் பிரபல தொழில்முனைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர் என GTEN அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவா மூப்பனார் தெரிவித்தார்.

10ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அறிவிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சி, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தன் துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் மாநாட்டுக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.

“பல சவால்களைத் தாண்டி ஒரே குடையின் கீழ் உலகெங்கிலும் வாழும் தமிழறிஞர்களை ஒன்று திரட்டி, பன்முகக்குரல்கள் ஒலிக்கும் வண்ணம் இந்த 10ம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தும் வட அமெரிக்க தமிழ் சங்கத்துக்கு பாராட்டுகள்,” என்றார் பாண்டியராஜன்.

மேலும் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இம்மாநாட்டிற்கு தமிழக அரசின் சார்பாக நிதி ஒதுக்க கலந்து ஆலோசித்து வருவதாகவும் விரைவில் அதுபற்றி அறிவிப்பு வரும் என்றார் அமைச்சர். அதோடு இந்தாண்டு மாநாட்டின் முக்கிய கருவான ‘கீழடி’ குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைப்பெறு வருகிறது என்றும் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் மாநாட்டின் சமயத்தில் அதன் முக்கிய முடிவுகள் வரும் என்றும் கூறினார்.

மாநாட்டின் பின்புலம்

அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR), 1964-ம் ஆண்டு புது டெல்லியில், தனி நாயக அடிகளாரின் முயற்சியால் நிறுவப்பட்டது. உலகக் கீழைக்கலை அறிஞர்கள் (Orientalists) மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த பிரான்சைச் சேர்ந்த அறிஞர் முனைவர் பீலீயோசா, செக்கசுலோவிக்கியா அறிஞர் சுவெல்லபில், அறிஞர்கள் ஆசர், பரோ, எமனோ, தமிழகத்தின் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், முனைவர் வி.ஐ. சுப்ரமணியன் ஆகியோர் இணைந்து ஆய்வு மன்றம் தொடங்கினர். இது ஓர் அரசியல் சார்பற்ற, ஊதியம் கருதாத ஆய்வு மன்றம் ஆகும். இதன் தலைசிறந்த நோக்கம்:

பொதுவாகத் திராவிடம் பற்றியும், குறிப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகளைப் பல்வேறு துறைகளில், அறிவியல் முறையில் செய்ய ஊக்குவித்தலும், தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வுகள் செய்துவரும் அறிஞர்களோடும் உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்கு கொள்ளுதலும் ஆகும்.”



மாநாட்டின் சிறப்புக்கூறுகள்:

·        ஐயன் வள்ளுவனின் திருவுருவச் சிலை (5.5 அடி), மாநாட்டின் நினைவாக, சிகாகோ நகரில் நிறுவப்படும். சிலைக்கொடை: டாக்டர். வி.சி. சந்தோசம்.

·        தனிநாயகம் அடிகளார் மற்றும் 4ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – யாழ்ப்பாணம் (1974), நினைவேந்தல் அமர்வுகள் உண்டு.

·        மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர், மேதகு கனடா தலைமை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆகியோருக்கு அழைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

·        இதுவரை 1150 ஆராய்ச்சிச் சுருக்கக் கட்டுரைகள், மாநாட்டுக்காகப் பெறப்பட்டுள்ளன. ஆய்வறிஞர் குழுவால் சீராய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

·        இம்மாநாட்டுக்கு உலகெங்கும் உள்ள ஆராய்ச்சி மாணவர்களை அழைத்து வருமாறு தமிழறிஞர்களுக்கும் தாளாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

·        வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவை (FeTNA) மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் (CTS) அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்துடன் (IATR) இணைந்து இம்மாநாட்டு நிகழ்வுகளை நிகழ்த்தும்.

·        பேரவையின் 32ஆம் ஆண்டு விழாவும் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50ஆம் ஆண்டு விழாவும் (பொன்விழா) மாநாட்டோடு ஒருங்கே கொண்டாடப்படும்.

·        மாநாட்டின் பொருட்டு பட்டிமன்றப் பேச்சாளர்களும், கவியரங்கக் கவிஞர்களும், பிற கொண்டாட்டங்களுக்காகத் திரையிசை மற்றும் மரபிசைக் கலைஞர்களும், தமிழிசை, பறையிசை மற்றும் தமிழ் வரலாற்று நாடகக் கலைஞர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

·        பேரவை விழாவின் மையப்பொருள் : கீழடி – நம் தாய்மடி!

·        பேரவை விழாவினைத் தமிழறிஞர் தவத்திரு. சி.யு. போப் அவர்களின் 200ஆம் பிறந்த ஆண்டு நினைவுக்கு உரித்தாக்குகின்றோம்.