உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? அப்போ வாக்களிக்க இந்த ஆவணங்களில் ஒன்றை எடுத்து போங்க...
தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வேறு என்னென்ன ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று அறிந்து கொள்வோம்.
அடுத்த 5 ஆண்டுகள் தமிழக மக்களின் அடிப்படை உரிமைகள், கல்வி, பொருளாதாரம் என அனைத்தையும் தீர்மானிக்கப் போகும் அரசு எது என்பதை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 6 கோடியே 26 லட்சத்து 75 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இவர்களில் 8 லட்சத்து 97 ஆயிரத்து 700 பேர் இளம் வாக்காளர்கள்.
வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்களிப்பது நம் உரிமை, கடமையும் கூட என்பதை உணர்ந்து எல்லோரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும். ஓட்டுக்கு பணம் பெற்றால் மட்டுமல்ல வாக்களிக்காவிட்டாலும் கூட நாம் கேள்வி கேட்கும் உரிமை இல்லாதவர்கள் என்பதை உணர்ந்து அனைவரும் மறக்காமல் வாக்களிக்க வேண்டும்.
சரி, வாக்களிப்பதன் அவசியம் புரியுது ஆனால் துரதிஷ்டவசமாக வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?
கவலை வேண்டாம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தாலே போதும், நீங்கள் நிச்சயம் வக்களிக்கமுடியும். வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை https://electoralsearch.in/ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண் (epic no) அல்லது உங்களது விவரங்களைக் கொண்டு பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றிருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அதிலேயே உங்களின் முழு விவரத்துடன் கூடிய பூத் சிலிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வாக்காளர் அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளர்கள் கீழ்கண்ட ஆவண அடையாள அட்டைகளில், ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.
- ஆதார் அட்டை
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை
- புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள்
- தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு)
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
- இந்திய கடவுச்சீட்டு
- புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
- மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
- பாராளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றறைக் காட்டி வாக்களிக்கலாம்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 20 ஏ பிரிவின்கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டை காண்பித்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.