‘வருகிறது புத்தாண்டு’ - உங்கள் வீட்டை சுலபமாக சுத்தப்படுத்த, இதோ சில எளிமையான வழிகள்!
இந்தத் தமிழ்ப் புத்தாண்டிற்கு உங்கள் வீட்டை எப்படியெல்லாம் சுலபமாக, மன அழுத்தம் இல்லாமல் தூய்மைப்படுத்தி, ஆரோக்கியமான இடமாக மாற்றலாம் என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என பண்டிகைகள் வருகிறதென்றாலே கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள் முதலில் வீட்டைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.
நாம் தங்கி இருக்கும் வீடு சுத்தமாக இருந்தாலே, மனது தானாகவே கொண்டாட்ட மனநிலைக்கு வந்து விடும். அதோடு, வீட்டிற்கு வரும் உறவினர்களும் நம் வீட்டை தூய்மையாகத்தான் பார்க்க விரும்புவார்கள். அதனாலேயே நம்மை எப்படி அழகாக்கிக் கொள்கிறோமோ, அதேபோல் வீட்டையும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டைச் சுத்தப்படுத்துவது குறித்து Dyson நிறுவனத்தின் முன்னணி நுண்ணுயிரியலாளரான ஜோன் காங் கூறுகையில்,
“அநேக மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கும் தூசியைப் பற்றியே சிந்திப்பதில்லை. தூசி அதன் நுண்ணிய தன்மையால் நம் பார்வைக்கு தென்படுவதில்லை என்பதால், அதைக் கண்டு கொள்ளத் தேவையில்லை என நாம் நினைப்பதை மாற்ற வேண்டும்,” என்கிறார்.
அதோடு, நம் வீட்டை எப்படி சுத்தப்படுத்தி, பழையவற்றை ஒழித்து, எப்படி புதிதாக, அழகாக நாம் தங்கி இருக்கும் இடத்தை ஆரோக்கியமாக மாற்றலாம் என சில சுலபமான வழிமுறைகளையும் கூறுகிறார் ஜோன்.
தமிழ்ப் புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஜோன் கூறியுள்ள வழிமுறைகளில் எப்படியெல்லாம் மன அழுத்தம் இல்லாமல் வீட்டைச் சுத்தப்படுத்தி, கொண்டாட்டத்திற்கு தயாராகலாம் என இங்கே பார்க்கலாம்.
1. சரியான கருவிகளைப் பயன்படுத்துங்கள்
வீட்டை சுலபமாக தூய்மைப்படுத்த முதலில் நமக்குத் தேவையானது சரியான கருவிகள்தான்.
- துடைப்பது மற்றும் தூசி சுத்தம் செய்வது மேற்பரப்புகளை சுத்தமாக தோற்றமளிக்க வைக்கும். ஆனால், அது வீட்டிலிருந்து தூசியை அகற்றாது. மாறாக, அது தூசியைக் கிளறச் செய்து, காற்றில் பரவச் செய்து, அறையில் வேறு எங்காவது குடியேற வைத்து விடும். எனவே, தூசி தட்ட, சுவற்றைச் சுத்தப்படுத்த, தரையை தூய்மைப்படுத்த என அந்தந்த இடத்திற்குத் தேவையான தனித்தனி கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் நம் வேலை எளிதாவதோடு, முழுமையும் அடையும்.
- எப்போதும் தண்டு இல்லாத வெற்றிட கிளீனர்களில் முதலீடு செய்யுங்கள். ஏனென்றால் அவற்றின் பல்துறை வடிவம் அவற்றை ஒரு சிறந்த துப்புரவு கருவியாக மாற்றுகிறது. அவற்றின் இணைப்புகள் தந்திரமான விளிம்புகள் மற்றும் அடைய முடியாத குறுகிய இடைவெளிகளைச் சுற்றி துல்லியமாக சுத்தம் செய்வதற்கு ஏற்றவையாக உள்ளன.
- உங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த ஒரு தீவிரமான பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, கரிம மற்றும் இயற்கை பொருட்களையே சுத்தப்படுத்துவதற்கு தேர்வு செய்வது நல்லது.
2. முகக்கவசம் மற்றும் கையுறைகள்
- வீட்டைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என தரையில் மற்றும் சுவற்றில் படிந்துள்ள தூசியை நாம் கிளறி விட்டு, அவற்றை நம் கண்கள், மூக்கு, வாய் என உடலில் படிய வைத்து விடும் வாய்ப்புகள் அதிகம். இவை நம் உடலில் பல ஒவ்வாமைகள் ஏற்பட காரணமாகி, ஆரோக்கியச் சீர்கேட்டை ஏற்படுத்தி விடும். இதன் விளைவாக தும்மல், கண்கள் சிவந்து போதல் மற்றும் சமயத்தில் சுவாசப் பிரச்சினைகள்கூட ஏற்படலாம்.
- எனவே எப்போதும் வீட்டைச் சுத்தப்படுத்தும்போது, முகக்கவசம், முகமூடி மற்றும் கையுறைகளை அணிந்து கொள்வது புத்திசாலித்தனம்.
3. திட்டமிடல் முக்கியம்
- சுத்தப்படுத்தும் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்பு, நமது வசதிக்கேற்ப ஒரு துப்புரவு அட்டவணையை உருவாக்குவது நல்லது.
- உங்கள் வீட்டைச் சுற்றிச் செய்ய வேண்டிய வேலைகள், அப்புறப்படுத்த வேண்டிய பொருட்கள், கொடுக்க வேண்டிய பொருட்கள் என ஒவ்வொன்றாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் சுத்தப்படுத்தும் வேலையை எளிதாக்கி, சுறுசுறுப்பாக உங்கள் வேலையைச் செய்ய ஊக்குவிக்கும்.
- முதலில் அதிகம் குப்பையான இடத்தைத் தேர்வு செய்யாமல், உங்களுக்குப் பிடித்தமான பகுதிகளைத் தூய்மைப்படுத்தத் தொடங்குங்கள். குறைந்தது இரண்டு வாரங்களுக்கு சுத்தமாக இருக்கும் பகுதிகளுடன் வேலையைத் தொடங்குவது புது உற்சாகத்தைத் தரும். அதன் பிறகு, அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய அலமாரிகள், படுக்கை பெட்டிகள் மற்றும் பலவற்றை ஒழுங்கமைக்கலாம்.
- குறுகிய காலத்தில் முழு இடத்தையும் சுத்தம் செய்ய முயற்சிக்காதீர்கள். அப்படி நினைத்தால் விரைவில் நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். எனவே, உங்கள் வீட்டை, முன்னுரிமையின் அடிப்படையில் பகுதிகளாகப் பிரித்து, அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்யுங்கள்.
4. தேவையற்ற பொருட்களை அகற்றுங்கள்
- சுத்தம் செய்வதில் முக்கியமான, முன்னுரிமைத் தரப்பட வேண்டிய வேலை, தேவையற்ற பொருட்களை தனியே பிரித்து, அவற்றை அகற்றுவது ஆகும். இனி பயனில்லை என்று நீங்கள் நம்பும் பொருட்களை கொஞ்சமும் யோசிக்காமல் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி விடவும்.
- கடந்த ஆண்டிலிருந்து நீங்கள் பயன்படுத்தாத பொருட்கள் அல்லது இனி எதிர்காலத்தில் இதைப் பயன்படுத்தப் போவதில்லை என நீங்கள் நினைக்கும் பொருட்களை, தேவைப்படுபவர்களுக்கு தானம் அல்லது மறுசுழற்சி செய்யுங்கள். யாருக்குமே பயன்படாத பொருட்கள் எனில் கண்ணை மூடிக் கொண்டு அவற்றைக் குப்பையில் தூக்கி வீசி விடுங்கள். இதுவே உங்கள் சுத்தப்படுத்தும் வேலையை பாதியாகக் குறைத்து விடும்.
5. மேலிருந்து கீழாக சுத்தம் செய்யும் ஹேக்
- எப்போதும் உங்கள் சுத்தப்படுத்தும் வேலையை கூரையில் இருந்து தொடங்குங்கள். சிலந்தி வலைகளைத் தூசித்தட்டி, மின்விசிறியை சுத்தம் செய்து என கூரையிலிருந்து துடைக்கத் தொடங்குங்கள். அதன்பிறகு, அலமாரிகளின் மேற்புறத்தையும், பின்னர் படுக்கை மற்றும் பிற தளபாடங்களையும் சுத்தம் செய்யவும். கடைசியாக தரையை சுத்தம் செய்யுங்கள்.
- சுவரில் மாட்டப்பட்ட பொருட்களை அகற்றி, அவற்றில் படிந்துள்ள தூசியை தட்டுவதற்கு மறக்காதீர்கள்.
- நீங்கள் அகற்றும் தூசி, மீண்டும் வீட்டிற்குள் சுவற்றில் மற்றும் தரையில் படிந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சுத்தப்படுத்தும் கருவிகளைப் பயன்படுத்துவது நல்லது.
- திரைச்சீலைகளை துவைத்து சுத்தப்படுத்துவதற்கு முன், அவற்றில் உள்ள தூசிக்களை முறையாக தட்டி விடுவது புத்திசாலித்தனம். இது உங்கள் சலவை நேரத்தை மிச்சப்படுத்தி, திரைச்சீலைகளை எளிதாக தூய்மைப்படுத்த உதவும்.
6. புறக்கணிக்கப்பட்ட இடங்கள்
- தூசி என்பது தூசிப் பூச்சிகள், தூசிப் பூச்சி மலம், பாக்டீரியா, சிறிய பூச்சிகள் மற்றும் பிற துகள்கள் ஆகியவற்றின் சிக்கலான தொகுப்பு அணியாகும். அவை வீடு முழுவதும் பரவுவதன் மூலம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை மற்றும் இன்னும் பிற உடல்நலக்குறைவுகள் ஏற்படலாம்.
எனவே, எப்போதும் சுவர் மற்றும் தரையைப் பற்றி மட்டும் யோசிக்காமல், மெத்தைகள், செல்லப்பிராணி கூடைகள், விளக்குகள், அலமாரிகள், கூரைகள் மற்றும் திரைச்சீலைகள் போன்ற புறக்கணிக்கப்பட்ட இடங்களையும் கவனித்து சுத்தப்படுத்துவது, மனநிறைவான தூய்மையைத் தரும்.