சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 இந்திய நகரங்கள் 2100-க்குள் கடலில் மூழ்கும்: நாசா அதிர்ச்சி தகவல்!
கடலில் மூழ்கும் நகரங்கள்!
காலநிலை மாற்றங்களுக்கான சர்வதேச அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி (IPCC)வின் Climate Change 2021: the Physical Science Basis ஆய்வு அறிக்கையின் படி, கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டு இருக்கிறது.
இதில் இந்திய நகரங்கள் 2100ம் ஆண்டு சந்திக்கப்போகும் ஆபத்துக்கள் தொடர்பாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.
அதன்படி, அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலை உள்ளடக்கிய இந்திய பெருங்கடல் பூமியின் சராசரி வெப்பத்தை விட வேகமாக வெப்பமாகி வருகிறது என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் 12 நகரங்களில் உள்ள, கடற்கரையோர பகுதிகளில் கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்றும் ஐ.பி.சி.சி அறிக்கையில் கூறியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த கடற்கரையை ஒட்டியுள்ள 12 நகரங்களும் 2100 ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக, காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து வருவதையும், கடல் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில், உலகளாவிய சராசரி கடல் மட்டம் ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீட்டர் என்ற விகிதத்திலும், இமயமலை உள்ளிட்ட பனிமலைகளின் பனிப்பாறைகள் உருகும் விகிதம் தொடர்ந்து அதிகரித்துள்ளது என்று நாசா குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, நாசா குறிப்பிட்டுள்ள 12 நகரங்களில் தமிழகத்தின் இரண்டு நகரங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னை 1.87 அடியும், மற்றொரு மாவட்டமான தூத்துக்குடி 1.9 அடியும் 2100ம் ஆண்டு கடலில் மூழ்கக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது.
நாசா குறிப்பிட்டுள்ள இந்தியாவின் மற்ற நகரங்கள்!.
* கண்ட்லா, குஜராத் - 1.87 அடி
* ஒக்ஹா, குஜராத் - 1.96 அடி
* பவுநகர், குஜராத் - 2.70 அடி
* மும்பை, மகாராஷ்டிரா- 1.90 அடி
* மோர்முகாவ், கோவா - 2.06 அடி
* மங்களூர், கர்நாடகா - 1.87 அடி
* கொச்சி, கேரளா - 2.32 அடி
* பரதீப், ஒடிசா- 1.93 அடி
* கிதிர்பூர், கொல்கத்தா - 0.49 அடி
* விசாகப்பட்டினம், ஆந்திரா - 1.77 அடி
மனிதர்களின் நடவடிக்கைகளால் சூற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பே இந்த காலநிலை மாற்றத்துக்கு காரணம் என்று நாசா முக்கியமாக குறிப்பிட்டு இருக்கிறது.
மேலும், இந்த தரவானது தற்போதைய கால நிலையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர்மட்டம் உயரும் விகிதங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
தகவல் உதவி: நாசா | தமிழில்: மலையரசு