ரூ.11,500 கோடி டீல்: ரிலையன்ஸ் - viacom18 - டிஸ்னியின் ஸ்டார் இந்தியா மெகா கூட்டிணைவு நிறைவு!
புதிதாக உருவாக்கப்பட்ட இணைவினை ((JV) முயற்சிக்கு நீதா அம்பானி தலைமை தாங்குவார், உதய் சங்கர் துணைத் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL), Viacom18 மற்றும் தி வால்ட் டிஸ்னி நிறுவனம், NCLT மும்பை, இந்தியாவின் போட்டி ஆணையம் உள்ளிட்ட ஒழுங்குமுறை ஆணையங்களின் ஒப்புதலுக்குப் பிறகு, ஸ்டார் இந்தியாவுடன் Viacom18-இன் மீடியா மற்றும் ஜியோ சினிமா வணிகங்களை இணைக்கும் நடவடிக்கை சுமுகமாக நிறைவடைந்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இணைவினை ((JV) முயற்சிக்கு நீதா அம்பானி தலைமை தாங்குவார், உதய் சங்கர் துணைத் தலைவராக இருப்பார்.
ரிலையன்ஸ் ரூ.70,352 கோடி (சுமார் $8.5 பில்லியன்) மதிப்புள்ள JV-இல் ரூ.11,500 கோடி (தோராயமாக $1.4 பில்லியன்) முதலீடு செய்துள்ளது. JV-இன் உரிமையானது RIL 16.34%, Viacom18 46.82% மற்றும் டிஸ்னி 36.84% ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ஸ்டார், கலர்ஸ், ஜியோ-சினிமா மற்றும் ஹாட்ஸ்டார் போன்ற பிரபலமான மீடியா பிராண்டுகளை ஒன்றிணைக்கும் இந்த இணைவினை இந்திய மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பரந்த அளவிலான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளடக்கத்தை வழங்கவிருக்கிறது.
100க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள், 30,000+ மணிநேர டிவி உள்ளடக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க விளையாட்டு உரிமைகள் போர்ட்ஃபோலியோவுடன், அதன் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சலுகைகளை உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு விரிவுபடுத்துகிறது.
இந்த மெகா இணைவு குறித்து முகேஷ் அம்பானி கூறும்போது,
‘இந்திய ஊடகப் பொழுதுபோக்குத் துறை மாற்றம் காணும் யுகத்தில் உள்ளது. எங்களின் ஆழ்ந்த ஆக்கப்பூர்வமான நிபுணத்துவம் மற்றும் டிஸ்னி உடனான உறவு, இந்திய நுகர்வோர் பற்றிய எங்களின் ஒப்பிடமுடியாத புரிதலுடன், இந்திய பார்வையாளர்களுக்கு மலிவு விலையில் இணையற்ற நிகழ்ச்சிகளை அளிக்கும்,’ என்றார்.
2024 நிதியாண்டில் தோராயமாக ரூ.26,000 கோடி ($3.1 பில்லியன்) வருவாயுடன், 100 தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் கணிசமான விளையாட்டு உரிமைகள் போர்ட்ஃபோலியோவுடன் இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும்.
இந்த இணைவினை நிகழ்வுடன் கூடிய இன்னொரு தனி பரிவர்த்தனையில் 4,286 கோடி ரூபாய்க்கு Viacom18 இல் பாரமவுண்ட் குளோபலின் 13.01% பங்குகளை RIL வாங்கியது.