2 மரங்களை வெட்டியதற்கு ரூ.1.21 கோடி அபராதம்: மத்திய பிரதேசத்தை அதிரவைத்த வனத்துறை!

விஞ்ஞான ரீதியாக கணக்கிட்டு அபராதம் விதிப்பு!
2 CLAPS
0

மத்திய பிரதேச மாநிலம் ரைசன் மாவட்டத்தில் உள்ள பமோரி வன எல்லைக்குட்பட்ட சில்வானி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான பழங்குடியின இளைஞர் சோட்டே லால் பிலால் என்பவர். இந்தப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் உள்ள ஒரு ஊரில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த ஜனவரியில் வனப்பகுதியில் இருந்து சாக்வான் வகை மரம் இரண்டை வெட்டியிருக்கிறார். அதனை அந்தப் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடைக்கு நாற்காலிகள் உள்ளிட்டவை தயாரிக்க விற்பனை செய்து இருக்கிறார்.

இதனை அறிந்த வனத்துறையினர் உள்ளூர் நபர் வாக்குமூலத்தின் அடிப்படையில், சோட்டே லால் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை இரண்டு நாட்கள் முன்பு அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய வனத்துறை அதிகாரி, மஹிந்தர் சிங், இறுதியாக சோட்டே லாலுக்கு ரூ.1.21 கோடி அபராதம் விதித்தார். இரண்டு மரங்களுக்கு இவ்வளவு அதிகமான தொகை அபாரதமா என்று கேட்கிறீர்களா? ஒரு மரத்தின் வாழ்நாளில் பெறப்பட்ட நன்மைகளை விஞ்ஞான ரீதியாக கணக்கிட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது அதற்கு வனத்துறை கொடுக்கும் பதிலாக இருக்கிறது.

இது தொடர்பாக விளக்கம் கொடுத்த, வனத்துறை அதிகாரி மஹிந்தர் சிங்,

“ஒரு மரத்தின் சராசரி ஆயுள் சுமார் 50 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சியிலும் இது நிரூபணம் ஆகியுள்ளது.”
இந்த 50 ஆண்டுகள் ஆயுட்காலத்தில் ஒரு மரத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் என்று ஆய்வுகள் சொல்கிறது. அதாவது, ஒரு மரம் தன் வாழ்நாளில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வழங்குகிறது. அதேபோல், ரூ.24 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டை தடுப்பதில் பங்களிக்கிறது.

மண் அரிப்பு மற்றும் நீர் வடிகட்டலைத் தடுக்கவும் உதவுகிறது. இது மேலும் 24 லட்சத்தை சேர்க்கிறது. இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் நடத்திய ஆய்வின் முடிவுகளின் படி இது கூறப்படுகிறது. எனவே, 50 ஆண்டுகளில் ஒரு மரத்திலிருந்து மொத்த நன்மைகள் ரூ.60 லட்சம் ஆகும்.

அந்தவகையில் பார்க்கையில் குற்றம் சாட்டப்பட்டவர் இரண்டு மரங்களை வெட்டி இருக்கிறார் என்கின்ற அடிப்படையில், அவருக்கு ரூ.1.21 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் வனங்களை அழிக்கும் மாஃபியா கும்பலுடன் இணைந்து இதனை தொடர் கதையாக செய்து வருகிறார். அதனால் தான் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது," என்று கூறியிருக்கிறார்.

இரண்டு மரங்களை வெட்டியதற்காக இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது மத்திய பிரதேசத்தில் இதுவே முதல் முறை ஆகும்.

தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world