'நான் இம்மண்ணில் வாழ்ந்ததற்கு அடையாளமாக மரங்கள் வளர்க்கிறேன்’ - மரம் வளர்ப்பை தவமாக செய்யும் 74 வயது முதியவர்!
பறவை போன்ற ஜீவராசிகளும், மக்களும் இளைப்பாற வேண்டும் என்பதற்காகவே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கிராமப் பகுதி முழுவதும் மரங்களை நட்டு கண்ணும்கருத்துமாக பராமரித்து வருகிறார் 74 வயது விவசாயி.
மக்கள் பசியாற காடு, கழனிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாடுபடுபவன்தான் விவசாயி. இவர்கள் தங்கள் நிலத்தின் எல்லையை வரையறுக்கவும், வரப்புகளிலும் சில மரங்களை நட்டு, தங்களின் பணிகளுக்கு இடையே இளைப்பாறிக் கொள்வது வழக்கம்.
ஆனால் பறவை போன்ற ஜீவராசிகளும், மக்களும் இளைப்பாற வேண்டும் என்பதற்காகவே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் கிராமப் பகுதி முழுவதும் மரங்களை நட்டு கண்ணும்கருத்துமாக பராமரித்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகேயுள்ள கீழப்புலியூரில் வசித்து வரும் கருப்பையா என்ற 74 வயது விவசாயி.
கருத்த சுருங்கிய தேகம், தளராத நடை, இடையில் ஓர் வெள்ளை வேட்டி, வெள்ளந்தியான சிரிப்பு என சராசரி கிராமத்து மனிதர்களுக்கான அடையாளங்களுடன் இருந்த அவர், நம்மிடம் தனது மரங்களின் மீதான நேசத்தை பகிர்ந்ததாவது,
கிழப்புலியூர்தான் எனது சொந்த ஊர். எனது தாத்தா காலத்தில் இப்பகுதி முழுவதும் காடாக இருந்தது. காலப்போக்கில் மரங்களையெல்லாம் வெட்டி காடுகளின் பரப்பளவை சுருக்கிவிட்டனர். அப்போது நான் சிறுவன் என்பதால். என்னால் ஓன்றும் செய்ய இயலவில்லை. ஆனால் எனக்கு விவரம் தெரிந்து, மரங்களின் அவசியத்தை உணர்ந்து, மரங்களை வளர்க்கத் தொடங்கினேன்.
இதுவரை, ஆல மரம், அரச மரம், இலுப்பை மரம், புளிய மரம் என சுமார் 80க்கும் மேற்பட்ட பெரிய மரங்களையும், 750க்கும் மேற்பட்ட சிறிய மரங்களையும் வளர்த்துள்ளேன் என தனது அளப்பரிய பணியை சாதாரணமாகத் தெரிவிக்கிறார் கருப்பையா.
நான் ஓர் சாதாரண விவசாயி. நம்மால் முடிந்தளவுக்கு சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என எண்ணினேன். என்னால் அன்ன சத்திரம் போன்றவையெல்லாம் கட்ட முடியாது. ஆனால் சுட்டெரிக்கும் வெயிலில் கிறங்கி வரும் மனிதர்கள் இளைப்பாற மரம் நட முடியும் அல்லவா. அதைத்தான் செய்கிறேன்.
இந்த மரங்களில் வந்து பறவைகள் குடும்பமாக கூடு கட்டி வாழ்வதையும், மரத்தில் உள்ள பழங்களை உண்டு மகிழ்வதையும் காணும்போது எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்படுகிறது என்கிறார்.
அந்த ஊரில் உள்ள பச்சையம்மன் கோயில் தர்மகர்த்தாவாக இருக்கும் கருப்பையா, கோயிலுக்குச் சொந்தமான 10 ஏக்கரில் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். மேலும் குன்றில் மேல் உள்ள 8 ஏக்கரில் கோயிலைச் சுற்றியும் மரங்களை நட்டு வைத்துள்ளார். கோயில் அருகேயுள்ள 10 ஏக்கர் ஏரியைச் சுற்றி, அதன் கரைகளில் ஏராளமான மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.
நான் சிறு வயதில் பார்த்து ரசித்த, பிரமித்த பெரிய பெரிய மரங்கள் எல்லாம் என் கண் முன்னே வெட்டப்பட்டு விட்டன. அதுபோன்ற மரங்கள் மீண்டும் உருவாக நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். எனவேதான் இழந்த மரங்களுக்கு ஈடாக புதிய மரங்களை வளர்க்கத் தொடங்கினேன். மேலும், பொது இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன்.
நிழலுக்காக ஆல மரம், அரச மரம், இலுப்பை மரம் போன்றவற்றையும், மக்களின் பயன்பாட்டுக்காக புளிய மரத்தையும் நட்டு வளர்க்கிறேன் என்கிறார்.
ஓவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே மரங்களை நடும் கருப்பையா, அந்த மரக்கன்றுகள் ஓரளவுக்கு பெரியதாக வளர்ந்து, தாமாக வளரும் வல்லமை பெற்றபின்தான், வேறு மரக்கன்றுகளை நடத் தொடங்குகிறார். மரக்கன்றுகளை நட்டு விட்டு, பாதியில் விட்டுவிடக்கூடாது அல்லவா, அதனால்தான் மரக்கன்றுகள் ஓரளவுக்கு பெரிதாகும் வரை காத்திருந்து, அதன் பிறகுதான் வேறு மரக்கன்றுகளை நடுவதாகத் தெரிவிக்கிறார்.
மேலும், அந்த ஊரில் யாரையும் மரக் கிளைகளையோ, மரங்களையோ அவர் வெட்ட அனுமதிப்பதில்லை. அனைவரிடம் அன்பாக மரங்களின் அவசியத்தை எடுத்துரைத்து, அனைவரின் ஆதரவோடு தனது கிராமம் முழுவதும் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.
அப்பல்லாம், ஓவ்வொரு மரத்துக்கும் நான்தான் கோவணத்த கட்டிக்கிட்டு, குளத்துல இருந்து குடம் குடமாக தண்ணி எடுத்து ஊத்துவேன். இப்ப ஓவ்வொரு மரத்துக்கும் தனியாக குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுவோம். ஓவ்வொரு மரத்தையும் நானே முன்னாடி நின்னு, பார்த்து பார்த்து பராமரித்து வளர்ப்பேன். அப்போதான் எனக்கு திருப்தியா இருக்கும்.
முன்னாடி நான் தனி மனிதனாக மரம் வளர்ப்புப் பணியை மேற்கொண்டேன். இப்ப கொஞ்சம் வயசாகிட்டதால தனியா வேலை செய்ய முடியல. அதனால கொஞ்ச ஆள்கள வேலைக்கு வச்சு, மரங்களை பராமரித்து வருகிறேன் என்கிறார் கருப்பையா.
என் தேவைக்காக மட்டும் குறைந்த அளவு விவசாயம் செய்கிறேன். எனக்கு குழந்தைகள் கிடையாது. எனது மனைவியும் மறைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்போதைக்கு எனக்கு மரங்கள்தான் எல்லாமே. நான் இந்த மண்ணில் வாழ்ந்ததற்கு அடையாளமாக சக மனிதர்களும், பறவை போன்ற ஜீவராசிகளும் பயன்பெற, இளைப்பாற சில மரங்களை நட்டு, வளர்த்துள்ளேன் என்பதே எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது என்கிறார் கருப்பையா.