தான் படித்த பள்ளிக்கு ரூ.15 கோடி நிதியுதவி அளித்த HCL ஷிவ் நாடார்!
தான் படித்த பள்ளியின் நிலை கண்டு கவலையுற்ற முன்னாள் பள்ளி மாணவர், பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ15கோடி நிதியுதவி அளித்து, வருங்காலத்தினருக்கேற்ற ஸ்மார்ட் பள்ளியாக மாற்றி பிரம்மிக்க வைத்துள்ளார்.
‘96’படத்தின் தாக்கத்தால் தமிழகத்தில் ஆங்காங்கே உள்ள பள்ளிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னாள் படித்த மாணவர்கள் ரீ-யூனியன் நடத்தி சந்தித்து கொண்டிருக்க, மதுரையில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ஒருவர், பள்ளியின் நிலைகண்டு ரூ15கோடியை பள்ளிக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
இதுபோன்று முன்னாள் மாணவர்கள் முன்வந்து உதவ வேண்டும் என்பதற்கான உதராணமாக மட்டும் அவர் விளங்கவில்லை. அரசுப் பள்ளியில் தமிழ்வழி கல்வி பயின்று, ஐடி உலகத்தையே ஆள முடியும் என்பதற்கான உதாரணமாய் திகழும் ஹெச்சிஎல் கம்பெனியின் நிறுவனர் ஷிவ் நாடாரே, இத்தொகையை அளித்து மதுரை பள்ளியை ஹைடெக்காக மாற்றியுள்ளார்.
ஆம், இந்திய தகவல் தொழில் நுட்பத் துறையில் மாபெரும் சாதனை படைத்துவரும் ஷிவ் நாடார், 1954ம் ஆண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள ’இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி’-ல் படித்தவர். 1937ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளி, 1950ம் ஆண்டில் உயர்நிலை பள்ளியாகவும், 1978ம் ஆண்டு மேல்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில்,
2011ம் ஆண்டு, தான் படித்த பள்ளியை காண வந்திருந்துள்ளார் ஷிவ் நாடார். தான் படித்த வகுப்புகள், ஓடியாடிய விளையாட்டு மைதானம் அனைத்தையும் கண்ட அவருக்கு அழகிய நினைவுகள் வந்து மனமகிழ்வை தரவில்லை. காரணம், பள்ளியிருந்த நிலை அப்படி. உடனே, பள்ளியின் தரத்தை மேம்படுத்த 100கம்ப்யூட்டர் வசதி கொண்ட கம்ப்யூட்டர் லேப் ஒன்றை 1கோடி ரூபாய் செலவில் கட்டிக்கொடுத்துள்ளார்.
“2011ம் ஆண்டு ஸ்கூலுக்கு வந்தவர், பள்ளியில் அவர் படித்ததற்கான ரெக்கார்டு இருக்கானு கேட்டார். நாங்களும் பழைய பைலில் பார்த்து, இருக்கிறதுனு சொன்னவுடன் அவருக்கு ஒரே சந்தோஷம். அப்போவே கம்ப்யூட்டர் லேப் வைக்கனும்னு நிதியுதவி அளித்து முழுவேலைகளை அவர்களே செய்தனர். அப்புறம், ஸ்கூலில் மேம்பாட்டுக்கு தேவையானவைகளை பட்டியலிட்டு தாருங்கள் என்று சொன்னார். நாங்களும் ஆசிரியர் குழு இணைந்து, ஒரு லிஸ்ட் ரெடி பண்ணோம். அவரு நாங்க எதிர்பார்த்ததிற்கும் மேலாக செய்து கொடுத்துள்ளார்,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரன்.
அழகிய வண்ணங்களில் பள்ளியின் சுவர்களை வண்ணமிட்டு, 26 ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட இரு கட்டிடம், வகுப்பறைக்குள் 20 இன்ச் நீள கரும்பலகை, பள்ளி வளாகத்திலே மினரல் வாட்டருக்காகக தனி பிளான்ட், 100 கணினிகளுடன் நவீன லேப், 10,000 புத்தகங்கள் கொண்ட முற்றிலும் குளிர்சாதன வசதிக் கொண்ட நூலகம், நவீன கூடைப்பந்து மைதானம், கபடி மைதானம், பள்ளிவளாகத்தில் அழகிய பூங்கா என முன்னிருந்த பள்ளியின் சாயலே தெரியாதவாறு ரூ15 கோடி செலவில் மாற்றிக் கொடுத்துள்ளார் ஷிவ்நாடார்.
“கடந்தாண்டு பள்ளிக்குத் தேவைகளை பூர்த்திசெய்ய ஒப்புதல் தெரிவித்து வேலைகளை தொடக்கினர். வெறும் நிதியுதவியாக அளித்து ஒதுங்கிக் கொள்ளாமல், HCL நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை இவ்வேலைகளை கண்காணிக்க நியமித்து, அவர்களே முழு வேலையும் முடித்தனர். கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் பள்ளிக்கு வந்திருந்தார் ஷிவ் நாடார். கடந்தாண்டு தேசிய கபடி போட்டியில் எங்கள் பள்ளி தான் சாம்பியன். அதையெல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.
பள்ளியின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்தனும்னு, பள்ளி ஆசிரியர்களின் கற்றல் திறனையும், மாணவர்களின் திறமையையும் கண்டறிய ஹெச்சிஎல் பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தாண்டு 12ம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியையும் பெற்றுள்ளோம். கடந்த சில ஆண்டுகளில் குறைந்தகொண்டே வந்த மாணவர் சேர்க்கை விகிதமும் இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.
”பள்ளியின் மாற்றத்தை கண்டு மகிழும் மாணவர்கள், அவர்களும் வருங்காலத்தில் உயர்ந்த நிலைக்குச் சென்று பள்ளியை மேலும் உயர்த்துவோம் என்று கூறும் போது சந்தோஷமாக இருக்கிறது,” என்றார் ராஜேந்திரன்.