Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஐன்ஸ்டீனை விட அதிக IQ; பள்ளி முடிக்காமலே டிகிரி; வலைவீசும் ஐடி நிறுவனங்கள் - விசாலினி எனும் அறிவுச்சுடர்!

பிறக்கையிலே பல சிக்கல்களுடன் பிறந்து 30நாட்கள் மட்டுமே மண்ணில் உயிர்வாழ்வாள் என்று மருத்துவர்கள் கைவிரிக்கப்பட்ட குழந்தை, இன்று அதிமேதாவி! யாரிந்த விசாலினி?

ஐன்ஸ்டீனை விட அதிக IQ; பள்ளி முடிக்காமலே டிகிரி; வலைவீசும் ஐடி நிறுவனங்கள் - விசாலினி எனும் அறிவுச்சுடர்!

Thursday April 15, 2021 , 6 min Read

கே.விசாலினி - தாயின் கர்ப்பத்திலிருந்து ஏழாவது மாதத்திலே பிறந்த பெண் குழந்தை அவள். கிட்டத்தட்ட கர்ப்பகாலம் முற்றுபெறுவதற்கு 15 வாரங்களுக்கு முன்னரே நிகழ்ந்த பிரசவம் அது. சேயின் நலமோ கேள்விக்குறியாகியது. பூமியில் அவளுடைய வாழ்நாட்கள் வெறும் 30 நாட்களே என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், மெடிக்கல் மிராக்கிள்கள் நிகழும் டெக்யுக காலம் அல்லவா இது. அதிசயங்கள் நிகழத் தொடங்கின. அவள் உயிர்பிழைத்தது மட்டும் மிராக்கிளாக இல்லை, பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு நாளும் அதிசயத்தை நிகழ்த்தினாள். ஆம், அதீத கற்றல் திறன் படைத்தவள். அவளது IQ லெவல் 225.

உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர்கள் வரிசையில் இடம்பெற்ற விசாலினி, நம் மண்ணின் சொத்து. நெல்லை பொண்ணு. 10ம், 12ம் வகுப்பு படிக்காமலே 18 வயதில் பி.டெக் முடித்துள்ள விசாலினிக்கு வலை வீசுகின்றனர் ஐடி நிறுவனங்கள். அதிலும் ஒரு நிறுவனம் அவருக்கு அளிப்பதாகக் கூறிய சம்பளம் ரூ153 கோடி..!
visalini

சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை தான். கம்யூட்டரில் எல்லாரும் உச்சிமுகர்ந்து பாராட்டக் கூடிய பில்கேட்ஸின் ஐக்யூ லெவல் 160. ஏன்? அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஐ.க்யூ லெவலே 190 தான். ஆனால், விசாலினியின் ஐ.க்யூ 225 என கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான சான்றுகளாக இருக்கின்றன அவர் தேர்ச்சி பெற்றுள்ள உயரிய தேர்வுகள்.

உயரிய தேர்வுகளில் கிடைத்த வெற்றியால் 8ம் வகுப்பு மட்டுமே முடித்தவருக்கு கலசலிங்கம் பல்கலைகழகத்தில் பி.டெக் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படிப்பையும் 5 செமஸ்டர்களை உரிய காலத்தில் படித்து முடித்தவர், அடுத்த 3 செமஸ்டர்களை 6 மாதத்திலே படித்து, பட்டப்படிப்பை 3 ஆண்டிலே முடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

The Pride of India – Visalini!

பில்கேட்ஸின் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் நடத்தும் MCP என்கிற தேர்வில் விசாலினி பெற்றது 87% மதிப்பெண்கள். அதைவிட கடினமான சின்கோ சர்டிஃபைட் நெட்ஒர்க் அசோசியேஷன் (CCNA) தேர்வில் 90% எடுத்துள்ளார். சின்கோவின் மற்றொரு தேர்வான CCNA செக்யூரிட்டி என்கிற தேர்விலும் 98% பெற்று தேர்ச்சியடைந்தார்.


இத்தேர்வுகள் அனைத்தும் பொறியியல், எம்.பி.ஏ. பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளின் அறிவுத்திறனை சோதிக்க நடத்தப்படுபவை. உலகளவிலுள்ள சாஃப்ட்வேர் மற்றும் நெட்வொர்க்கிங் இண்டஸ்ட்ரியில் வேலை கிடைப்பதற்காக எழுதப்படும் தேர்வுகள். ஆனால், இவையனைத்தையும் தேர்ச்சி பெறுகையில் விசாலினி பள்ளிப்படிப்பையே முடிக்கவில்லை.

ஹெச்.சி.எல் நிறுவனம் The Pride of India – Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11. 2015ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற 'கூகிள் இந்தியா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். சர்வதேச டெட் மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார்.
visalini

15 வயதில் பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் 700க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கூடியிருந்த அரங்கில் 'பிக் டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு' பற்றிய சொற்பொழிவாற்றி செவிசாய்த்தோரை வியக்க செய்தார். இஸ்ரோவுக்காக ஒரு திட்டத்தையும் மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளார்.

"நான் அதை 35 நாட்களுக்குள் திட்டமிட்டேன். எனது திட்டத்திற்கு 'இஸ்ரோ சேட்டிலைட் சென்டர் - விசாலினியின் நெட்வொர்க் மேனேஜ்மென்ட் சிஸ்டம்' (ஐ.எஸ்.ஏ.சி- வி.என்.எம்.எஸ்) என்று பெயரிடப்பட்டது," என்கிறார் விசாலினி.

இது குறித்து அப்போதைய இஸ்ரோ இயக்குநராக இருந்த டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், "இந்த திட்டத்தில் பணியாற்ற விசாலினி அவரது தாயுடன் இஸ்ரோ விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். நாங்கள் அவளுடைய திறமையை அறிந்து கொள்வதற்காக, வேலையை முடிக்க ஐந்து மாதகால அவகாசம் கொடுத்தோம். ஆனால் அவள் அதை சீக்கிரம் முடித்தாள்.

”நாங்கள் அவளை இஸ்ரோவுக்கு அழைத்தபோது அவரிடம் டிகிரி பட்டமில்லை. அப்போது, அவர் பள்ளியில் படித்து கொண்டிருந்தார். நான் அங்கு பணியாற்றி கொண்டிருந்ததால், அவரை இஸ்ரோவில் இணைத்து அவரது திறமையை நாட்டிற்காக பயன்படுத்தியிருப்பேன். விசாலினி நாட்டிற்கு கிடைத்த பெரிய சொத்து," என்று கூறினார்.
visalini

'இக்குழந்தை கத்தியை போன்றது...'

விசாலினியின் ஐக்யூ லெவலை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதே ஒரு சுவாரஸ்ய நிகழ்வு. "என்னுடைய பாட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியை. ஆயிரக்கணக்கான குழந்தைகளை பள்ளியில் பார்த்திருப்பார். அப்படி இருக்கையில், நான் வீட்டில் செய்யும் சிறுசிறு விஷயங்களில் வித்தியாசத்தைக் கண்டறிந்துள்ளார்.

இரண்டரை வயதில் காம்பஸ் இல்லாமலே சாக்பீஸில் கரெக்ட்டா வட்டம் போட்டுள்ளேன். அதை பார்த்துவிட்டு என் பெற்றோர், ஸ்பெஷல் சைல்ட்டா இருப்பாளோ என்ற டவுட்டில் என்னை டாக்டரிடம் அழைத்து சென்றுள்ளனர். என்னை பரிசோதித்த டாக்டர் நான் பேசுகிறதை மனப்பாடம் செய்து கொள்கிறேனா, கூர்ந்து கவனிக்கிறேனா இல்ல சொல்கிறதை கேட்டு பகுப்பாய்ந்து பதில் பேசுகிறேனா என்பதை சோதிக்க எண்ணி, ஐ.க்யூ டெஸ்டுக்கு பரிந்துரைத்தார். ஐ.க்யூ என்பது ஒரு கணக்கீடு அல்ல. குழந்தை மருத்துவர், பெற்றோர், ஆசிரியர், என யாராலும் அதை கணக்கிட இயலாது.

சில கேள்விகளை வழங்கி, அதற்கு நீங்கள் அளிக்கும் பதில்களை பொறுத்து உங்களது ஐ.க்யூ லெவல் என்ன என்பதை தெரிவிக்கும் சில இணையதளங்கள் உள்ளன. ஆனால், அவை போலியானவை. ஐ.க்யூ லெவலை அறிந்துகொள்ள அது முறையான வழி அல்ல.


மருத்துவ உளவியலாளரிடம் செல்ல வேண்டும். மனநல மருத்துவரில்லை, இந்திய மறுவாழ்வு கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவ உளவியலாளரை அணுகி தான் ஐ.க்யூ சோதனையை மேற்கொள்ள முடியும். உங்கள் ஐ.க்யூ சோதனையை வழங்குவதற்கும், உங்கள் ஐ.க்யூ அளவை பகுப்பாய்வு செய்வதற்கும், பின்னர் ரிப்போர்ட் வழங்குவதற்கும் அவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள், என்று விளக்கமாக கூறினார் குட்டி ஜீனியஸ்.


விசாலினியின் ஐ.க்யூவை மதிப்பீடு செய்த மருத்துவ உளவியலாளர்கள், அவருடைய பெற்றோரிடம் குழந்தைக்கு தனிகவனம் செலுத்தி பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

"இந்த குழந்தை கத்தியை போன்றது. கத்தியை ஒரு கேக் வெட்டவும் பயன்படுத்தலாம், தலையை வெட்டுவதற்கும் பயன்படுத்தலாம்," என்று விசாலினியை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வார்த்தைகளை மனதில் நிறுத்தி கொண்ட விசாலினியின் பெற்றோர்கள் திருமணமாகி ஏழு ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு பிறந்த குழந்தையான விசாலினிக்காகவே இந்த வாழ்வு என எண்ணினர்.

7மாத குறைபிரசவம்; 30 நாள் கெடு;

தாயின் கர்ப்பத்திலிருந்து 7 மாதம் தொடக்கத்திலே சிசரேியன் பிரசவத்தின் மூலம் பிறந்த குழந்தை விசாலினி. குறைமாத பிரசவத்தில் பிறக்கும் சேயும், தாயும் படும் இன்னல்கள் எண்ணற்றவை. ராகமாலிகாவின் பிரசவமும் அவ்வாறே இருந்தது.


பிறக்கும் குழந்தைகளின் சராசரி எடையான 3கிலோவில் சரிபாதியே விசாலினியின் எடை. கிட்டத்தட்ட ஒரு அடி மர ஸ்கேல் அளவில் உடலும், எலுமிச்சை சைசில் தலையும் இருந்ததாக நினைவுகூர்ந்து கடந்துவந்த கடினமான நாட்களை பகிர தொடங்கினார் ராகமாலிகா.

"அவ பொறந்த அன்னிக்கே 30 நாட்கள் தான் உயிர் வாழ்வானு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. அப்படியே உயிர்பிழைத்தாலும், பேச்சுத்திறன் குறைபாடுள்ள குழந்தையா தான் இருப்பா சொல்லிவிட்டனர். நான் அப்போ, ஒரு வானொலியின் அறிவிப்பாளராக இருக்கேன். என் மகளை செவித்திறன் மற்றும் பேச்சுதிறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் சேர்க்க வேண்டுமா என்ற எண்ணமே என்னை சுக்குநுாறாக்கியது.
விசாலினி குழந்தை

ஆனாலும், முழுநம்பிக்கையில் விசாலினிக்கு சிகிச்சை அளித்திட பல ஹாஸ்பிட்டல்களின் படியேறி இறங்கினோம். விசாலினியின் நாக்கு முழுமையாக உருவாகவில்லை என்பதை அறிந்து கொண்டோம். பேசுவதற்கு ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா என்று மருத்துவர்களிடம் ஆலோசிக்க ஆரம்பித்தோம்.


ஆனால், எந்த மருத்துவர்களிடம் இருந்தும் ஆசுவாசமான பதில் கிடைக்கவில்லை. ஒரு வழியாக டாக்டர்கள் கூறிய 30 நாட்கள் முடிந்தது. அவ நல்லாயிருக்கா என்பதே எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. 41வது நாள் திரும்பி பயங்காட்டினா. வாந்தி, சுறுசுறுப்பு இல்லாமலிருந்ததை பார்த்து, பயந்து போய் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனோம்.

முதன் முதலில் ஒரு டாக்டர் அவளால பேச முடியும்னு சொன்னாரு. தினமும் 20 மணி நேரத்திற்கும் குறையாமல் நல்ல, நேர்மறையான விஷயங்களைப் பற்றி விசாலினியுடன் பேசிட்டே இருக்குமாறு அவர் சொன்னார். அவளுடன் பேசிக் கொண்டே இருங்கள், அவள் உங்கள் பேச்சைக் கேட்டாலும், கேட்காவிட்டாலும், அவள் விழித்திருந்தாலோ அல்லது தூங்கினாலோலும் பேசிகிட்டே இருங்கனு சொன்னாரு.

ராகமாலிகா மருத்துவரின் ஆலோசனையை விடாமுயற்சியுடன் பின்பற்றினார். அதிசயங்களும் நிகழ்ந்தன. விசாலினி பேச்சுத்திறன் கிடைத்தது.

"அவளுக்கு மூன்றரை வயதாகும்போது அவளுடைய ஐ.க்யூ பற்றி நாங்கள் அறிந்தோம். அவளுக்கு தனி கவனம் கொடுக்கணும்னு டாக்டர் சொன்னாங்க. வீட்டு வேலைக்கு ஆள் வைக்கவேண்டாம், அவர்களால் ஏதேனும் தவறான தாக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதனாலே இதுநாள்வரை வீட்டு வேலைக்கு யாரையும் வைத்ததே இல்லை. வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே செய்கிறேன்.

என் மகளை கவனித்துக்கொள்வதற்காகவே அவளுக்கு 5 வயதாகும்போது என் வேலையை விட்டேன். அப்போது நான் அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராக மாதம் ரூ.15,000 சம்பளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், ஆனால் விசாலினியின் எதிர்காலம் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.


அவளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் அவளுக்கு வழங்கியுள்ளோம். ஆனால் அவள் தொடர விரும்பும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு எங்களால் நிதியளிக்க முடியாது, என்றார் விசாலினியின் தாய் ராகமாலிகா.

நோபல் கனவு; ஐ.டி கம்பெனி சி.இ.ஓ இலக்கு!

"உலகிலேயே சிறந்த பெற்றோர்களை எனக்கு அளித்ததற்கு முதலில் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். அவர்கள் எனக்காக நிறைய தியாகம் செய்துள்ளார்கள். ஏன், அவங்க எனக்காகவே வாழ்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நான் எழுதிய ஒரு தேர்வுக்கு ரூ.1,00,000 செலவாகியது. அதுபோன்று 12 தேர்வுகள் எழுதியுள்ளேன். அதற்கெல்லாம், பேங்கில் நகைய வச்சு லோன் எடுத்து தான் கட்டினாங்க.

”என்ன நடந்தாலும், என்னுடைய திறமையையும், ஐ.க்யூ பவரை வீணாக்கிடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கின்றனர். என்னுடைய ஐ.க்யூ-வை கொண்டு என்னை சரியான பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்," என்று ஆனந்தமாய் டைம்ஸ் நவ் எடுத்த ஆவணப்படத்தில் பகிர்ந்துள்ளார் விசாலினி.
விசாலினி கலாம்

சர்வதேச சான்றிதழ் படிப்புகளை உள்ளடக்கிய அவரது கல்விக்காக குடும்பம் பல லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளது. விசாலினியின் தந்தை குமாரசாமி, டிப்ளமோ படித்துள்ளார். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர்.


அவர் ஒரு மின்சார துணை ஒப்பந்தக்காரர் மற்றும் விசாலினியின் ஏடிஎம் இயந்திரம். விசாலினியின் அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்வதே அவரது பணி. அவளுடைய எல்லா படிப்புகளுக்கும் அவர் பணத்தை புரட்டி எடுப்பார்.

குர்கானில் உள்ள ஒரு கல்விமையத்தில் சி.சி.என்.ஏ படிப்பைப் படித்தார். மாதம் ரூ.20,000 வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து அங்கேயே 2 ஆண்டுகள் தங்கியிருந்தோம். அந்த படிப்புக்கான கட்டணமே ரூ.7.5 லட்சம். அப்படியின்னா, அந்த ஒரு கோர்ஸ் முடிக்கிறதுக்கு மட்டும் எவ்வளவு பணம் செலவு செய்திருப்போம்னு யோசித்து பாருங்க,"

-என்று விசாலினியின் தாயும், மேனேஜருமான ராகமாலிகா கூறினார். ஆம், விசாலினியின் அனைத்து மின்னஞ்சல்களையும் தொலைபேசி அழைப்புகளையும் அவரே கையாள்கிறார்.

"முக்கியமாக எனக்கு மூன்று கனவுகள் இருக்கு. ஒண்ணு; இந்தியாவுக்கு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் நோபல் பரிசு வாங்கிக் கொடுக்கணும். ரெண்டாவது; கம்ப்யூட்டர் துறை சார்ந்த ஒரு கம்பெனி தொடங்கி அதுக்கு சி.ஈ.ஓ ஆகணும். மூணாவது; மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு ஹோம் ரெடி பண்ணி அவங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கணும். இதை நோக்கித்தான் என் அடுத்த கட்டப் பயணம் தொடருது. நமக்கு வாழ்வு ஒருமுறைதான், அதில் எக்கச்சக்கமா நல்லதை விதைக்கணும்," என்று கூறி முடித்தார் விசாலினி எனும் அறிவு சுடர்!

தகவல் உதவி : தி வீக்கெண்ட் லீடர் மற்றும் விகடன் | படங்கள் உதவி : தி வீக்கெண்ட் லீடர்