இண்டெர்நெட் அடிப்படை உரிமை என அறிவித்த கேரள அரசு: 20 லட்சம் இலவச இணைய சேவையை வழங்க திட்டம்!
இன்றைய காலக்கட்டத்தில் இண்டெர்நெட் என்பது ஒரு அடிப்படை தேவை என்றாகிவிட்டது. மாறி வரும் காலத்துக்கு ஏற்ப கேரள அரசு தனது புதிய முயற்சியை அண்மையில் தனது பட்ஜெட்டில் வெளியிட்டது. அதன்படி, 20 லட்சம் கேரள மக்களுக்கு இலவச இண்டெர்நெட் இணைப்பு தரப்போவதாக அறிவித்துள்ளது. இதை கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் 2017-18 பட்ஜெட்டில் அறிவித்தார். இண்டெர்நெட் அடிப்படை உரிமை என அறிவித்த முதல் இந்திய மாநிலம் கேரளாவாகும்.
இண்டெர்நெட் என்பது இன்று குடிநீர், உணவு, கல்வி போன்ற முக்கிய அம்சங்களில் ஒன்று போக ஆகிவிட்டதால், கேரள அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் எகனாமிக் டைம்ஸ் பேட்டியில் கூறியபோது,
“இண்டெர்நெட் மக்களின் உரிமை என்ற நிலை தற்போது வந்துவிட்டது. இன்னும் 18 மாதங்களில் கே போன் நெட்வர்க் வழியே இணைய இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் செலவு மதிப்பு ரூ.1000 கோடி ஆகும்.”
இதற்காக கேரள அரசு திட்டங்கள் வகுத்து தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதியை செய்துள்ளது. அவர்களின் கணக்குபடி, 20 லட்சம் குடிமக்களுக்கு இலவச இண்டெர்நெட் சேவையை கூடிய விரைவில் வழங்கி, ப்ராட்பாண்ட் இணைப்பை கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அளிக்கவேண்டும் என்பதே இலக்காக கொண்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு ‘K-Fon’ என்று பெயரிட்டு அதற்கான ஆப்டிகல் ஃபைபர் கேபிள் இணைப்புகளை கேரள அரசு மின்சார வாரியத்தின் உதவியோடு மாநிலம் முழுதும் அளித்திட நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
ஐடி துறை செயலாளர் சிவசங்கர் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறுகையில்,
“இண்டெர்நெட் இணைப்பை வரையறுக்கப்பட்ட பாண்ட்வித் அளவிற்கு வீடுகளுக்கு அளிப்பதே அரசின் திட்டமாகும். இதை ஆப்டிக் ஃபைபர் மூலம் மின்சார கேபிள்களுடன் இணையாக அளிக்க உள்ளோம்,” என்றார்.
இந்த திட்டம் 18 மாதங்களில் முடிவடைந்து, அக்ஷயா மையம், ஜனசேவனா கேந்திரா, அரசு அலுவலகங்கள், நூலகங்கள், மற்றும் பொது இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்ஸ் மூலம் இண்டெர்ண்ட் வழங்கப்படும்.
இந்தியாவில் கேரள மாநிலம் அதிக கல்வித்தகுதி உள்ள மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதன் நீட்சியாக மக்களுக்கு மேலும் வசதிகளை பெருக்கி பயனுள்ளதாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே இந்த இலவச இண்டெர்நெட் திட்டமாகும். அரசு செயல்பாடுகள், தனியார் சேவைகள் என எல்லாம் டிஜிட்டல் ஆகிவரும் வேளையில் இந்த அறிவிப்பு அம்மாநில மக்களுக்கு பெரும் உதவியாகவும் ஊக்கத்தையும் அளிக்கும். இது டிஜிட்டல் இந்தியா கனவை நோக்கி பயணிக்க உதவும் வகையிலும் அமையும்.
கட்டுரை: Think Change India