200 சதுர அடியில் தொடங்கி ரூ.3300 கோடி சாம்ராஜ்யமாக ‘தைரோகேர்’ நிறுவனத்தை கட்டமைத்த வேலுமணி!
கோவை அருகே ஏழை விவசாயியின் மகனாக பிறந்த வேலுமணி, மும்பை சென்று வாழ்க்கையை தொடங்கி, பல சவால்களைத் தாண்டி மாபெரும் வளர்ச்சி அடைந்த கதை!
நம் உடலில் வெறும் 15 முதல் 20 கிராம் எடை மட்டுமே கொண்ட ஒரு சிறிய சுரப்பி தைராய்டு. ஆனால் உடலில் சுரக்கும் முக்கிய க்ளாண்டுகளில் இது ஒன்றாகும். அதன் அளவு குறையும் போதும், உயரும் போதும், உடலில் பல மாற்றங்களும், கோளாறுகளும் ஏற்படும் என்பது பலருக்கு தெரியாமல் இருந்த காலத்திலேயே, மும்பையில் தைராய்டு டெஸ்ட் செய்யும் லேப் தொடங்கி அதைத் 'தைரோகேர்’ என்ற நிறுவனம் ஆக்கி, இன்று அதன் மதிப்பை சுமார் 3300 கோடி அளவிற்கு கட்டமைத்துள்ளவர் வேலுமணி ஆரோக்கியசாமி.
கோவை அருகே அப்பனாயக்கன்பட்டிபுதூர் என்ற ஒரு சிறிய கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த வேலுமணி, இத்தகைய மாபெரும் வளர்ச்சியை அதுவும் மும்பை போன்ற பெருநகரத்தில் அடைந்துள்ளார் என்றால் அது சும்மா வந்ததல்ல என்று புரிந்து கொள்ளலாம். தைரோகேர் ஐபிஓ-விற்கு சென்ற நிறுவனம் மற்றும் அதில் அதிக பங்குகளான சுமார் 64 சதவீதத்தை கொண்டுள்ள Dr.வேலுமணியை சந்திக்கச் சென்றேன். வரவேற்பறையில் காத்திருந்து இன்முகத்துடன் நம்மை வரவேற்ற அவரின் தன்னடக்கம் மற்றும் எளிமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வேலுமணி பிறந்து, வளர்ந்த சூழல்
1959-ம் ஆண்டு சொந்த நிலம் இல்லா ஒரு விவசாயின் நான்கு பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார் வேலுமணி. அவரின் அம்மா குடும்ப வருமானத்துக்காக மாடுகளை பராமரித்து, பால் எடுத்து வியாபாரம் செய்து வாரத்திற்கு ரூ.50 ஈட்டினார். இப்படியே வாழ்க்கை 10 ஆண்டுகள் கழிந்தது. ஆனால் இதன் இடையில் வேலுமணி பள்ளிக்கு செல்வதை மட்டும் நிறுத்தவில்லை. சுமாராக படித்தாலும், தானே முயற்சித்து கணக்கு, அறிவியல் பாடங்களை கற்றார்.
“சட்டைக்கூட அணியாமல் பல நாட்கள் ட்ரவுசருடன் பள்ளிக்குச் சென்றுள்ளேன். பஞ்சாயத்து பள்ளியில் போடும் மதிய உணவை சாப்பிட்டே வளர்ந்தேன்,” என்றார்.
அந்த காலத்தில் பட்டம் பெற்ற ஆண்மகன்களுக்கே பெண்களை கட்டித்தர தன் கிராமத்தினர் முன்வந்ததையும் பகிர்ந்தார் வேலுமணி. ஆனால் தனக்கு இருந்த வறுமையே ஒரு வரப்பிரசாதம் என்றார். ஆச்சர்யத்துடன் அதன் விளக்கத்தை கேட்டால்,
“வீட்டில் எந்த வசதியும் இல்லாதது வரம் என்றே சொல்வேன். படிப்பைத் தவிர எந்த பொழுதுபோக்கும் கிடையாது. வெளியே சென்று சினிமா பார்க்கவோ, வேறு கேளிக்கைகளில் ஈடுபடவோ காசில்லாததால் நான் பாடப்புத்தகத்தை மட்டுமே படித்து வளர்ந்தேன்,” என்றார்.
பத்தாம் வகுப்புக்குப் பிறகு கிராமப் பள்ளியில் போதிய வசதி இல்லாததால், கோவையில் தன் மாமா வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்றார். பின் கோவையிலேயே கல்லூரியில் சேர்ந்து 19 வயதில் பி.எஸ்.சி பட்டம் பெற்றார். சரியான வேலை கிடைக்காமல் பல நாட்கள் கோவையில் கழித்தார். சொந்த கிராமத்துக்கு திரும்பி, சிறு தொழில் செய்யும் கனவோடு, கோழிகள் வாங்கி, முட்டை வியாபாரம் செய்ய முனைந்தார். அதைப்பற்றிய போதிய புரிதல் இல்லாமல் அது தோல்வியில் முடிந்தது.
வாழ்க்கையின் அடுத்தக்கட்டம்
மீண்டும் கோவையில் வேலை தேடி அலைந்து, ஒரு வழியாக ஜெமினி காப்சூல் என்ற சிறு பார்மா நிறுவனத்தில் 150 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார் வேலுமணி. எப்போதும் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் வேலுமணி அந்த நாட்களை நினைவுக்கூர்கையில்,
“150 ரூபாயில் 50 ரூபாய் என் செலவுக்கு வைத்துக்கொண்டு, மீதிப்பணத்தை ஊருக்கு அனுப்பி விடுவேன். கையில் 50 ரூபாயுடன் கோவையில் மாதம் முழுதும் கழிப்பேன். அனாவசிய செலவு செய்யும் பழக்கம் எனக்கு அன்றும் இல்லை, இன்றும் இல்லை,” என்றார்.
நான்கு ஆண்டுகள் இப்படியே ஓடியது. வாழ்க்கையில் மாற்றத்தை நோக்கி இருந்த வேலுமணி, செய்தித்தாளில் மும்பை பாபா அட்டாமிக் ரிசர்ச் செண்டரில் பணியிடத்துக்கான விண்ணப்பத்தை பார்த்து அதற்கு விண்ணப்பித்தார். நேர்காணலுக்கு அழைப்பும் வந்தது.
கையில் 400 ரூபாயுடன், ஒருவழி டிகெட் எடுத்து மும்பைக்கு சென்ற வேலுமணி, வேலை கிடைக்குமா இல்லையா என தெரியாததால் மும்பை ஸ்டேஷனில் படுத்துறங்கினார். ஆனால் தன்னுள் சேமித்திருந்த அறிவுத்திறனால் அவருக்கு பாபா ஆட்டாமிக் ஆராய்ச்சி மையத்தில் வேலை கிடைத்தது, வாழ்க்கையே மாறிப்போனது.
பணி வாழ்க்கையும், தொழில்முனைவர் ஆன திருப்புமுனையும்
BARC-ல் பணிபுரிந்து கொண்டே முதுகலை பட்டம் முடித்தார். பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்த சுமதியை மணந்தார். பி.எச்.டி ஆய்வை மேற்கொண்டு டாக்டர் வேலுமணி ஆனார். தைராய்டு பயோகெமிஸ்டிரி-ல் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
“1982-ல் தைராய்டு சுரப்பி உடலில் எங்கு இருக்கிறது என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் 1995-ல் அதில் ஆராய்ச்சி மேற்கொண்டு பி.எச்.டி பெற்றேன்,” என்கிறார்.
14 ஆண்டு காலம் பார்க்-ல் கழித்த Dr.வேலுமணி, தன் மேலாளருடன் ஏற்பட்ட ஒரு சிறிய மனக்கசப்பால் வேலையை தூக்கி எரிந்தார். 20 வினாடிகளில் அந்த மாபெரும் முடிவை, ஒரு நிலையான, மதிப்பான அரசு வேலையை விட முடிவெடுத்த தருணத்தை இன்றும் மறக்க முடியாது என்கிறார்.
அரசுப் பணியில் இருந்தாலும், சிக்கன செலவு மற்றும் சேமிப்பை கடைப்பிடித்ததால், வங்கியில் போதிய பணம் இருந்தது. அதைக்கொண்டு 2 லட்ச ரூபாய் முதலீட்டில் தைராய்டு டெஸ்டிங் லேப் ‘தைரோகேர்’ என்று தொடங்கினார்.
சிறிய தொடக்கம் மாபெரும் வளர்ச்சி
இந்தியா தைராய்டு பிரச்சனை அதிகமுள்ள நாடாக இருந்து வருகிறது. 10-ல் ஒருவருக்கு ஹைபோ-தைராய்டிசம் குறிப்பாக பெண்களுக்கு உள்ளது. ஆனால் அதை கண்டுபிடிக்கும் முறைகள் அரிதாகவும், விலை அதிகமாகவும் இருப்பதை உணர்ந்த வேலுமணி, தைரோகேர் மூலம் சிறந்த, விலை மலிவான அதே சமயம் தரமான டெஸ்டிங்கை தர முன்வந்தார்.
“200 சதுர அடியில் மும்பை பைகுலா சாலையில் ஒரு கராஜில் தைரோகேர் லேப் ஒன்றை தொடங்கினேன். என் மனைவி சுமதி தன் வேலையை விட்டுவிட்டு என் நிறுவனத்தின் முதல் ஊழியராக சேர்ந்தார்,” என்றார்.
தைராய்டு டெஸ்டிங் மையத்துக்கான தேவை அதிகம் இருந்ததால், தைரோகேர் வேகமான வளர்ச்சியை சந்தித்தது. மேலும் வேலுமணி ப்ரான்சைஸ் மாடலில் பல கிளை மையங்களை நாடு முழுதும் ஊக்குவித்தார். எல்லா இடங்களிலும் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள், மும்பையில் உருவாக்கப்பட்ட மைய லேபில் டெஸ்ட் செய்யப்பட்டு அதற்கான முடிவுகள் மீண்டும் மையங்களுக்கு அனுப்பப்பட்டது. ஒரு சில நடைமுறை சவால்கள் இருந்தாலும் துல்லியமான முடிவுகள் மற்றும் ஒருங்கிணைப்பின் மூலமாக இவர்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது.
“நாங்கள் மற்றவர்களைவிட மிகக்குறைந்த கட்டணம் தைராய்டு டெஸ்டிற்கு வசூலித்தோம், ஆனால் தரத்தில் ஒரு நாளும் குறை வைத்ததில்லை. அதிக சாம்பிள்கள் மூலம் வருவாய் மாதிரியை கொண்டிருந்ததால் எங்களால் வெற்றியடைய முடிந்தது,” என்று விளக்கினார்.
மே மாதம் 2016-ல் தைரோகேர் நிறுவன மதிப்பு ரூ.3377 கோடியாக இருந்தது. அதனடையடுத்த 100 நாட்களில் தைரோகேர் ஐபிஓ-க்கு சென்றது. Dr.வேலுமணி இன்றும் நிறுவன பங்குகளில் 64 சதவீதத்தை கொண்டு சுமார் 2000 கோடிக்கு அதிபதி எனலாம். ஆனால் அவரைக் கேட்டால் தனக்கென சொந்த வீடு கூட வைத்துக்கொள்ளவில்லை என்கிறார் தன்னடக்கத்துடன்.
“நான் சொந்த வீடு என்று வாங்கவில்லை. மும்பையில் உள்ள அலுவலக மாடியிலேயே வீடு உள்ளது அதில் தான் என் குடும்பத்துடன் வாழ்கிறேன். நினைத்தபோது நினைத்த நகரத்துக்கு அல்லது என் சொந்த ஊர் பக்கம் போய் செட்டில் ஆவேன், அதனால் சொந்தமான வீடு என்ற அவசியம் எனக்கு வந்ததில்லை,” என்கிறார்.
2016-ல் மனைவியை இழந்தார். இரு பிள்ளைகளுடன் வசிக்கும் இவர், அவர்களையும் மிகவும் சிம்பிளாக வளர்த்துள்ளதாக தெரிவித்தார். தைரோகேர் மூலம் தைராய்டு குறித்த விழிப்புணர்வு, பெண்கள், கர்பிணிகளுக்கு அதன் அவசியத்தை பற்றி நாடெங்கும் பேசி வருகிறார் வேலுமணி. மேலும் மற்ற டெஸ்டுகள் செய்யும் வசதிகளை விரிவாக்கம் செய்துள்ளனர்.
58 வயதாகும் Dr.வேலுமணியின் சுறுசுறுப்பையும், வேகத்தையும் பார்க்கையில் அவர் இந்த வெற்றியோடு ஓயப்போவதில்லை என்பது நமக்கு தெளிவாகப் புரியும். சரி இன்னும் என்னதான் உங்கள் இலக்கு என்றால்?
“அடுத்த ஜீரோ தான்... என்றார். அப்படினா? 1 கோடி வருமானம்/வாடிக்கையாளர்கள் தொழிலில் கிடைத்தால் உங்கள் அடுத்த இலக்கு 10 கோடியாக இருக்கவேண்டும். அப்படித்தான் நான் என் இலக்கை நீட்டிக்கொண்டே வந்துள்ளேன்,” என்றார்.
Dr.வேலுமணியிடம் பேசப்பேச நமக்குள் உத்வேகமும், ஊக்கமும் நிச்சயம் பொங்கி வழியும். அவர் கூறும் வாழ்க்கை தத்துவங்களும், சினிமா டயலாக்குடன் ஒப்பிடுதலும் எதார்த்தத்தை காட்டும். இறுதியாக, அவரின் இந்த அபார வளர்ச்சி அதனால் ஏற்பட்டுள்ள உணர்வைப் பற்றி கேட்டேன். அதற்கு அவர்,
“என் பெற்றோர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். எனக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கித்தரக் கூட அவர்களிடம் பணம் இல்லை. நான் வாழ்க்கையின் கூர்கோபுரத்தின் அடித்தட்டில் இருந்தேன், இப்போது மேல் தட்டில் உள்ளேன். ஆனால் இந்த வளர்ச்சி அவ்வளவு எளிதாக வந்ததல்ல,” என்று கூறி விடைப்பெற்றார்."