Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

40 கிலோ அரிசி மாவு; 2000 இடியாப்பம்: 3 நண்பர்கள் தொடங்கிய ‘இடிஆப்’ப ப்ராண்ட்!

உணவுத் துறையில் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவரும் இடியாப்பத்திற்கென ஒரு பிராண்ட்டை உருவாக்கி, சுத்தமான மற்றும் தரமான மூங்கில் தட்டு இடியாப்பங்களை மக்களை சென்றடைய வைத்து வருகின்றனர் மூன்று நண்பர்கள்.

40 கிலோ அரிசி மாவு; 2000 இடியாப்பம்: 3 நண்பர்கள் தொடங்கிய ‘இடிஆப்’ப ப்ராண்ட்!

Friday July 02, 2021 , 4 min Read

'இடியாப்பேம்ம்ம்ம்...' காலை, மாலையென இருவேளைகளிலும் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் ஒலிக்கும் வார்த்தை அது. அந்தளவிற்கு, உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை.


ஆனால், சைக்களில் நாள்தோறும் கொண்டு வரும் இடியாப்பம் சுகாதாரன முறையில் சமைக்கப்படுகிறதா? என்று சிந்திக்கத் தொடங்கியதில், இடியாப்பத்திற்கென ஒரு பிராண்ட்டை உருவாக்க முயன்றுள்ளனர் மூன்று நண்பர்கள். சிக்கலான இடியாப்பத்தினை உடலுக்கு சிக்கலற்ற முறையில் தயாரிக்கவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் அம்மூவரும்.


சென்னையைச் சேர்ந்த நண்பர்களான ஆனந்த் எல்லப்பன், விசு, மற்றும் சித்தார்த் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து கடந்தாண்டு 'IDiapp' என்ற பெயரில் இடியாப்ப விற்பனையை துவங்கியுள்ளனர். எம்.பி.ஏ படித்துள்ள ஆனந்த், இதற்கு முன்னதாகவே கயிலாங்கடை கான்செப்டை அப்கிரேட் செய்து ஆன்லைனில் தொழிலைத் துவங்கியுள்ளார்.

முதல் தொழில் தோல்வியில் முடிய, கார்ப்பரேட் பணிக்குச் செல்லவும் மனமற்று, கிடைத்த வேலைகளை செய்துள்ளார். அவரது தொடர் தோல்விகளுக்குப் பின் உதித்த ஐடியாவே இடியாப்ப பிசினஸ். கடந்தாண்டு வெறும் 150 இடியாப்பத்துடன் தொடங்கிய தொழில், இன்று நாளொன்றுக்கு 40கிலோ அரிசிமாவில் இடியாப்பம் தயாரிக்கின்றனர். 1,500 முதல் 2,000 இடியாப்பங்கள் தினமும் சென்னை முழுவதும் பறக்கின்றன.
இடியாப்பம்

iDiapp குழுவினர்

"வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம்னு பயத்திலிருந்த காலம் அது. அப்போ தான், டிரம்மில் இடியாப்பம் வித்திட்டு போன ஒருத்தர பார்த்தேன். அங்கிருந்து பாட்டி வீட்டுக்கு போன அங்கேயும் ஒருத்தர் இடியாப்பம் விற்றுக் கொண்டு வந்தார்.


தொடர்ச்சியாக, சிட்டிக்குள் டிரம்மில் இடியாப்பம் விற்பவர்கள் நிறைய பேரை பார்த்தேன். அப்போ தான், இடியாப்பத்திற்கு அவ்வளவு டிமாண்ட் இருக்குனு புரிஞ்சது. ப்ரெண்டுட்ட நாம இடியாப்பம் செய்து, அதற்கான ஒரு பிராண்டை ஏன் உருவாக்கக்கூடாதுனு கேட்டேன். அவனுக்கும் ஐடியா பிடித்திருந்தது. முதலில் அந்தத்துறை எப்படி செயல்படுகிறதுனு பார்க்க களஆய்வு செய்தோம்.

”சென்னையில் மட்டுமுள்ள 20 இடியாப்பம் தயாரித்து விற்பவர்களின் கிச்சனை நேரடியாக போய் பார்த்தோம். அங்கபோன, பெரிய ஷாக். இடியாப்பத்தை பிளாஸ்டிக் தட்டில் வேக வைக்கிறார்கள். ஐயோ, மக்களுக்கு இதையா விற்கிறாங்கனு திகைச்சிட்டோம். அவங்களே சொல்றாங்க சில சமயங்களில் இடியாப்பம் அதிகப்படியாக வேக வைத்துவிட்டால், பிளாஸ்டிக் வாடை வரும். கொஞ்ச நேரம் எடுத்து வெளியே வைத்திருப்போம். பிளாஸ்டிக் வாடை போயிரும்னு சொன்னாங்க. அதன் பிறகு, உறுதியாக இடியாப்பத்தை நல்ல தரத்தில் தயாரித்து அதற்கான பிராண்ட்டை உருவாக்க வேண்டும் என முடிவு எடுத்தேன்.”

மக்கள் ஏன் வீட்டிலே இடியாப்பத்தை செய்துகொள்ள மாட்றாங்கனு அப்புறம் தான் புரிஞ்சது. ஏன்னா, இடியாப்பம் செய்யுறது ஈஸியான பிராசஸே கிடையாது. இடியாப்பம் செய்கிறது தான் அப்படியிருக்கும்னு பாத்தா, இடியாப்பம் மாஸ்டரை மட்டும் 2 மாசம் வலை வீசி தேடி தான் கண்டுபிடித்தோம்.


ஆனால், அவரும் பிளாஸ்டிக் தட்டில் செய்தால் சுலபமாக தயாரிக்கலாம்னு சொன்னார். எங்களுக்கு அதில் துளியும் உடன்பாடில்லை. அதற்கு என்ன மாற்றுனு தேடின அப்போ, மூங்கில் தட்டில் இடியாப்பம் செய்யலாம்னு பாத்தோம். எங்களுக்கு அது ரொம்பவே பிடித்தது.

மூங்கில் தட்டில் பராம்பரிய இடியாப்பம் என்ற கான்செப்டில் விசு, சித்தார்த் என என்னுடைய 2 நண்பர்களோட சேர்ந்து 'இடி ஆப்' என்ற பெயரில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனமாக பதிவு செய்தோம். சித்தார்த் சோஷியல் மீடியா பக்கங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்று கொண்டார்.
Idiyappam

முந்தைய தொழில்களில் பெரிய சிக்கல்களைச் சந்தித்திருந்த ஆனந்திற்கு, இடியாப்பம் தொழிலைத் துவங்குவதற்கான முதலீடை திரட்டுவது சிரமமாகியுள்ளது. இறுதியில் 30 ஆயிரம் முதலீட்டில், அவரது வீட்டு கிச்சனிலே இடியாப்பத்தை தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.

"கயிலாங்கடை கான்செப்டை இணைய வழியில் மக்களை ஏமாற்றாமல் நியாயமான விலை கொடுத்து வாங்கி தொழில் செய்து வந்தேன். ஆனால், அந்தத் தொழிலில் போதுமான முதலீடு இல்லாததால் தொடர முடியவில்லை. அந்த பிசினஸில் எனக்கு ரூ.2.5 லட்சம் நஷ்டம். இந்த சூழலில் என்னால் இடி ஆப்பில் முதலீடு செய்ய முடியவில்லை. நண்பர் விசு அவரிடமிருந்த நகைகளை அடமானம் வைத்து முதலீடு செய்தார். அப்பா என் மீது வைத்திருந்த நம்பிக்கையின் மிச்சத்தினால், ரூ.30,000 கொடுத்தார். மாஸ்டருக்கான தினக்கூலியாக ரூ.1000 தீர்மானித்திருந்தோம். கண்டிப்பாக, எங்களுக்கு இதிலிருந்து பெரிய வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

ஏற்கனவே, வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்ற மனஉளைச்சலில் இருந்ததால் எதையும் சந்தித்துக் கொள்ளலாம் என்கிற துணிவில் இறங்கினோம். தொழிலை ஆரம்பிக்கிறது முன்னாடி, தெருவில் உள்ள அனைத்து வீட்டுக்கும் கொடுத்து, ஃபீட்பேக்-லாம் வாங்கி தொழில் தொடங்க ரெடியாக இருந்தோம். கரெக்ட்டா இந்தியா முழுக்க லாக்டவுன் அறிவிச்சாங்க. மனதளவில் சேர்வுடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென கொரோனா நிவாரணப் பணிகளை செய்து வந்தோம்.

ஒரு வழியாக கடந்த மே மாதத்தில் சிறு, குறு நிறுவனங்களை திறக்க அரசு அனுமதித்தது. ஓராண்டுக்கு முன், தொழிலைத் துவங்கினோம். இன்ஸ்டாகிராமில் ப்ரி புக்கிங் முறையில் ஒரு நாளுக்கு முன்பாகவே எடுத்தோம். அது தவிர நாங்களே டிரம்மில் இடியாப்பத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு தெருவாக சென்று விற்க ஆரம்பித்தோம்.

ஆர்டருக்கு ஏற்றவாறு இடியாப்பங்களைத் தயாரிக்க ஆரம்பிப்போம். அதிகாலை 2 மணிக்கு கிச்சனில் வேலையை ஆரம்பிப்போம். மாவு பிசைந்து, இடியாப்பம் பிழிந்து, காலை 6.30 மணியலிருந்து டெலிவரியை ஸ்டார்ட் பண்ணுவோம். தொடக்கத்தில் நாங்களே டெலிவரி பாயாகவும் பணியாற்றி வந்தோம்.


தொழில் ஆரம்பித்த புதிதில் கிடைத்த 4 ஆர்டர்களும் சென்னையின் நான்திசைகளில் இருக்கும். வெறும் 4 ஆர்டர்களை டெலிவரி கொடுக்க சென்னையையே சுற்றி வருவோம். கொரோனா டைம் என்பதால், 5 இடியாப்பத்தை ஒரு பையில் பேக் செய்து 25ரூபாய் என்று விற்பனை செய்தோம். முதல் நாள் 31 பாக்கெட்கள் விற்பனையாகியது. ஆன்லைனில் 1 ஆர்டர் கிடைத்தது. மினிமம் 4 பாக்கெட் தான் ஆர்டர் பண்ண முடியும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் பெருகியது. எங்களது வாடிக்கையாளரின் பரிந்துரை மூலம் வாடிக்கையாளர்கள் சேர்ந்தனர்.

நாங்க ரேஷன் அரிசி பயன்படுத்துவதில்லை. மூங்கில் தட்டில் தான் வேக வைக்கிறோம். காலையில் மிச்சமாகும் இடியாப்பங்களை ஈவ்னிங் விற்பதில்லை. மிச்சமாகுவதை அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துவிடுவோம். இப்போதைக்கு இடியாப்பத்திற்கு எந்த சைட் டிஷ்ஷூம் விற்கவில்லை. பிளைன் இடியாப்பம் மட்டும் தான் விற்கிறோம். இப்போது 8 பேர் கொண்ட டீமாக செயல்படுகிறோம். நாளொன்றுக்கு இன்ஸ்டாவில் இருந்து மட்டும் 40 ஆர்டர் கிடைக்கிறது. அதுபோக, நேரடி விற்பனையும் ஒரு அளவுக்கு பிக் -அப் ஆகியுள்ளது.
Idiyappam
முதல் நாள் 150 இடியாப்பத்தில் விற்பனையைத் தொடங்கினோம். இன்று ஒரு நாளுக்கு 40 கிலோ அரிசி மாவுக்கு இடியாப்பம் செய்கிறோம். தினம் 1,500 முதல் 2000 இடியாப்பம் விற்பனையாகிறது. ஒரு இடியாப்பத்தின் விலை ரூ.5. இப்போதும், எங்க எல்லாருக்கும் ஆளுக்கு நாளொன்றுக்கு ரூ.300 கிடைக்கிறது அவ்வளவு தான். ஆனால், நாங்க நினைத்தது போல் மக்களுக்கு கெடுதல் இல்லாத உணவுப் பண்டத்தை வழங்குகிறோம் என்பதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது.

எதிர்காலத்தில் தரமான இடியாப்பத்திற்கான பிரண்ட்டாக 'iDiapp'- ஐ கொண்டு வரணும். இப்போது வெப்சைட் மட்டும் தான் உள்ளது. பிரத்யேக ஆப் ஒன்று உருவாக்க வேண்டும் என்று சிறுசிறு திட்டங்களோடு பயணித்து கொண்டுள்ளோம், என்று கூறிமுடித்தார் ஆனந்த்.


இன்ஸ்டா பக்கம் :

இணையதள முகவரி :