2022: தமிழில் நம்பிக்கை விதைத்த நச்சுன்னு நாலு 'க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்'
தமிழ் சினிமாவுக்கு 2022 நிச்சயம் ஒரு சிறப்பான ஆண்டுதான். கன்டென்ட் - வசூல் ரீதியில் கவனிக்கத்தக்க படங்கள் வரிசைகட்டின. ஆனால், வெப் சீரிஸை பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. எனினும், க்ரைம் - த்ரில்லர் ஜானரில் தமிழில் வெளிவந்த நான்கு வெப் சீரிஸ்கள் ஓரளவு நம்பிக்கையைத் தருகின்றன. அவை
தமிழில் 10-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்கள் 2022-ல் காணக் கிடைத்தாலும், அவற்றில் நான்கு மட்டுமே கவனம் ஈர்த்துள்ளது. இந்த நான்குமே க்ரைம் - த்ரில்லர் ரக திரைக்கதையைச் சேர்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெப் சீரிஸ் என்றாலே ரத்தமும் தெறிப்புமாக விறுவிறுவென நகர்ந்தால் மட்டுமே ரசிகர்களை ஈர்க்கும் என்று தமிழ்த் தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்களோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஆங்கிலத்திலும், பல வெளிநாட்டு மொழிகளிலும் வெவ்வேறு ஜானர்களில் ஈர்க்கத்தக்க வெப் சீரிஸ்கள் காணக் கிடைக்கின்றன.
இந்தியில் கூட வெரைட்டி கிடைக்கிறது. 2023-ம் ஆண்டிலாவது க்ரைம் - த்ரில்லர் தாண்டிய வேறு ஜானர்களில் தமிழில் வெப் சீரிஸ்கள் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன், 2022-ல் வெளியானவற்றில் முக்கியமான நான்கு வெப் சீரிஸை விரைவாக அலசுவோம்.
நச்சுன்னு நாலு க்ரைம் த்ரில்லர் வெப் சீரிஸ்!
1. விலங்கு
அடுத்தடுத்து இரண்டு கொலைகள், கொல்லப்பட்ட ஒருவரின் தலை காணாமல் போனது எப்படி, அந்தக் கொலைகள் நடந்தது எப்படி, கொலையாளி யார்? - இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி விசாரணை நடத்துகிறார் எஸ்.ஐ விமல். மொத்தம் ஏழு எபிசோடுகள் மட்டுமே. போலீஸ் ஸ்டேஷன், காவலர்கள், கைதிகள் என தொடங்கும் இந்த சீரிஸ், கொஞ்சம் கொஞ்சமாக மர்ம முடிச்சுகளுடன் பரபரப்பான நகர்கிறது. இறுதி வரை த்ரில் அனுபவம் கடத்தப்படுகிறது.
போலீஸ் எஸ்.ஐ கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் நடிகர் விமல். அவரது மனைவியாக வரும் இனியாவும் கவனம் பெறுகிறார். நிறைய கதாபாத்திரங்கள் வந்து போனாலும் பாலசரவணனும், புதுமுக நடிகர் ரவியும் சீரிஸ் முழுக்க ஆக்கிரமித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். குறிப்பாக, கிச்சா கதாப்பாத்திரத்தில் வரும் ரவி, இந்தத் தொடரை மிரட்டலாக நகர்த்திச் செல்ல துணைபுரிந்திருக்கிறார். நீங்கள் இவரை நிறைய மீம்களில் கவனித்திருக்கலாம்.
இது க்ரைம் - திரில்லர்தான். ஆனால், கிராமப்புற வட்டார மக்களின் வாழ்வியல், சாதி சார்ந்த விஷயங்கள் என கச்சிதமாக பலவற்றை போகிற போக்கில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ்.
புலனாய்வுக் கதைகள், க்ரைம் - த்ரில்லர்கள் மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கு சிறப்புத் தீனியாக Zee5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது ‘விலங்கு’ வெப் சீரிஸ். வெளிநாட்டு, வெளிமாநில க்ரைம் - த்ரில்லர் சீரிஸ்களைப் பார்த்து சலித்துப் போன தமிழ் ரசிகர்களுக்கு ‘விலங்கு’ நிச்சயம் நெருக்கமான அனுபவமும் தரும்.
2.சுழல்
கோவை அருகே சிமென்ட் தொழிற்சாலை ஒன்றில் போராட்டம் நடக்கும் மறுநாளில் ஆலைக்குத் தீ வைக்கப்படுகிறது. மறுபுறம், அந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய சண்முகத்தின் மகள் காணாமல் போகிறார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக காவல் ஆய்வாளர் ரெஜினா தாமஸ் (ஸ்ரீயா ரெட்டி), உதவி காவல் ஆய்வாளர் சக்ரவர்த்தி (கதிர்) விசாரணை நடத்துகின்றனர். பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த விசாரணை.
புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில், இயக்குநர்கள் பிரம்மாவும், அனுசரணும் இந்த 8 எபிசோடுகள் கொண்ட தொடரை இயக்கியுள்ளனர். ஸ்ரீயா ரெட்டி, கதிர், பார்த்திபன் மூவரும் தேவையான நடிப்பைத் தந்துள்ளனர். குறிப்பாக, முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இயல்புமீறாத நடிப்பால் மிளிர்கிறார். கோபிகா ரமேஷ், ஹரீஷ் உத்தமன், இளங்கோ குமாரவேல், லதா ராவ், பிரசன்னா பாலச்சந்திரன், சந்தான பாரதி முதலானோர் உறுதுணை நடிப்பில் வலு சேர்க்கின்றனர்.
க்ரைம் - த்ரில்லர்தான் என்றாலும் இந்த சீரிஸில் தூவப்பட்டிருக்கும் மெசேஜ்களும் கவனிக்கத்தக்கவை. இனம், மதம், மொழி, தோற்றத்தை வைத்து ஒருவர் இப்படிப்பட்டவராகத்தான் இருப்பார் என்ற முன்முடிவுகளுக்கு வரக் கூடாது என்பது அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இந்த சீரிஸின் பெயருக்கு ஏற்றாற்போல் திருப்பங்கள் 'சுழல்'கின்றன. குறிப்பாக, சவாலான பிற்பகுதிகளில் கதையை நகர்த்திய விதம் சிறப்பு. நேரமும் ஆர்வமும் கொண்டவர்கள் மிஸ் பண்ணக் கூடாத எங்கேஜிங்கான இந்த ‘சுழல்’, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
3.தமிழ் ராக்கர்ஸ்
சீரிஸின் தலைப்பைப் பார்த்தே கதைக்களம் புரிந்திருக்கும். திருட்டு விசிடி, டொரன்ட் என புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு கோடிகளை அள்ளும் எளிதில் புலப்படாத கும்பல் பற்றி ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். மொத்தம் 8 எபிசோடுகள். இயன்றவரை எங்கேஜிங்காக நகர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ் சினிமாவின் அறியப்படாத பக்கங்களையும் நமக்குக் காட்ட முற்பட்டிருப்பது சிறப்பு.
புலனாய்வாளர் அருண் விஜய்க்கு செம்ம தீனி போடும் கேரக்டர். அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார். அவரது மனைவியாக வரும் ஐஸ்வர்யா மேனன் தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். வாணி போஜன், அழகம்பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர் வெகுவாக ஈர்க்கின்றனர். இந்த சீரிஸின் ஹைலைட் என்றால், அது ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவுதான். பின்னணி இசையும் அடர்த்தியைக் கூட்டுகிறது.
நமக்கு எளிதாக டவுன்லோடு செய்து காணக் கிடைக்கக் கூடிய படங்களுக்குப் பின்னால் புதைந்திருக்கும் இருட்டு உலகத்தையும், திரைத்துறையில் நமக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொன்ன வகையிலும் ஈர்க்கிறது இந்த சீரிஸ்.
நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள் தயக்கமின்றி, சோனி லிவ் ஓடிடி தளத்தில் உள்ள ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸைப் பார்க்கலாம்.
4.வதந்தி
‘2022-ல் தமிழில் வெளிவந்த வெப் சீரிஸில் மிகச் சிறந்தது எது?’ என்று கேட்டால், முதலில் சொல்லத் தோன்றுவது ‘வதந்தி’ என்ற பெயரைத்தான். இதுவும் க்ரைம் - திரில்லர் ரகம்தான். ஆனால், பெண்கள் விஷயத்தில் சமூகத்தின் முகத்திரையைக் கிழித்த விதத்திலும், திரைக்கதை அமைப்பிலும் அதிகம் ஸ்கோர் செய்கிறது இந்த வெப் சீரிஸ்.
குமரி மாவட்டத்தில் வெலோனி என்ற இளம்பெண் மர்ம முறையில் கொல்லப்படுகிறார். கொலையாளியைத் தேடும் காவல் அதிகாரி எஸ்.ஜே.சூர்யாவின் விசாரணைப் பயணம்தான் திரைக்கதை. பொதுவாக ஒவ்வொரு எபிசோடு முடிவில்தான் ஒரு ட்விஸ்ட் வைக்கப்படும். ஆனால், இங்கே ஒவ்வொரு எபிசோடிலும் ஏகப்பட்ட திருப்பங்கள். ஆனால், அத்தனையும் அர்த்தமுள்ளவை.
அகிரா குரோசவாவின் ‘ரோஷமான்’, தமிழில் சிவாஜி நடித்த ‘அந்தநாள்’ போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட அட்டகாசமான திரைக்கதை உத்தி ‘வதந்தி’யில் பக்காவாக பின்பற்றப்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தை பலரும் தங்களது கோணத்தில் வெவ்வேறு விதமாக விவரிக்க, எது உண்மை - எது பொய் என்று கணிக்க முடியாத அளவுக்கு நம்மை திணறடிக்கும் அம்சதான் இங்கே ஹைலைட்.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடரை மிகச் சிறப்பாக எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். மொத்தம் 8 எபிசோடுகள். ஸ்லோ பர்னிங்காக நம்மை ஆட்கொண்டுவிடும் திரைக்கதை. ஒரே இரவில் பார்த்து முடித்துவிடத் தூண்டும் வகையில் சிறப்பான சம்பவங்களை நிகழ்த்தியிருக்கிறது ‘வதந்தி’.
மலையாளம் கலந்த தமிழ்ப் பேச்சு வழக்கு, ‘உண்மை நடக்கும்; பொய் பறக்கும்’ என்பன போன்ற நறுக் சுறுக் வசனங்கள், கதாபாத்திரங்களில் துறுத்தாத தேர்ந்த நடிப்பு, செய்தி ஊடகங்களின் இருட்டுப் பக்கங்கள், நம் மக்களின் பொதுபுத்தி, பெண்கள் மீதான சமூகத்தின் பாதகப் பார்வைகள் என ‘வதந்தி’யின் பாசிட்டிவ்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
குறிப்பாக, எஸ்.ஜே.சூர்யாவின் அட்டாகசமான நடிப்பு நம்மை மிரட்டும். இயல்பான ஒரு விசாரணை அதிகாரியை நம் கண்முன்னே நிறுத்துகிறார். வெலோனி கதாபாத்திரத்தில் நடித்திள்ள சஞ்சனாவும், அவரது அம்மா கதாபாத்திரத்தில் வரும் லைலாவும், போலீஸாக வரும் விவேக் பிரசன்னாவும், எழுத்தாளராக வரும் நாசரும் தங்களது தேர்ந்த நடிப்பாற்றலால் வலு சேர்த்துள்ளனர். நல்ல த்ரில் அனுபவம் மட்டுமின்றி, சமூகப் பார்வையையும் மாற்றவல்ல இந்தப் படைப்பு நிச்சயம் ஒவ்வொருவரும் தவறாமல் பார்க்கத்தக்கது.
இவை தவிர ஜல்லிக்கட்டு பின்புலத்தில் வெளியான ‘பேட்டைக்காளி’ வெப் சீரிஸ் ஆஹா ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. அதுவும் ஒர்த் ஆன ஒன்றே. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் த்ரில்லர் டிராமாக வந்திருக்கும் ‘Fall’ வெப் சீரிஸையும் தயங்கமால் ட்ரை பண்ணலாம்.
Edited by Induja Raghunathan