2022: IMDB பட்டியலில் இடம் பெற்ற டாப் 10 இந்திய படங்கள் எவை?
2022ம் ஆண்டு இந்திய மக்களை கவர்ந்த டாப் 10 படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. இதில் விக்ரம் முதல் காந்தாரா வரை தென்னிந்திய படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2022ம் ஆண்டு இந்திய மக்களை கவர்ந்த டாப் 10 படங்களின் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. இதில் விக்ரம் முதல் காந்தாரா வரை தென்னிந்திய படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்து மக்கள் தங்கள் ரேட்டிங்கை அளிக்கும் வகையிலான வலைதளம் ஐஎம்டிபி (IMDB). இதில் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களையும், படத்திற்கான ரேட்டிங்கையும் பதிவிடலாம். அதனைக் கொண்டு ஐஎம்டிபி தளம் டாப் 10 படங்களின் பட்டியல்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், 2022ம் ஆண்டு கொரோனா, ஒமைக்ரான், மழை, வெள்ளம், புயல் என மக்களை வாட்டி வதைத்தாலும், தென்னிந்திய திரையுலகிற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
டாப் 10 படங்கள் எவை:
இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா தான் என்ற நிலை இருந்து வந்த நிலையும் இந்த ஆண்டு அடியோடு மாறியுள்ளது. “பாலிவுட்டை எங்கப்பா காணோம்” என வலைவீசி தேடி அளவிற்கு பட்டியலில் தென்னிந்திய படங்கள் பட்டையைக் கிளப்பியுள்ளன.
- ஆர்ஆர்ஆர் (ரணம், ரத்தம், ரெளத்திரம்) (RRR)
- தி காஷ்மீர் பைல்ஸ் (The Kashmir Files)
- கே.ஜி.எஃப்: இரண்டாம் பாகம் (K.G.F: Chapter 2)
- விக்ரம் (Vikram)
- காந்தாரா (Kantara)
- ராக்கெட்ரி: தி நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect)
- மேஜர் (Major)
- சீதா ராமம் (Sita Ramam)
- பொன்னியின் செல்வன்: பாகம் ஒன்று (Ponniyin Selvan: Part One)
- சார்லி 777 (Charlie 777)
கதை மற்றும் பலவீனமான ஸ்கிரிப்டிங் காரணமாக இந்தி சினிமா பின் தங்கிவிட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப்படங்கள் பட்டியலை ஆக்கிரமித்துள்ளது.
1. ஆர்ஆர்ஆர் எனும் மேஜிக் (RRR): Rating - 8/10
ஐடிஎம்பி பட்டியலில், ராம் சரண்-ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் (ரணம், ரத்தம், ரெளத்திரம்) (RRR) திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இது 1,200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்த சாகச சினிமா, வட இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வெகுவாக வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
2. தி காஷ்மீர் பைல்ஸ் (The Kashmir Files): Rating - 8.3/10
விவேக் அக்னிஹோத்திரி கதை மற்றும் இயக்கத்தில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' (The Kashmir Files) திரைப்படம் வசூல் ரீதியாக எந்த அளவிற்கு கோடிகளை குவிந்ததோ, அதே அளவிற்கு விமர்சனமும் எழுந்தது. ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி மற்றும் புனித் இஸ்ஸார் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
80-களின் பிற்பகுதியில் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரில் வசித்து வந்த இந்து பண்டிட்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது தொடர்பாக கதை உருவாக்கப்பட்டிருந்தது. இது நடந்த சம்பவத்தை அதிகமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள படம் என ஏராளமான குற்றச்சாட்டுக்கள், மத ரீதியிலான விமர்சனங்கள் எழுந்த போதும் திரையங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது.
அத்துடன் ஐஎம்டிபி தளத்தில் டாப் 10 பட்டியலில் இடம் பெற்ற ஒரேயொரு இந்தி படம் இதுமட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
3. கே.ஜி.எஃப்: இரண்டாம் பாகம் (K.G.F: Chapter 2) - 8.4/10
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தின் தொடர்ச்சி கேஜிஎஃப் (சேப்டர் 2). ராக்கி பாய் என்ற தனிநபர் கேஜிஎஃப் எனும் தங்க சாம்ராஜ்யத்தை ஆளும் ராஜாவாக மாறுவது தான் கதைக்களம். கன்னடத்தில் வெளியாகி 1200 கோடி வரை வசூல் செய்த இந்த திரைப்படம் ஆக்ஷன் படங்களுக்கான ட்ரெண்ட் செட்டராகவும் மாறியுள்ளது.
4. விக்ரம் (Vikram): 8.4/10
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் வசூல் சாதனையையும், வரவேற்பையும் பெற்றிருந்தது. உலக நாயகனுடன் நடிப்பு அசுரர்களான பகத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரும் இணைந்து நடித்தது படத்திற்கு கூடுதல் மதிப்பாக அமைந்தது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 400 கோடி ரூபாய்க்கும் மேலாக பாக்ஸ் ஆபீஸ் கல்லா கட்டியது.
5. காந்தாரா (Kantara) - Rating -8.6/10
ரிஷப் ஷெட்டி எழுதிய இயக்கிய, நடித்த காந்தாரா திரைப்படம் செப்டம்பர் மாதம் கன்னடத்தில் வெளியாகி, அதன் பின்னர், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கர்நாடக பழங்குடியின மக்களின் பூத கோலா எனும் வாக்கு சொல்பவரின் கதையக் களமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
6. ராக்கெட்ரி (Rocketry: The Nambi Effect) - Rating 8.8/10
இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பயோபிக் ஆகும். ஆனந்த் மஹாதேவன் இயக்கத்தில் மாதவன், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது.
7. மேஜர் (Major): Rating - 8.2/10
2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி எந்த இந்தியராலும் எப்போதும் மறக்க முடியாத நாளாகும். அந்தநாளில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதையும், மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ததையும் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்.
சஷி கிரண் டிக்கா இயக்கியிருந்த படத்தில் அத்வி சேஷ், சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், ரேவதி மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
8. சீதா ராமம் (Sita Ramam) - 8.2/10
அனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளனர். இனிமையான காதல் கதையை, ராணுவப் பின்னணியில் சுகமாக செதுக்கியிருந்த இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. பான் இந்தியா படமாக வெளியான சீதா ராமம், பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடியை தொட்டது.
9. பொன்னியின் செல்வன்: பாகம் ஒன்று - Rating - 7.9/10
பிரபல எழுத்தாளர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை மையமாகக் கொண்டு பொன்னியின் செல்வன்: பாகம் ஒன்று (PS: 1) திரைப்படம் வெளியானது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மணிரத்னம் தயாரிப்பில் வெளியான இந்த படத்தின் அடுத்த பாகம் 2023ம் ஆண்டு வெளியாக உள்ளது.
10. சார்லி 777 (Charlie 777) - 8.2/10
செல்லப்பிராணி பிரியர்களை மையமாக கொண்டு சார்லி 777 ,20 கோடி பட்ஜெட்டில் உருவானது. தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 10 ஆம் தேதி வெளியானது.
IMDB இன் படி, ஜனவரி 1 மற்றும் நவம்பர் 7 க்கு இடையில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள், சராசரி IMDB பயனர் மதிப்பீடு 7 அல்லது அதற்கு மேல் குறைந்தது 25,000 வாக்குகளுடன் இருப்பவை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.