வழிகாட்டும் 'கிருமி' - பட்ஜெட் சினிமாவின் சாதகமும் பாதகமும்!
சென்னை 13-வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிக்கான பிரிவில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களில் மிக முக்கியமானது 'கிருமி'.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில் 40 முதல் 50 படங்கள் மட்டுமே போட்ட முதலீட்டை திரும்ப எடுக்கின்றன. சுமார் 30 படங்கள் மட்டுமே வசூலை அள்ளுகின்றன. ஆனாலும், தமிழ் சினிமாவில் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது ஆச்சர்யம்தானே.
தமிழ் சினிமாவின் வணிக வெற்றியை பெரிய பட்ஜெட் படங்கள், சின்ன பட்ஜெட் படங்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். பெரிய பெட்ஜெட் படங்கள் என்பது பெரிய அளவில் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்வது மட்டுமல்ல. உச்சத்தில் இருக்கும் நடிகர், நடிகை, பிரபலமான நகைச்சுவை நடிகர், பிரபல தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் ஆகியோரைக் கொண்டு உருவாக்கப்படும் படமும் கூட.
குறைந்த முதலீட்டில் அதிகம் பரிச்சயம் இல்லாத நடிகர்களையோ அல்லது புதுமுகங்களையோ வைத்து உருவாக்கப்படும் படங்களை சின்ன பட்ஜெட் படங்கள் என்று சொல்வதுண்டு.
பெரிய பட்ஜெட் படங்கள் உச்ச நடிகர்களை மையமாக வைத்து எடுக்கப்படுவதால் பெரும்பாலும் கமர்ஷியல் சினிமாதான் உருவாகும். அதிலும், நாயகனின் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக சண்டைக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், குத்துப்பாட்டு என்று திணிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படும். அப்படி எடுக்கப்படும் எல்லாப் படங்களும் ரசிகனை முழுமையாக திருப்திப்படுத்துமா என்று தெரியாது. ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பெரிய நடிகர்களின் படங்கள் தோல்வியைத் தழுவுவதும் சாதாரணமாக நிகழ்கிறது.
அந்த வகையில் வசூல் ரீதியாக பார்த்தால் தோல்விப் படம், சுமாரான படம், ஹிட் படம், சூப்பர் ஹிட் படம் என சினிமாவை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
2015-ம் ஆண்டைப் பொறுத்தவரை 'பாகுபலி', 'தனி ஒருவன்', 'வேதாளம்', 'காக்காமுட்டை' போன்ற படங்களே வசூலை வாரிக்குவித்த சூப்பர் ஹிட் படங்கள் என்று சொல்லலாம்.
'ஐ', 'என்னை அறிந்தால்', 'காஞ்சனா - 2', 'பாபநாசம்', 'டார்லிங்', 'கொம்பன்', 'ஓகே கண்மணி', 'இன்று நேற்று நாளை', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', '36 வயதினிலே' ஆகிய படங்கள் நல்ல வசூல் செய்த ஹிட் படங்களாக அமைந்தன.
'அனேகன்', 'ரோமியோ ஜூலியட்', 'மாரி', 'தூங்காவனம்', 'காக்கி சட்டை' ஆகிய படங்கள் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல் ஓரளவு வசூலைத் தந்தன.
சூர்யா நடித்த 'மாஸ்', விக்ரம் நடித்த '10 எண்றதுக்குள்ள', கமல் நடித்த 'உத்தமவில்லன்', விஜய் நடித்த 'புலி' போன்ற படங்கள் வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவின.
போட்ட முதலுக்கு மோசமில்லாமல், இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளார்கள் ஆகியோருக்கு நல்ல பெயரையும், போதிய லாபத்தையும். கொடுத்த 'குற்றம் கடிதல்', 'கிருமி', ‘மாயா' 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'கள்ளப்படம்', ஆகிய படங்கள்தான் அதிக கவனம் ஈர்த்துள்ளன.
உண்மையை சொல்லப்போனால் சின்ன பட்ஜெட் படங்கள் தான் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களைக் காப்பாற்றுகின்றன. எப்படி என்கிறீர்களா?
ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் படங்கள் என்றால் ஓர் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ஒரு படம் வெளிவரும். அதிகபட்சம் மூன்று படங்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. மொத்தமாகப் பார்த்தால் ஒரு வருடத்துக்கு 52 வாரங்கள் வருகின்றன. அதில் 15 வாரங்களைத் தவிர்த்துப் பார்த்தாலும் 37 வாரங்களில் சின்ன பட்ஜெட் படங்கள்தான் வெளிவருகின்றன. இப்போது வரும் படங்களின் ஆயுள் மூன்று வாரங்களைத் தாண்டுவதே அரிது. அப்படிப் பார்த்தால் சின்ன பட்ஜெட் படங்கள்தான் திரையரங்க உரிமையாளர்களின் முதுகெலும்பாக உள்ளது.
ரசிகர்கள் இப்போது பெரிய ஹீரோ படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் தான் வேண்டுமென்று கேட்பதில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களையே விரும்பிப் பார்க்க வருகின்றனர். அதனால்தான் 'காக்காமுட்டை', 'குற்றம் கடிதல்', 'கிருமி' போன்ற படங்களை சினிமா உலகம் கொண்டாடுகிறது.
பெரிய பட்ஜெட் படங்கள் வசூலால் சின்ன படமாகி வருகிறது. சின்ன பட்ஜெட் படங்கள் வசூலால் பெரிய படமாகிறது. இந்த தருணத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் எடுப்பது புத்திசாலித்தனமான முடிவுதான். அதே சமயத்தில் அதில் இருக்கும் சிக்கலையும் உணர வேண்டியது அவசியம்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செப்டம்பர் 2015-ல் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில்… ''இந்த ஆண்டில் 8 மாதங்களில் இதுவரை 103 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரிய பட்ஜெட் படங்கள் 23, மீடியம் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் 80 அடங்கும். இவற்றுக்காக ஆன மொத்த தயாரிப்பு செலவு ரூ.750 கோடியாகும். இதில் 90 சதவிகிதத்தினர் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளனர்.
எனவே, சின்ன பட்ஜெட் படங்களை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அணுகாமல் சரியாக அணுக வேண்டியது அவசியமாகிறது.
செலவுகளைச் சுருக்கி படத்தின் தரத்தை உயர்த்துவதுதான் சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவதற்கான நேர் வழி. அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, கதை தட்டுப்பாடு இல்லாத, அதே நேரத்தில் எந்த தொய்வையும் ஏற்படுத்தாத சமரசத்துக்கு உட்படாமல் படமாக்கலாம். அதற்கு 'காக்காமுட்டை', 'குற்றம் கடிதல்', 'கிருமி' ஆகிய படங்கள் நல்ல உதாரணங்கள்.
ஒரு கோடிக்குள் தயாரிக்கப்பட்ட 'காக்கா முட்டை' திரைப்படம் 10 கோடி வசூலை அள்ளியது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதன் மூலம் 5 கோடி லாபம் கிடைத்தது.
5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'கிருமி' படம் முதலீட்டை திரும்ப எடுத்துவிட்டது. இதுகுறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராஜேந்திரன் கூறுகையில், 'டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி படத்தை திரையிட்டனர். இன்னும் மூன்று சர்வதேச திரைப்பட விழாக்கள் வர உள்ளன. அதிலும் கிருமி தேர்வாகும் என எதிர்பார்க்கிறோம். தொலைக்காட்சி உரிமை இன்னும் விற்கவில்லை என்பது உண்மைதான். விஜய் டிவி, ஜெயா டிவி ஆகிய இரு சேனல்களிலும் பேசிக்கொண்டு இருக்கிறோம். தொலைக்காட்சி உரிமையை விற்றுவிட்டால் தயாரிப்பாளருக்கு லாபம்தான்'' என்றார்.
'கிருமி' கதைக்கரு:
உன் வேலையை மட்டும் பார், அடுத்தவர்கள் வேலையில் தலையிடாதே, பிரச்சனையை தீர்க்க முடியும் என்று தெரிந்த பிறகு அதில் இறங்கி களம் காண்பது மட்டும் வீரம் அல்ல. தேவையில்லாத பிரச்சினையில் இருந்து விலகிச் செல்வதும் வீரம்தான். கண்கூடாகப் பார்க்கிற, பரிச்சயமான நபர்களின் வாழ்க்கைதான் கதைக்களம். ஆனால், அதில் நமக்குத் தெரியாத இருட்டு பக்கங்களையும் பதிவு செய்தது.
திரைக்கதை நேர்த்தியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் இரு சக்கரவாகனங்களை அகற்றும் கதிர் ஒரு கட்டத்தில் போலீஸ் ஃஇன்பார்மராக மாறுவது. அதனால் ஏற்படும் வளர்ச்சி, பிரச்சினைகள், முடிவு என்று தெளிவான வடிவமைப்பை 'காக்காமுட்டை' மணிகண்டனும், இயக்குநர் அனுசரணும் கையாண்டிருக்கிறார்கள்.
’மதயானைக்கூட்டம்’ படத்தில் நடித்த கதிரின் இரண்டாவது படம் 'கிருமி'. ஆனால், கதாபாத்திரத்துக்காக செதுக்கிய விதத்திலும், ரேஷ்மி, சார்லி போன்ற பரிச்சயமான முகங்களை நடிக்க வைத்தது புத்திசாலித்தனத்திலும் இயக்குநர் கவனிக்க வைக்கிறார்.
'கிருமி' இயக்குநர் அனுசரண் அப்படத்தின் எடிட்டரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது. 'கிருமி' குறித்துப் பேசியபோது,
''நான் ரசிகனாகத்தான் படத்தை எடுத்தேன். ரசிகன் என்ற மனநிலையில்தான் அந்த கிளைமாக்ஸ் வைத்தேன். விமர்சனங்களில் பொருத்தமான கிளைமாக்ஸ் என்று பாராட்டியதில் மகிழ்ச்சி.
என்ன தேவைக்காக படம் இயக்கினேனோ அந்த நோக்கமும், தேவையும் மிகச் சரியாக நிறைவேறியது. தற்போது அடுத்த படத்துக்கு கதை எழுதி வருகிறேன். இன்னும் நடிகர்கள் பற்றி யோசிக்கவில்லை. 'காக்காமுட்டை' மணிகண்டனின் 'குற்றமே தண்டனை' படத்துக்கு எடிட்டிங் முடித்துவிட்டேன். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஆண்டவன் கட்டளை', கதிர் நடிக்கும் 'சிகை' ஆகிய இரு படங்களுக்கும் நான் தான் எடிட்டர், இந்த வேலைகள் முடிந்த பிறகு படம் இயக்குவேன்'' என்றார்.
'காக்காமுட்டை', 'கிருமி' ஆகிய படங்களை மாதிரியாகக் கொண்டு சின்ன பட்ஜெட் படங்களை இப்படி வடிவமைக்கலாம்.
- தேவையான முதலீடு
- நல்ல கதை, திரைக்கதை, வசனம்
- தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இருத்தல்
- பரிச்சயமான முகங்கள் அல்லது புதுமுகங்கள்
சாதகங்கள்:
- குறைந்த முதலீட்டில் முடித்துவிடலாம். படைப்பின் நேர்த்தியைக் கொண்டு தொலைக்காட்சி உரிமைக்கு விற்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.
- தமிழக திரையரங்குகளில் சில நாட்களின் வசூலை முதலீட்டை எடுத்துவிடலாம்.
- இசை உரிமையை சில லட்சங்களில் விற்கலாம்.
- எப்எம்எஸ் எனும் வெளிநாட்டு உரிமையாக சில கோடிகளுக்கு விற்கலாம்.
- விருதுகளுக்கு தேர்வானால் திரையிடப்படுவதோடு, பணமும் கிடைக்கும்.
பாதகங்கள்:
- சுய தேவைகள், விருப்பங்களுக்காக காமோ சாமோ டைட்டில் வைக்கக்கூடாது.
- பொருத்தமும், தகுதியும் இல்லாத அண்ணன் மகன், தம்பி மகளை நடிக்க வைத்து புகழ் தேட நினைக்கக்கூடாது.
விளம்பரம்:
பெரிய பட்ஜெட் படங்களுக்கு புரமோஷன்கள், விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வார்களே. சின்ன பட்ஜெட் படங்களுக்கு என்ன செய்வது? என்று யோசிக்கத் தேவையில்லை.
இப்போது இணையதளங்களில் எல்லாப் படங்களுக்கும் ஒரே மாதிரி முக்கியத்துவம் தருகிறார்கள். மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூபில் போதுமான விளம்பரங்களை செய்யலாம்.
இந்த மாதிரியைப் பின்பற்றி எடுக்குப்படும் படங்கள் தரமான படைப்பாகவும், வசூல் ரீதியாகவும் கவனத்தை ஈர்க்கும்.
கிருமி திரைப்படம் ஜன.7 ஆம் தேதி ரஷ்யன் கலாச்சார மையத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு திரையிடப்படுகிறது. இதுவரை இப்படத்தை பார்த்திராதவர்கள் அங்கு சென்று கிருமியை ரசிக்கலாம்...