ஒரு ஆண்டில் 29 மில்லியன் தோசைகள்: 447 தோசை ஆர்டர் செய்து 'சாம்பியன்’ ஆன தோசை பிரியர்- Swiggy-யின் ருசிகர ஆய்வு!
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஸ்விக்கி மூலமாக சுமார் 29 மில்லியன் தோசைகளை ஆர்டர் செய்துள்ளனராம் இந்திய மக்கள். இதில், கோவையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் மட்டும் 447 தோசைகளை ஆர்டர் செய்து, ‘தோசை சாம்பியன்’ஆக அசத்தியிருக்கிறார்.
ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி 'உலக தோசை தினம்' கொண்டாடப்படுவதையொட்டி, கடந்த ஓர் ஆண்டில் ஸ்விக்கி மூலம் தோசைப் பிரியர்கள் எவ்வளவு தோசைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர் என்ற ருசிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளது ஸ்விக்கி.
தோசைக் காதலர்கள்
ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தில் மூன்று தோழிகள் பேசிக் கொள்ளும் காட்சி ஒன்றில், 'ஒருத்தருக்கு 6 தோசைன்னா, வீட்ல மொத்தம் ஏழு பேர்.. அப்போ இந்த 30 வருஷத்தில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 400 தோசை சுட்டுக் கொடுத்திருக்கேனா?' என ஒருவர் வியந்து பேசுவார். உடனே இரண்டு பேர் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர், "அப்போ நான் இரண்டரை லட்சம் தோசைகள் சுட்டிருப்பேன்...'' எனக் கூறுவார்.
ஆம், நம் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கேட்டாலும் இப்படி பல லட்சங்களில் தொசை சுட்ட பதில் வரக்கூடும். அந்தளவிற்கு தென்னிந்தியாவில் தோசைப் பிரியர்கள் அதிகம். அதிலும், வீட்டில் என்னதான் மொறுமொறுவென தோசை சுட்டுக் கொடுத்தாலும், ஹோட்டல் தோசைகளை அடித்துக் கொள்ள முடியாது. அதிலும், இப்போது ஸ்விக்கி போன்ற உணவுத் தளங்கள், சுடச்சுட சாப்பாட்டை நாம் விரும்பி கேட்கும் கடைகளில் இருந்து வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்க, கேட்கவா வேண்டும் தோசைப் பிரியர்களுக்கு.
’இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது..’ என கடந்த ஒரு ஆண்டில் மட்டும், சுமார் 29 மில்லியன் தோசைகளை ஸ்விக்கியில் ஆர்டர் செய்து, வாங்கிச் சாப்பிட்டு அசர வைத்துள்ளனர் தோசைப் பிரியர்கள். இந்தத் தகவலை ஸ்விக்கியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தோசை தினம்
ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி ’உலக தோசை தினம்’ ஆகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கடந்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி முதல் இந்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி வரை ஸ்விக்கியில் எத்தனை தோசைகள் ஆர்டர் செய்யப்பட்டன என்ற ருசிகரமானத் தகவலை பிரபல உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 2023 முதல் பிப்ரவரி 2024 வரை ஸ்விக்கி கணக்கில் எடுத்துக் கொண்ட அந்த ஒரு ஆண்டில், காலைச் சிற்றுண்டி நேரத்தில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு 122 தோசைகளை ஆர்டர் செய்து அசத்தியுள்ளனர் நம் தோசை பிரியர்கள். இது நம் நாடு முழுவதும் தோசைக்கு எவ்வளவு வரவேற்பு உள்ளது என்பதைக் காட்டுவதாக ஸ்விக்கி ஆச்சர்யம் தெரிவித்துள்ளது.
பெங்களூருதான் டாப்
இந்தியா முழுவதுமே தோசைப் பிரியர்கள் நிறைந்திருந்தாலும், குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் இருந்து கடந்தாண்டு அதிகமான தோசை ஆர்டர்கள் குவிந்ததாகக் கூறுகிறது ஸ்விக்கி.
அதிலும், குறிப்பாக பெங்களூரு தான் தோசை பிரியர்களின் தலைநகரம் என்கிறது இந்த தரவு. ஏனென்றால் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களைவிட, பெங்களூருவில் மட்டும் இரண்டு மடங்கு தோசைகளை ஆர்டர் செய்துள்ளனர் .
மசால் தோசையின் மகிமை
இந்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ள மற்றொரு ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், இதுவரை பட்டர் பரோட்டோ ரசிகர்களாக இருந்த சண்டிகர், தற்போது மசால் தோசை பிரியராக மாறி இருக்கிறது என்பதுதான்.
மேற்கூறிய நகரங்கள் மட்டுமின்றி, ராஞ்சி, கோவை, புனே மற்றும் போபாலிலும் கடந்தாண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் தோசையும் ஒன்றாக உள்ளது.
கோவையைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர், கடந்தாண்டு மட்டும் 447 தோசைகளை ஆர்டர் செய்துள்ளார். இவருக்கு ‘தோசை சாம்பியன்’ என குறும்பாக பட்டம் கொடுத்துள்ளது ஸ்விக்கி.
சாதாரண நாட்கள் மட்டுமின்றி ரம்ஜான், உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போன்ற தருணங்களிலும், மக்கள் அசைவத்தை ஒதுக்கி அதிகமாக சைவ உணவுகளை ஆர்டர் செய்யும் நவராத்திரி நாட்களிலும், அதிகம் விரும்பி ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் தோசை இரண்டாவது இடத்தில் உள்ளதாக ஸ்விக்கி கூறுகிறது.
வித்தியாசம் காட்டிய ஹைதராபாத்
மதிய நேரத்தைவிட காலை மற்றும் இரவு நேரங்களில் தோசையை மக்கள் விரும்பி வாங்கிச் சாப்பிட்டதாக இந்த ஆய்வு கூறுகிறது. அதிலும், குறிப்பாக சென்னை மக்கள் இரவு நேர உணவாக தோசையை அதிகம் ஆர்டர் செய்துள்ளனர். ஆனால், ஹைதராபாத் மக்களோ சற்று வித்தியாசமாக காலையும் இல்லாமல், இரவும் இல்லாமல், தங்களது ஸ்நாக்ஸ் டைம் உணவாக வாங்கிச் சாப்பிட்டுள்ளனர்.
பிளைன் தோசை, செட் தோசை, ஆனியன் தோசை மற்றும் பட்டர் மசாலா தோசை போன்றவை தோசைகளில் மக்களுக்கு பிடித்தமானவைகளாக இருந்தாலும், இந்தப் பட்டியலில் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா முழுவதும் அதிகமானோர் ஆர்டர் செய்த தோசை என்ற பெருமையை மசாலா தோசை பெற்றுள்ளது.
இத்தனை விதங்களா?
மக்களின் மாறி வரும் ரசனையைக் கருத்தில் கொண்டு, ஹோட்டல்களும் தோசையில் பல புதுமைகளைப் புகுத்தி வருகின்றன.
அந்த வகையில், மேற்கூறிய தோசை வகைகளோடு தற்போது சாக்லேட் தோசை, பாவ் பாஜ்ஜி நூடுல்ஸ் பாலக் தோசை, செஸ்வான் சாப் சூய் ஸ்பெஷல் தோசை, தில்குஷ் தோசை, லேஸ் தோசை, அமெரிக்கன் சாப்ஷி தோசை வித் பன்னீர் என பழமையோடு புதுமையையும் புகுத்தி தயாரிக்கப்படும் விதவிதமான தோசைகளையும் விரும்பி வாங்கி மக்கள் சாப்பிடுவதாக ஸ்விக்கியின் இந்த அறிக்கைக் கூறுகிறது.
’அண்ணே பூவ பூவுனும் சொல்லலாம்.. புய்ப்பம்னும் சொல்லலாம்.. இதோ நீங்க சொல்ற மாதிரி புஷ்பம்னும் சொல்லலாம்..’ என்பது மாதிரி.. தோசையை என்ன பேர் சொல்லி அழைத்தால் என்ன.. அது எப்போதுமே நமக்குப் பிடித்த தோசைதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது ஸ்விக்கியின் இந்த ஆய்வு.