தோல்வியில் இருந்து பாடமும், ஊக்கமும் பெற்ற பெண் தொழில் முனைவர் அன்ஷுல்
தொழில்முனைவில் ஈடுபடுபவர்கள் தோல்வியை கண்டு அஞ்சவும் கூடாது; துவண்டுவிடவும் கூடாது. இதற்கு அன்ஷுல் கந்தேல்வால் சரியான உதாரணம். இரண்டு முறை தோல்வியை தழுவிய பிறகு அவர் வெற்றியை சுவைத்திருக்கிறார். செயலி உருவாக்கத்திற்கான ஸ்டூடியோ மாதிரியாக விளங்கும் அவரது ஸ்டார்ட் அப் நிறுவனமான அப்சைடு9 (Upside9) உருவாக்கியுள்ள பல செயலிகள் வருவாயை பெற்றுத்தரும் என்று அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். அப்சைடு9 நிறுவன செயல்பாடு பற்றி விவரிக்கும் முன் அவர் தொழில்முனைவில் தான் கற்ற பாடங்களை விவரிக்கிறார்.
2006 ல் பொறியியல் படிப்பை முடிந்த அன்ஷுல் பெங்களூருவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றத் துவங்கினார். ஆனால் அவரது மனதில் தொழில்முனைவு கனவு பலமாக இருந்தது. பணியின் போது பேசிக்கொண்டிருந்த போது இணையம் மூலம் பாடம் நடத்த முடிந்தால் கணித வகுப்புகளுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அவரிடம் நண்பர்கள் தெரிவித்தனர். “எனக்கு கணிதத்தில் ஆர்வம் இருந்ததால் நானும், நண்பர் ஒருவரும் சேர்ந்து அரட்டை அடிப்படையில் பாடம் நடத்தும் இபடை.காம்(Epadai.com) இணைய நிறுவனத்தை துவக்கினோம் என்கிறார் அன்ஷுல்.
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புகளுக்கான என்.சி.இ.ஆர்.டி கணித பாட புத்தகத்தை தனது இணையதளத்தில் தொகுத்து அளித்தவர், மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பயிற்சி அளிக்க தீர்மானித்திருந்தார். இந்த இணையதளம் மூலம், ஒரு அத்தியாயம் ரூ.250 எனும் கட்டணத்தில் நேரிடையான பாடங்களும் அளிக்கப்பட்டன. அனைத்து பார்முலாக்களை எம்பி3 கோப்பாக டவுண்லோடு செய்து கொள்ளும் வசதியையும் அளித்தார். பெங்களூருவில் உள்ள நான்கு பள்ளிகளுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் சந்தேகங்களை தீர்ப்பதற்காக பாடங்களின் ஒலிப்பதிவையும் இடம்பெறச் செய்திருந்தார். ஆனால் அவர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
”பகலில் பணியாற்றிவிட்டு மாலை 5 மணிக்கு பிறகு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தேன்” என்று இந்த அனுபவம் பற்றி கூறுகிறார் அன்ஷுல். இரண்டு ஆண்டுகள் மட்டுமே இப்படி தொடர முடிந்தது. பணியாற்றியபடி ஒரு ஸ்டார்ட் அப்பை நடத்தும் சுமை அவரை அழுத்தியது. இந்த அனுபவம் இரண்டு முக்கிய பாடங்களை கற்றுத்தந்தாக அவர் கூறுகிறார்;
- வர்த்தக மாதிரி வெற்றிகரமாக செயல்படும் போது, வேலையை விட்டுவிட்டு ஸ்டார்ட் அப்பில் முழுவதும் கவனம் செலுத்த வேண்டும்.
- ஒரு திறமை வாய்ந்த குழுவை உருவாக்க வேண்டும்.
“நன்றாக வளர்ந்து கொண்டிருந்த நிலையில் பங்குதாரர் பாதியில் விலகிக் கொண்டார். என்னால் மட்டும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ள முடியவில்லை” என்கிறார் அன்ஷுல். இதன் விளைவாக 2009 ல் இணையதளம் மூடப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் தான் முதலீடு செய்திருந்தார். பெரிய இழப்பு இல்லை என்றாலும் நேரம் மற்றும் முயற்சி வீணானது. ஆனால் அதைவிட வருத்தமான விஷயம் இந்த எண்ணத்தை அவரால் முழு அளவுக்கு கொண்டு செல்ல முடியாமல் போனது. இதே எண்ணத்தை டியூட்டர்விஸ்டா செயல்படுத்தி, 2011 ல் 127 மில்லியன் டாலருக்கு பியர்சன் பி.எல்.சி நிறுவனத்திடம் விற்றுவிட்டது.
ஆனால் அன்ஷுல் தொழில்முனைவு எண்ணத்தை விட்டுவிடவில்லை. ஐடி சேவை நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் 2013 ல் உணவு டெலிவரி தொடக்க நிறுவனத்தை துவக்கினார். அலுவலக ஊழியர்களுக்கு நள்ளிரவு நேரத்தில் உணவை டெலிவரி செய்யும் நோக்கத்தை மையமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டது. இரண்டு மாதங்களிலேயே இதற்கான செலவு அதிகமாக இருக்கும் என தெரிந்து கொண்டார். கையில் இருக்கும் சேமிப்பு எல்லாம் ஆறு மாதங்களில் தீர்ந்துவிடும் என்றும் உணர்ந்தார்.
இந்தத் தோல்வியும் இரண்டு முக்கிய பாடங்கள் கற்றுக்கொடுத்தது;
- எல்லா ஐடியாக்களையுமே வளர்த்தெடுக்க முடியாது மற்றும் ஒரு சில ஐடியாக்களை வளர்த்தெடுக்க அதிக அளவில் முதலீடு தேவை.
- வாடிக்கையாளர் நம்மிடம் ஒட்டிக்கொள்வது மிக முக்கியம். சராசரியாக ஒரு வாடிக்கையாளர் மாதத்திற்கு ஐந்து முறையேனும் ஆர்டர் செய்ய வேண்டும்.
இந்த அனுபவத்திற்குப்பிறகு அவர் ஆறு மாதங்களுக்கு ராஜஸ்தானில் பயணம் மேற்கொண்டார். ஐடி சேவைத்துறையில் தனது எட்டு ஆண்டு கால அனுபவத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அப்போது தோன்றியது. அதன் பயனாக தான் முழு நேர தொழில்முனைவோராக மாறி செயலிகளுக்கான ஸ்டூடியோவான அப்சைடு9 நிறுவனத்தை துவக்கினார்.
வெற்றிப்பயணம்
தோல்வி பாடங்களை கற்றுத்தருவதோடு ஒருவரது திறனையும் பட்டைத்தீட்டுகிறது. 2014 வாக்கில் செயலிகள் எல்லோருக்கும் தேவை என புரிந்துவிட்டது. நல்ல செயலி அனுபவத்தை அளிக்க அதை உருவாக்கும் பொறியாளர்கள் தேவை என்பதும் புரிந்தது. அன்ஷுல் ஜெய்பூரில் ஸ்டூடியோ அமைத்து சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு செயலிகளை உருவாக்கித்தர ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் பொறியாளர்களை நியமித்துக்கொண்டார். அமெரிக்காவில் உள்ள வர்த்தகங்களுக்குத் தேவையான செயலிகளை உருவாக்கிக் கொடுத்தார். அவர் ரூ.15 லட்சம் முதலீடு செய்திருந்தார். ஆரம்பத்தில் இருந்தே வருவாய் வரத்துவங்கியது. வாடிக்கையாளர்களிடம் செயலிகளின் மைல்கல் அடிப்படையில் அல்லது முன்கூட்டியே ஒரு தொகையை வசூலித்தார். அதே நேரத்தில் தனது சார்பிலும் செயலியை அறிமுகம் செய்ய நினைத்தார். தனது சேவை மூலம் கிடைத்த பணத்தில் சொந்த எண்ணத்திலான செயலியை உருவாக்கத் தீர்மானித்தார்.
தனது குழுவினருடன் விவாதித்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்ன வகையான சேவை தேவை என ஆலோசித்தார். இதன்படி அவர் உருவாக்கி முதல் செயலி கரோசெல்(Karosell ) பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதற்கான மேடையாக அமைந்தது. ஒரு மாதம் ஆன நிலையில் இந்த செயலியை சந்தைப்படுத்த பணம் திரட்டி வருகின்றனர்.
போட்டி சூழல்
பயன்படுத்திய பொருட்களின் விற்பனை கார்கள் மற்றும் மின்னணு பொருட்களில் அதிகம் உள்ளது. மற்ற பிரிவுகளில் வளர்ச்சி அத்தனை விரைவாக இல்லை.”கரோசெல் புத்தகம் மற்றும் சேகரிக்க கூடிய பொருட்கள் போன்றவற்றி கவனம் செலுத்தும்” என்கிறார் அன்ஷுல். இந்தியாவில் இந்த பிரிவு இன்னமும் கவனிக்கப்படாமல் இருக்கிறது என்றும் சொல்கிறார்.
டெக்னோபார்க் தகவல்படி இந்தியாவில் பேஷன் துணைப்பொருட்களுக்கான சந்தை 3.4 பில்லியன் டாலராக கருதப்படுகிறது. பயன்படுத்திய மின்னணு சாதனங்களை விற்பதில் கிரிஸ்டஸ்ட் முன்னிலை வகிக்கிறது. வெர்டெக்ச் வென்சர்ஸ், கிலினர் பெர்கின்ஸ் கால்பீல்ட் மற்றும் பேயர்சிடம் இருந்து இந்நிறுவனம் 40 மில்லியன் டாலர் திரட்டியுள்ளது. எனவே இந்தப் பிரிவில் அப்சைடு9 நிறுவனமும் நிதி திரட்ட முயற்சிக்கலாம்.
அப்சைடு9 பொருட்களின் தரத்திற்கு உறுதி அளிக்க விரும்புகிறது. இதற்காக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பொருட்களின் தரத்தை பரிசோதிக்க உள்ளது. கரோசெல் மூலம் வாங்குபவர்கள் விற்பவர்களுடந் நேரிடையாக பேரம் பேசலாம். இவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகள் தனிப்பட்ட தேர்வுக்கு ஏற்ப பொருட்களை வழங்க உதவும்.
“இது போன்ற வர்த்தகங்கள் தரத்தை உறுதி செய்வது மற்றும் வாடிக்கையாளர் சேவையை நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் வஜீர் அட்வைசர்ஸ் நிறுவனர் ஹர்மீந்தர் சஹானி.
ஆனால் பெரிய அளவில் வளர்ச்சி அடைவதே மிகப்பெரிய சவால் என்கிறார் அன்ஷுல். செயலி சேவைகள் வருவாயை ஈட்டித்தந்தாலும் மார்க்கெட்டிங்கில் கவனம் செலுத்த நிதி தேவை. வாடிக்கையாளர்கள் பயன்படுத்திய பொருட்களை வாங்க முன்வர கரோசெல் நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். பொருட்கள் போலியாகவோ, சேதம் அடைந்ததாகவோ இருக்கக் கூடாது.
“வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொண்டால் இந்த வர்த்தகத்திற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் இது ரிஸ்கானது. தொழில்முனைவோரின் சந்தையை உருவாக்கும் ஆற்றல் சார்ந்தது “ என்கிறார் ஆரின் கேபிட்டல் நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ் பை.
தொழில்முனைவு என்பதே தொடர்ச்சியாக கற்றுக்கொள்வது தான் எனும் பாடத்தை அன்ஷுல் கற்றிருக்கிறார். ரிஸ்கில் அவர் ஆர்வம் கொண்டிருக்கிறார். இல்லை என்றால் எப்படி தொழில்முனைவோராவது? அப்சைடு9 நிறுவனத்தின் முதல் செயலி ஜெய்பூர் மற்றும் தில்லி தவிர மற்ற நகரங்களிலும் களமிறக்கப்பட வேண்டும். அதன் பிறகு நிறுவனம் எளிதாக நிதி திரட்டலாம். தோல்வி கண்டு துவளாத அன்ஷுலின் தன்மை இதற்கு நிச்சயம் கைகொடுக்கும்.
ஆக்கம் விஷால் கிருஷ்ணா | தமிழில் சைபர்சிம்மன்
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
இது போன்ற பெண்களின் தொழில்முனைவு தொடர்பு கட்டுரைகள்:
கர்ப்ப கால பெண்களுக்கு ஆடைகள் தயாரிக்கும் ஷ்ரத்தாவின் ‘Mamacouture'
நீங்கள் சரியான பாதையில் செல்ல ஊக்கம் தரும் கல்யாணியின் தொழில்முனைவுக் கதை!