“எனது நடுத்தர வர்க்கப் பின்புலம்தான் உறுதுணை!” - மனம் திறக்கும் சுந்தர் பிச்சை
கூகுள் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாகத் திகழ்பவர். இவர் தான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தன் இளம்பிராய வாழ்க்கையை நினைவுகூர்ந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
கூகுள் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாகத் திகழ்பவர். தான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு பேட்டியில் தன் இளம்பிராய வாழ்க்கையை நினைவுகூர்ந்தபோது தெரிவித்தார். ஒரு தொலைபேசி சாதனத்துக்காக 5 ஆண்டுகள் காத்திருந்தோம் என்கிறார் இந்த டெக் ஜீனியஸ்.
சென்னையில் வளர்ந்த சுந்தர் பிச்சை காரக்பூர் ஐஐடியில் பட்டம் பெற்றார். பிறகு அமெரிக்கா சென்றார். தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி நினைவுகூர்ந்த சுந்தர் பிச்சை, தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தான் இன்றும் கடைப்பிடிக்கும் பணி நெறிமுறைகள் தனது நடுத்தர வர்க்க வாழ்க்கையின் பின்னணியில் இருந்து பெறப்பட்டவையே என்றார்.
“எனது பெற்றோர் எப்போதுமே கற்றல் மற்றும் அறிவுத் திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறவர்கள். அவர்களது இந்த வலியுறுத்தல் எப்போதும் எனக்குள் மிக ஆழமாக பதிந்துள்ளது. கற்றல் மற்றும் அறிவுத் திறனுக்கான இந்த தேடலை நான் உணரத் தொடங்கினேன். இப்போது நான் பணியாற்றும் கூகுள் நிறுவனமும் கற்றல் மற்றும் அறிவு பற்றியதே.
நான் வளர்ந்தது நடுத்தர குடும்பத்தில்தான். கேட்ஜெட்களின் வருகைகள் மூலம் வாழ்க்கையை நான் பார்க்கத் தொடங்கினேன். தொலைபேசி சாதனத்துக்காக 5 ஆண்டுகள் காத்திருந்தோம். அது எண்ணைச் சுழற்றும் டயல் போன். ஆனால் தொலைபேசி எங்கள் வாழ்க்கையையே மாற்றியது. முதலில் தொலைக்காட்சிப் பெட்டி வீட்டுக்கு வந்ததும் நினைவிருக்கிறது. உடனேயே விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க முடிந்தது.
நான் பள்ளிக்கு வெகுதூரம் சைக்கிளில்தான் செல்வேன். அதில் கியர் இல்லை. அந்த சைக்கிளில்தான் மேட்டில் செல்ல வேண்டும். பல வருடங்களுக்குப் பிறகு கியர்களுடன் கூடிய சைக்கிள் கிடைத்தது. நான் ஆஹா! என்ன ஒரு மாற்றம், என்ன ஒரு வேறுபாடு என்று வியந்தேன்.
நான் ஒருபோதும் தொழில்நுட்பத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை. தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் நான் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றார் சுந்தர் பிச்சை.
மேலும், சுந்தர் பிச்சை செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும் கூகுள் தேடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறும்போது, “கூகிள் செயற்கை நுண்ணறிவை அணுகும் விதம் புதுமைகளுக்கு உந்துவிசையாக இருக்கும். இது சந்தையில் தனிப்பட்ட தெரிவுக்கு வாய்ப்பளிக்கிறது. நான் அதைப் பற்றி அப்படித்தான் நினைக்கிறேன். அனைவருக்கும் இது சவால்தான். ஆனால் வாய்ப்பும் கூட.
செயற்கையான விஷயங்கள் அதிகம் புழங்கி வரும் டிஜிட்டல் உலகில் உண்மையானது எது என்று எப்படி அறிவீர்கள்? அடுத்த பத்தாண்டு காலக்கட்டத்தில் தேடலை வரையறுக்கும் ஒரு பகுதியாக இந்த விஷயமே இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்றார் சுந்தர் பிச்சை.