அழுக்குத் துணி தொல்லை இனிமே இல்லை: பளிச் சலவை, நீட் ஐயர்ன் செய்து உங்கள் துணிகள் வீடு தேடி வரும்...
நம் துணிகளை பார்த்து பார்த்து துவைக்கவும், ஐயர்ன் செய்ய தேடி அலையவும் இனி தேவையில்லை. சலவை மற்றும் ஐயர்ன் செய்து 48 மணி நேரத்தில் உங்கள் வீட்டிலேயே டெலிவரி செய்து விடுகிறது Wassup.
ஹோட்டல்கள், நிறுவனங்களுக்கு சலவைத் தொழில் சேவையை செய்து வந்த Wassup வெகுஜன மக்களுக்கு பயன்தரும் விதமாக லான்ட்ரோமேட் சேவையை தொடங்கியுள்ளது. சென்னையில் தொடங்கப்பட்டுள்ள முதல் மையம் வாடிக்கையாளர்களுக்கு சலவை, ஐயர்னிங் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்குகிறது.
மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வங்கியில் பணமும் கையில் ஸ்மார்ட் போனும் இருந்தால் போதும் அனைத்தையும் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து வாங்கி விடலாம். மளிகை சாமான்கள், காய்கறி, ஆடைகள், ஆக்சசெரிஸ் என எல்லாவற்றிற்கும் செயலி மேல் செயலி கொட்டிக்கிடப்பதும் மக்களுக்கு வசதியான விஷயமே. இருப்பினும் ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவருமே அலுவலகம் செல்வோர்கள் என்றால் அவர்களுக்கு வரும் பிரதான பிரச்சனை துணி துவைத்தல்.
என்னதான் வாஷிங் மெஷின் இருந்தாலும் சில ஆடைகளுக்கு பிரத்யேக கவனம் தேவை. சலவைக்கு ஒரு ஆளிடம், ஐயர்னிங்கிற்கு ஒரு ஆளிடம் என தெருமுக்கில் இருக்கும் டோபியிடமும், ஐயர்ன்காரரிடமும் கொடுத்து விட்டு ஒரு வாரம் நடையோ நடை என அலைய வேண்டும். அப்படி இல்லையா காலையில் அலுவலகம் போக இருக்கும் டென்ஷனில் அவர்களுக்கு போனை போட்டு துணியை எப்போது தருவார்கள் என்று ஒரு சவுண்டு விட வேண்டி இருக்கும். இப்படி சலவை, ஐயர்னிற்கு துணியை கொடுத்து வாங்குவதில் நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன.
இந்த சிக்கல்களுக்கான விடையைத் தருகிறது 'Wassup' 'வாஸப்' அறிமுகம் செய்துள்ள 'லான்ட்ரோமேட்' (Laundromat).
Wassup 2012ம் ஆண்டே சென்னை உள்ளிட்ட 5 பெருநகரங்களில் தொடங்கப்பட்ட ஒரு ஸ்டார்ட்-அப். இதுவரை 3 லட்சம் வாடிக்கையாளர்களை எட்டியுள்ள வாஸப் 600 கோடி ஆடைகளை சலவை செய்து அளித்துள்ளது. தாஸ் ஸ்டார் வென்ச்சர்ஸ் வாஸப்பிற்கு நிதி உதவி செய்துள்ளது. இது மட்டுமல்ல,
பெரிய பெரிய ஜாம்பவான்களான ஷாப்பரஸ் ஸ்டாப்பின் துணைத் தலைவர் பி.எஸ்.நாகேஷ், ஜபாங் நிறுவனர் பிரவீன் சின்ஹா, பார்க்கலேஸ் இந்திய பிரிவு முன்னாள் செயல் அதிகாரி மணி சுப்ரமணியன் உள்ளிட்டோர் வாஸப்பில் முதலீட்டாளர்களாக உள்ளனர்.
Wassup நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கியவர்கள் பாலச்சந்தர் மற்றும் துர்கா தாஸ். துர்கா தாஸ் சிலிகான் வேலி தொழில்முனைவர். ஏறத்தாழ 20 ஆண்டு கால ஸ்டார்ட் அப் அனுபவம் பெற்றவர். பாலச்சந்தர் எம்பிஏ’வில் கோல்ட் மெடல் வென்றவர். ஹை-டிசனின் முன்னாள் ரீட்டெய்ல் ஹெட்.
’வாஸப்’ உருவான விதம் பற்றி தமிழ் யுவர் ஸ்டோரியிடம் பாலச்சந்தர் கூறும் போது,
“சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்திலேயே ஹைடிசைனில் இருந்து வெளியேறினேன். துர்காவும் நானும் சேர்ந்து ரீடெய்ல் மார்க்கெட்டில் ஸ்டார்ட் அப் தொடங்க திட்டமிட்டோம். பல துறைகளை ஆராய்ந்து திட்டங்களை வகுத்தோம். இறுதியாக சலவைத் துறையில் ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கலாம் என முடிவு செய்தோம்,” என்றார்.
ஏனெனில் இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய அமைப்புசாரா தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழில் இது. மற்றொரு புறம் இந்த தொழிலுக்கான தேவை இருந்த போதும் சரியான ஆட்கள் இல்லாததால் பொலிவிழந்து வருவதை உணர்ந்தோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி ஆன்லைன் விற்பனையில் களமிறங்குகிறதோ அதைப் போல விரைவில் அவர்கள் லான்ட்ரி துறையிலும் தடம் பதிக்க இருக்கின்றனர்.
2012ல் நாங்கள் Wassup என்ற பிராண்டை தொடங்கிய போது அதிக போட்டியாளர்கள் இல்லாத சலவைத் தொழிலை மையக்கருவாக வைத்து தொடங்கினோம். எப்படி உணவு ஆர்டர்களுக்கு மக்கள் ஸ்விக்கி, சோமடோ செயலியை பயன்படுத்துகின்றனரோ அதைப் போலத் தான் லான்ட்ரி சர்வீஸ்க்காக Wassup,” என்கிறார் பாலசந்தர்.
வாஸப் தொடங்கிய காலகட்டத்தில் தாஜ் ஓபராய், மேரியட்ஸ், ஷெரட்டன், ரேடிசன் உள்ளிட்ட ஸ்டார் ஹோட்டல்களுக்கு லான்ட்ரி சர்வீஸ் செய்து வந்துள்ளது. பின்னர் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தில் நகரத்தில் ஒரு இடத்தை மையமாக வைத்து அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வாடிக்கையாளரிடம் இருந்து துணிகளை சேகரித்து எடுத்துச் சென்று சலவை மற்றும் ஐயர்ன் செய்து பின்னர் டெலிவரி செய்துள்ளனர். இந்த முறையில் செய்யும் போது வாடிக்கையாளருக்கு துணியை திருப்பிக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதோடு, கூடுதலாக செலவும் செய்ய வேண்டி இருந்தது என்கிறார் பாலச்சந்தர்.
இந்த பிரச்னைகளைக் களைந்து தொடர்ந்து வாஸப்பை அடுத்த கட்டத்தை நோக்கி அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அருகாமை லான்ட்ரி மையங்களை அமைக்க திட்டமிட்டு தோன்றிய ஐடியாவே ‘laundromat'. சென்னை சேமியர்ஸ் சாலையில் வாஸப்பின் முதல் லான்ட்ரோமேட் இம்மாதம் தொடங்கப்பட்டுள்ளது.
லான்ட்ரோமேட் சென்னையின் எப்சி கால்பந்து அணியின் ஸ்பான்சர். வீரர்களின் தங்குமிடத்திலேயே லான்ட்ரோமேட் அமைத்து அவர்களின் ஆடைகளை லான்ட்ரி சர்வீஸ் செய்து தருகிறார்கள்.
அருகாமை லான்ட்ரோமேட்களில் சிறப்பான விஷயங்கள் என்னவென்றால் ஒரே இடத்தில் வாஷிங் செய்து, உலர்த்தி, ஐயர்ன் செய்தும் கொடுக்கப்படும். வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்தும் அழுக்கு ஆடைகளை சலவைக்காக கொடுத்து விட்டு போகலாம் அதே போல தங்களின் ஆடைகள் எவ்வாறு சலவை செய்யப்படுகின்றன என்பதையும் நேரில் பார்க்க முடியும்.
நேரில் வந்து சலவைக்கு துணியை கொடுக்க முடியாதவர்கள் லன்ட்ரோமேட் இணையதளத்திலும், செயலியிலும் அல்லது இலவச டோல் எண்ணான 1800 3000 9969 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு லான்ட்ரி சேவையை பெற முடியும்.
இதில் இருக்கும் மற்றொரு சவுகரியமான விஷயம் வாடிக்கையாளருக்கு நேர விரயம் கிடையாது அழுக்குத் துணியை கொடுத்த 48 மணி நேரத்தில் சலவை செய்து நீட்டாக ஐயர்ன் செய்யப்பட்ட ஆடைகள் உங்கள் வீட்டு வரவேற்பறைக்கே வந்துவிடும் என்கிறார் பாலச்சந்தர்.
ஒரு ஆடைக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது, ஆனால் பெரும்பாலும் பட்ஜெட் பேக்குகளையே பலரும் விரும்புகின்றனர். மாதத்திற்கு எத்தனை துணிகள் என்பதற்கு ஏற்றாற் போல ரூ.1000 முதல் ரூ. 5000 வரையிலான பல வித பேக்கள் உள்ளன அவற்றையே வாடிக்கையாளர்கள் விரும்புவதாகக் கூறுகிறார் இவர்.
இந்திய லான்ட்ரி சந்தையின் மதிப்பு ரூ.2 லட்சம் கோடி, சுமார் 11.2 மில்லியன் டோபிகள் நாடு முழுவதும் இருக்கின்றனர். மிக அதிக அளவிலான அமைப்பு சாரா தொழிலாளர்களைக் கொண்ட தொழில் இது. போதிய தொழில்வாய்ப்பின்மை, தண்ணீர் பிரச்னை காரணமாக பலர் இந்த தொழிலை விட்டு போய்விடுகின்றனர், அவர்களது பிள்ளைகளையும் வேறு தொழில் அல்லது வேலைக்கு அனுப்பி விடுகின்றனர்.
எதிர்காலத்தில் 20 மில்லியன் சலவைத் தொழிலாளர்களுக்கான தேவை இருக்கிறது, அந்த அளவிற்கு வேலைவாய்ப்புகளை கொண்ட இந்தத் துறையில் தொழிலாளர்களை தக்கவைக்க வேண்டிய சூழல் உள்ளது.
’லான்ட்ரோமேட்’டில் சலவைத் தொழிலாளர்களையே பணியிலமர்த்துகின்றனர் வாஸப் குழுவினர். அதி நவீன மெஷின்களைக் கொண்டு சலவை செய்தல், உலர்த்துதல் மற்றும் ஐயர்ன் செய்தல் உள்ளிட்டவற்றை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து பயிற்சி அளிக்கின்றனர்.
இதனால் தற்போது இருக்கும் டோபிகளையாவது தக்க வைக்க முடியும். பாரம்பரியமாக சலவைத் தொழில் செய்து வருபவர்கள் சொந்தமாக ஒரு கடை போட்டு அதற்கு வாடகை கொடுத்து வேலைக்கு ஆள்வைத்து தொழில் செய்வது அவர்களுக்கு லாபகரமானதாக இருக்குமா என்பது சந்தேகமே.
லான்ட்ரோமேட்டில் பணிக்கு சேரும் டோபிகளுக்கு நவீன மெஷின்களை பயன்படுத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்து மாதத்திற்கு நிரந்தர வருமானம், தொழிலாளர் வைப்பு நிதி போன்ற பணிப் பாதுகாப்பு மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றுகிறோம் என்ற பெருமையும் கிடைக்கும். மேலும் இது போன்ற தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் போது இந்தத் துறைக்கு வேலைவாய்ப்பைத் தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார் பாலச்சந்தர்.
வாஸப் என்ற பிராண்டின் கீழ் லான்ட்ரோமேட்டை மக்களின் அவசர தேவைக்கு இருக்கும் பெட்டிக்கடைகளைப் போல கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் பாலச்சந்தரும், துர்காவும்.
அடுத்த ஓராண்டில் சென்னையில் மட்டுமே 75 முதல் 100 லான்ட்ரோமேட்களையும் தமிழ்நாட்டில் டயர் 2, டயர் 3 நகரங்களை உள்ளடக்கி சுமார் 300 லான்ட்ரோமேட்களை அமைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகின்றனர். வாஸப் நிறுவனத்தால் மட்டும் இவற்றையெல்லாம் சாத்தியமாக்கி விட முடியாது என்பதால் பிரான்சைஸி கொடுத்து இதனை செய்யவும் இவர்கள் முடிவு செய்துள்ளனர்.
வாஸப் லான்ட்ரோமேட்டில் டோபிகளுக்கான வேலைவாய்ப்பு மட்டுமின்றி தொழில் முனைவர்களையும் உருவாக்குவதாகக் கூறுகிறார் பாலச்சந்தர். லான்ட்ரோமேட்டை தமிழகம் முழுவதும் பரப்பும் விதமாக பிரான்சைஸ்களாக செயல்பட விரும்புபவர்கள் ரூ. 20 லட்சம் முதலீடு செய்தால் போதும். ரூ. 10 லட்சம் முதலீடு செய்துவிட்டு ரூ.10 லட்சம் வங்கிக் கடனாகவும் பெற்றுக் கொள்ளலாம். நிச்சயமாக அவர்களின் முதலீடு 2 ஆண்டுகளில் அவர்களுக்கு கிடைத்துவிடும் என்ற உறுதியும் தருகிறார்.
பிரான்சைஸ் பெறுபவர்கள் வெறும் மேற்பார்வையாளர்களாக மட்டும் இருக்காமல் அவர்களும் இணைந்து பணியாற்றுவதற்குத் தேவையான பயிற்சிகளையும் வாஸப் அவர்களுக்கு வழங்கும். 3 மாதத்திற்கு ஒரு முறை என இந்த பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன, இதனால் பிரான்சைஸ் ஆக விரும்புபவர்கள் வெறும் பணம் போட்ட முதலாளிகள் என்று இல்லாமல் சிறந்த தொழில்முனைவர் ஆகவும் முடியும் என்கிறார் பாலச்சந்தர்.
"